தமிழர்களின் பெருமை சிங்கப்பூர்!
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து ஆங்காங்கே தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.


ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து ஆங்காங்கே தமிழ்ப் புத்தாண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சிங்கப்பூரில் நடக்கும் நிகழ்வானது, எல்லோரையும் கவர்ந்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவின் பாரம்பரிய பெண்கள் வர்த்தக அமைப்பின் தலைவர் இராஜலெட்சுமி கண்ணப்பன் கூறியதாவது:
""இராசேந்திர சோழனின் முன்னோரான ஸ்ரீதிரிபுவனா என்பவரே சிங்கப்பூரின் முதல் அரசர் என்ற மலேசியாவின் வரலாற்றை "செய்யாரா மெலாயூ' எனும் சுவடியில் அறிய முடிகிறது. மலாயா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சோழர்களின் புகழ் ஓங்கியிருந்தது.
"சர் ஸ்டாபோர்டு ராஃபில்ஸ்' என்ற ஆங்கிலேயர் கிழக்கிந்திய வணிக நிறுவனத்துக்காக, 1819-இல் சுல்தான்களிடமிருந்து, உரிமை பெற்று சிங்கப்பூர் தீவைக் களமாக அமைத்தார்.
ஒரு நாட்டுச் செல்வங்களுக்குள் மொழியும் ஒன்றாகும். மொழியின் துணையின்றி ஒரு நாட்டவர் நாகரிகமாகவும், வசதியாகவும் வாழ்வதரிது. முன்னோர் அரும்பாடுபட்டு ஈட்டிய அறிவுச் செல்வமெல்லாம், மொழி வாயிலாகவே போற்றப்படுகிறது என்கிறார் ஞாயிறு தேவநேயப்பாவாணர்.
இதன்படி, தமிழ் மீது எனக்கு அளப்பரிய பற்றுதல். சிங்கப்பூர் தேசிய நூலகத்துடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாகவே கதை சொல்லுதல் உள்ளிட்ட இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துகிறேன்.
நான் சார்ந்த பெண்கள் அமைப்பு வாயிலாக, தமிழ் சார்ந்த விழாவை நடத்தினாலும், குழந்தைகளுக்கு நிலாசோறு, வாழை இலை சாப்பாட்டால் என்ன பயன்? என்பதை விளக்குகிறோம்.
ஏப்ரல்1 முதல் 30-ஆம் தேதி வரையில் சித்திரைத் திருவிழா நடக்கிறது. வளர்
தமிழ் இயக்கம் உள்ளிட்ட 41அமைப்புகள் இணைந்து, 48 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
"தமிழ் மொழி-2023' என்ற தலைப்பில் "அழகோடு பாமாலை', "திருக்குறள் விழா', "அழகு தமிழ் பழகு', "இந்திய மரபுடமை நிலையத்தின் தமிழில் ஒரு வழிகாட்டி சுற்றுலா', "தமிழும்-அழகும்', "திருக்குறளின் இன்சொல்வழி பயணம்', "தமிழோடுஉறவாடு- சொல் அழகு', "நாயகி- பெண்மையின் அழகு', "சொல்லைத் தாண்டி வருவாயா?', "கவியும் நாட்டியமும்', "முத்தமிழ் விழா', "சித்திரை கலை விழா', "சொற்சிலம்பம்', "தமிழ் இலக்கியத்தில் சிறு காவியங்களின் அழகு', "இன்பத் தமிழும் இளைய தலைமுறையும்', "சொற்போர்', "கண்ணல் தமிழ் கவிதை அழகு' போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஒளவையாரை இந்த ஆண்டுக்கான மையமாக வைத்துக் கொண்டு, தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகைகளில் எழுதி அதை அரசு சார்பில் அனுமதி பெற்ற இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற 17-க்கும் மேற்பட்ட இந்திய சமூகங்களின் கலாசார நிகழ்வுகள், மாணவர்கள் சார்பில் கணினி மூலமாக பொம்மலாட்டம், நவீன செல்லிடப்பேசிகளில் தமிழில் மட்டும் குறுந்தகவல் அனுப்புதல், உரையாடுதல் பயிற்சி, பல்லாங்குழி, உறியடி, களிமண் மூலமாக சிற்பங்கள் படைத்தல், ஆடுபுலி, நீளம் தாண்டுதல் போன்ற எண்ணற்ற விளையாட்டுகளும் நடைபெற்றுவருகின்றன.
விழாவில் பிற மொழி பேசுபவர்கள் பங்கேற்கும்போது, நம்முடைய கலாசார ஆடைகளையும் அணிந்தும், தமிழில் பேசி அசத்துகின்றனர்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...