சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதுமைகள் செய்ய வேண்டும்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடன இயக்குநராக முத்திரை பதித்து வருகிறார் லலிதா ஷோபி.  கமல், விஜய், விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என். டி. ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:12 am

ஜி. அசோக்


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடன இயக்குநராக முத்திரை பதித்து வருகிறார் லலிதா ஷோபி. கமல், விஜய், விக்ரம், பிரபாஸ், ஜூனியர் என். டி. ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குநராக பணியாற்றிய "சுஃபியும் சுஜாதாயும்' மலையாள படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. தற்போது 51-ஆவது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை "சுஃபியும் சுஜாதாயும்' படத்திற்காக லலிதா ஷோபி பெற்றுள்ளார்.

""மறைந்த இயக்குநர் நரணிபுழா ஷாநவாஸ் உடன் பணியாற்றிய நாள்கள் மறக்கமுடியாதவை. நான் பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கையில், இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கண்டிப்பாக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறியிருந்தனர். அது இன்று நிறைவேறியுள்ளது. கடவுளுக்கு நன்றி. கேரள மாநில அரசுக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றி'' விருது பெற்ற பூரிப்பில் இருக்கிறார் லலிதா ஷோபி.

ஆரம்ப கால அனுபவம் பற்றி....

என்னுடைய சிறிய வயதிலேயே டான்ஸராக வந்து விட்டேன். 1994-ஆம் ஆண்டு சினிமாவில் நடித்தேன். இதுவரைக்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன்..

நடன கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கிறதா?

ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் நன்றாக நடனம் ஆடியிருந்தால் அதற்கு பின்னால் ஒரு நடன இயக்குநரின் உழைப்பு இருக்கிறது. இது அந்த நடிகர்,நடிகைகளுக்கும் தெரியும். ஆனால் ரசிகர்கள் சொல்லும் போது குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் பெயரைச்சொல்லி சூப்பராக நடனம் ஆடினார்கள் என்றுதான் சொல்லுவார்கள். அது இயல்பான ஒன்றுதான். ஆனால் சம்பந்தப்பட்ட ஹிரோவோ, ஹீரோயினோ எங்களை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பாராட்டுவார்கள். இதுதான் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும்.

ஜோதிகா என்னை பற்றி பல மேடையில் பாராட்டி பேசியிருக்கிறார். நான் ராஜூ சுந்தரம் மாஸ்டரிடம் இருக்கும் போது உதவி நடன இயக்குநராக ஜோதிகாவிற்கு நிறைய படங்களில் நடனம் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். இதற்காக அவரிடமிருந்து நிறைய அன்பளிப்புகளை பெற்றிருக்கிறேன். சூர்யா என்னைப்பற்றி பெருமையாக பல மேடைகளில் பேசியிருக்கிறார். அதனால் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்வேன். மற்றவர்களுக்கு அது கிடைத்திருக்கிறதா என்றால் அது குறைவே.

ஒரு பாடலுக்கான நடன அசைவுகளையும் காட்சி அமைப்பையும் யார் முடிவு செய்வது?

இயக்குநர் ஒரு கதையின் சூழலைச்சொல்லுவார். அதற்கான பாடலைகேட்கும் போது அதற்கு இந்த வகையிலான நடனத்தை வைக்கலாம் என்று நாங்கள் யோசனை சொல்லுவோம். அதில் இயக்குநர் சொல்லும் சில விஷயங்களையும் சேர்த்து அந்த நடனத்தின் தன்மை அமையும். பரதம் கலந்தோ, கதக் கலந்தோ அமையும். இப்போது "சுஃபியும் சுஜாதாவும்' படத்தில் ஹிரோயின் அதிதிராவ் கதக் நடன கலைஞராக வருகிறார். அதனால் படத்தில் கதக் நடனத்தின் அனைத்து தன்மைகளையும் நாம் கொண்டு வரமுடியும். அதே போல ஆந்திராவில் எடுக்கப்படும் ஒரு படத்திற்கு அந்த மக்கள் எந்த மாதிரியான நடனத்தை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற நடனத்தை அமைக்க வேண்டும்.

குழு நடனத்தின் நிலை எப்படியிருக்கிறது?

இன்றைக்கு நிறைய படங்களில் பாடல்களே வைப்பதில்லை. அப்படி வைத்தாலும் அதை கதைக்களத்தோடு இருக்கும் பாடலாக வந்து விடுகிறது. படத்தின் பட்ஜெட்டை காரணமாக வைத்து பாடல்களைதான் நீக்குகிறார்கள். இதனால் நடனக்கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. அந்த காலத்தில் ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் அதில் நான்கு பாடல்கள் நடன பாடல்களாக இருக்கும். ஆனால் இன்று அப்படியில்லை. அதிலும் நன்றாக நடனம் ஆடும் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு படம் இரண்டு படமோதான் நடிக்கிறார்கள். இதனால் படங்கள் குறைகிறது. இன்னொரு பக்கம் எதார்த்த சினிமா என்கிற பெயரால் பாடல்களை யாரும் படத்தில் வைப்பதில்லை. சினிமாவில் அவர்கள் எடுக்கும் படங்களும் வெற்றி பெறுகின்றன. இதனால் பாடல்கள் இல்லாமலேயே படம் எடுத்தால் என்ன என்கிற சிந்தனை மற்றவர்க்ளுக்கும் வந்து விட்டது. இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் பாடல்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்கள். பாடல்கள் குறைந்து கொண்டே வந்தால் நடனக்கலைஞர்களின் வாழ்க்கை ரொம்பவும் கஷ்டம்தான்.

இயக்குநர் ஆகும் திட்டம்...

கண்டிப்பாக நான் படங்கள் இயக்குவேன். குழு நடனக்கலைஞராக சினிமாவில் நுழைந்து நடன இயக்குநரான ஷோபி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்தேன். எங்களுக்கு சமத்தக்க மணி, அஸ்விதா ஷோபி என்ற மகள் இருக்கிறார். நிறைவாக உணர்கிறேன். இனி அடுத்து இயக்குநராக படங்கள் இயக்க வேண்டும். அந்தப்படத்தில் வித்தியாசமான நடனத்தை வைக்க வேண்டும். அதிலும் கமல்ஹாசன் போல் புதுமைகள் செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.