நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஞானத்தின் வாயில்

ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் வித்துவான் ஒருவர் வசித்து வந்தார். கல்விச் செருக்கு உடையவர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:35 pm

இடைமருதூர் கி.மஞ்சுளா

ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் வித்துவான் ஒருவர் வசித்து வந்தார். கல்விச் செருக்கு உடையவர். அந்தக் கிராமத்திற்கு ஞானி ஒருவர் வந்தார். அவர், அருகிலிருந்த மலை மீது ஒரு சிறிய குடிசை அமைத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.
ஒருமுறை அந்த ஞானியைச் சந்திக்க விருப்பம் கொண்டார் வித்துவான். வீட்டிலிருந்து மிக நீண்ட தூர பயணமாக காடு, மலையெல்லாம் கடந்து மிகவும் சிரமப்பட்டு, அந்த ஞானி வசிக்கும் குடிசைக்குச் சென்றார். பல மைல் தூரம் நடந்து வந்ததால் அவர் மிகவும் சோர்வடைந்திருந்தார். அந்தச் சோர்வின் காரணமாக படப்படப்பாகவும், பதட்டமாகவும் இருந்தார். 
ஞானியின் குடிசைக் கதவை மிக வேகமாக சத்தத்துடன் திறந்தார் வித்துவான். பிறகு, தான் அணிந்துவந்த காலணிகளை அங்கும் இங்குமாகத் தாறுமாறாக எறிந்துவிட்டு, அவசர அவசரமாக ஞானியின் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டார்.
""சுவாமி! நான் தற்போது தங்களிடம் ஞானத்தைப் பற்றிப் பேச வந்திருக்கிறேன். அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்'' என்றார் வித்துவான்.
இதைக் கேட்ட ஞானி கூறினார்: ""நீ எப்போது அன்பு மயமாக ஆகின்றாயோ அப்போதுதான் ஞானத்தைப் பற்றி உன்னிடம் நான் பேச முடியும். ஏனென்றால், நீ இப்போது அன்புமயமாக இல்லை'' என்றார்.
""நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு உங்களோடு ஏதும் முன் விரோதம் கிடையாதே! நான் அன்பு மயமாகத்தானே இருக்கிறேன். தங்கள் மேல் உள்ள அன்பின் காரணமாகத்தானே இத்தனை தூரம் காடு, மலையெல்லாம் கடந்து சிரமப்பட்டு வந்துள்ளேன்'' என்றார் வித்துவான்.
""மகனே! நீ ஒன்றை மறந்துவிட்டாய். என்னிடம் செய்வது மட்டும் அன்பாகாது. நீ அந்தச் செருப்பு, கதவு விஷயத்திலும்கூட அன்பாக நடந்துகொள்ள வேண்டும்''
வித்துவான் சற்று யோசித்துவிட்டு, ""செருப்பு, கதவு விஷயத்தில் நான் அன்பு மயமாக இல்லை என்பதற்கு என்ன பொருள் சுவாமி?'' என்றார் வித்துவான்.
""செருப்பிடம் சென்று மன்னிப்புக் கேள். இனிமேல் கோபத்தில் உன்னை அங்கும் இங்குமாக தூக்கி எறிய மாட்டேன் என்று கூறு. மேலும், கதவிடமும் மன்னிப்புக் கேள். இனி உன்னை அன்பாக, மெதுவாகத் திறந்து மூடுவேன் என்று சொல்'' என்றார் ஞானி.
""இப்படிக் கூறினால் அந்தச் செருப்பும் கதவும் இதைப் புரிந்து கொள்ளுமா சுவாமி?'' என்று வித்துவான் சிரித்தபடி ஏளனமாகக் கேட்டார்.
""நான் கூறியதை அப்படியே செய். செருப்பும் கதவும் உன்னுடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்கின்றனவோ இல்லையோ, ஆனால் நீ அவசியம் புரிந்து கொள்வாய். உலகத்தில் அன்பு ஒன்றுதான் ஞானத்தின் வாயில் என்று. இதே வழியில்தான் ஞானம் நம் இதயத்தில் நுழைகிறது'' என்றார் ஞானி.
இதைக் கேட்ட வித்துவான் வெட்கித் தலைகுனிந்தார். ஞானி கூறியபடியே செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டார். இப்போது வித்துவான் ஞானம் என்றால் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு வந்த வழியே திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.