போனது பார்வை கிடைத்தது பாதை
""இரு கண்பார்வை பறிபோனாலும் எனக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது.


""இரு கண்பார்வை பறிபோனாலும் எனக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது. வலை பின்னும் திறமையை எனக்கு கடவுள் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் என்பதே உண்மை'' என்கிறார் காளிதாஸ்.
பாய்மரப் படகில் பயணிக்கும் மீனவர்களை பரவசமடையச் செய்கிறது தேவிபட்டிணம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமியத்தனத்தோடு நகர நாகரீகத்தை ஒப்பனை செய்துகொண்ட ஒரு புராண கால கடலோரக் குடியிருப்பு. இங்கு வசிப்பவர் காளிதாஸ். இவரை மீனவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று ஊர் மக்கள் சொல்கிறார்கள். தொடர்ந்து காளிதாஸிடம் பேசினோம்:
""ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் சன்னாசி (சதுர்வேதிமங்களம்) எனது பூர்வீகம். அப்பா ராஜூ முரட்டுத்தனமானவர். உடன் பிறந்த ஒரு தம்பி. குடிக்கு அடிமையான அப்பா அடித்ததில் எட்டு வயதில் இடது கண்ணை இழந்தேன். பாதி தெரிந்த வலது கண் பார்வையும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பறிபோனது. சிறுவயதில் அம்மாவை இழந்த நான் அப்பா அடி, உதைக்கு பயந்து தேவிபட்டிணத்தில் இருந்த பெரியம்மாவை தேடி வந்து அவர்கள் வீட்டு வேலையை பார்த்தேன். அங்கும் அடி, உதைதான். தெற்கு வாணி வீதி கிராமத்தில் வசித்தபோது டீ கடையில் பணிபுரிந்தேன். பின் கேரளத்துக்குச் சென்றேன். விதி வலியது. மீண்டும் தேவிபட்டிணத்துக்கே வந்து வலை பின்னுதலை கற்றுக்கொண்டேன்.
இரு கண்களிலும் பார்வை முற்றிலுமாகப் பறிபோன நிலையிலும் வலை பின்னும் தொழில் என்னைக் கைவிடவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகளைக் கொண்ட நண்டு வலையை என்னைப் போல யாரும் இங்கு பின்னமுடியாது என்கிறார்கள் மீனவர்கள். வலை பின்னலில் கிடைக்கும் வருவாயை மனைவி, மகள் ஆகியோரின் மருத்துவச் செலவுக்கே சரியாகி விடுகிறது. கடன் வாங்கி கடற்கரையோரம் சிறிய இடத்தில் குடிசை அமைத்து தொழிலை செய்கிறேன். எனது வாழ்க்கை தள்ளாடி சென்றாலும், என்னைப் போல பார்வை பறிபோனவர்களுக்கு உதவுவதையே பெருமையாகக் கருதுகிறேன்.
அரசுத் திட்டங்களை பார்வையற்றோருக்கு பெற்றுத்தருவதிலும், அரசு உதவி கிடைக்காதவருக்கு சொந்தப் பணத்தில் உதவுவதிலும் கிடைக்கிற இன்பம், மகிழ்ச்சியே எனது வாழ்க்கை தொடர காரணமாகிறது. வலை பின்னும் தொழிலை மேம்படுத்த மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் கடனுதவி கூட கேட்டுப்பார்த்தேன். கிடைக்கவில்லை. தனிமனிதனாக பொதுத்துறை வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தி வருகிறேன்.
ஆயிரம் அடி நீளமுள்ள வலையை நான்கு நாளிலே பின்னிவிடுவேன். பார்வையுள்ளவர் பின்னும் வலையில் கூட நண்டும், சிண்டு மீன்களும் கூட தப்பும். எனது வலையில் நண்டு, மீன்குஞ்சுகள் கூட தப்பிட முடியாது. கண்ணைப் பறித்த இறைவன், கண்ணியுடன் கூடிய வலை பின்னும் திறமையை எனக்கு கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்.
இரு கண்பார்வை பறிபோனாலும்.. எப்படியும் வலை பின்னி பிழைக்கலாம் என்பதால் கடல்தாயை நம்பியே காலம் நடத்தி வருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...