நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ராஜஸ்தான் மாநில நாடோடிக் கதை: நான்கு சகோதரிகள்

பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகிய நான்கு சகோதரிகள் இருந்தனர். ஒருமுறை அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:02 pm

இடைமருதூர் கி.மஞ்சுளா

பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகிய நான்கு சகோதரிகள் இருந்தனர். ஒருமுறை அவர்களுக்குள் யார் பெரியவர் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவர் மற்றவரைக் காட்டிலும் பெரியவர் என்று வாதாடினர். வாக்கு வாதம் முற்றிப் போனதால், நான்கு சகோதரிகளும் சரியான தீர்ப்பு வேண்டி அந்நாட்டு ராஜாவிடம் சென்றனர்.
ராஜா முதலில் பசியிடம் கேட்டார்: ""பசி, நீ எப்படி உன்னைப் பெரியவள் என்று கூறிக்கொள்கிறாய்?''
""என் காரணமாகத்தான் வீட்டில் அடுப்பு எரிகிறது. சாப்பாடு தயாரித்து எனக்குத் தருகிறார்கள். அப்போதுதான் நான் சாப்பிடுகிறேன். இல்லையென்றால் நான் சாப்பிடவே மாட்டேன். இதனால் நான்தான் பெரியவள்'' என்றாள் சகோதரி பசி.
உடனே ராஜா, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டார். ""யாரும் தங்களுடைய வீட்டு அடுப்பைப் பற்ற வைக்கக்கூடாது. பசிக்கும் மக்களின் பசி எப்படிப் போகிறது என்று நான் பார்க்கிறேன்'' என்றார்.
நாள் முழுவதும் கழிந்து இரவு வந்தது. பசியானவள் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தும் சாப்பிட எதுவுமில்லை. அதனால், வீட்டில் இருந்த காய்ந்த ரொட்டியைச் சாப்பிட்டாள். இதைப் பார்த்த தாகம், ராஜாவிடம் ""ராஜா, பசி தோற்றுப் போய்விட்டது'' என்றாள்.
ராஜா தாகத்திடம், ""நீ எப்படிப் பெரியவள்?'' என்றார்.
""ராஜா! என்னால்தான் மக்கள் கிணறு, குளம் அமைக்கிறார்கள். எனக்குக் குவளை முழுவதும் தண்ணீர் தருகிறார்கள். அதைத்தான் நான் குடிக்கிறேன். இல்லையென்றால் குடிக்க மாட்டேன். அதனால் நான்தான் பெரியவள்''
ராஜா மீண்டும் கட்டளையிட்டார்: ""யாரும் இனி தண்ணீர் குடிக்கக்கூடாது. குளம், கிணறு எல்லாவற்றையும் மூடுங்கள்'' என்றார்.
தாகம் நாள் முழுவதும் தண்ணீர் தேடி அலைந்து சோர்ந்தது. இறுதியில் சாக்கடைத் தண்ணீரைக் குடித்தது.
இதைப் பார்த்த தூக்கம், ராஜாவிடம் சென்று, ""ராஜா, தாகமும் தோற்றுப்போய் விட்டது'' என்றாள்.
""சரி, நீ எப்படிப் பெரியவள், சொல்லு?'' என்றார் ராஜா.
""மக்கள் எனக்காகப் பாய் விரிக்கின்றனர். அப்போதுதான் நான் தூங்குகிறேன்'' என்றாள்.
ராஜா மீண்டும் ஆணையிட்டார். ""யாரும் கட்டில் போடாதீர்கள். அதில் விரிப்பு இடாதீர்கள். தூக்கம் வந்தால் அது எங்கே செல்லும் என்று பார்க்கிறேன்'' 
இரவு வந்தது. தூக்கம் இங்கும் அங்கும் அலைந்தாள். அதற்கு எங்கேயும் கட்டிலோ, விரிப்போ, தலையணையோ போடப்படவில்லை. இதனால் அவள் தரையில் படுத்துத் தூங்கினாள். இதைக் கண்ட ஆசை, ராஜாவிடம் சென்று, ""ராஜா தூக்கமும் தோற்றுப் போய்விட்டாள்'' என்றாள்.
இதைக் கேட்ட ராஜா, ""சொல், நீ எப்படிப் பெரியவள்?'' என்றார்.
""என்னால்தான் மக்கள் வேலை செய்து சம்பாதிக்கின்றனர். மனதில் ஆசையின் நெருப்பு எப்போதும் எரிந்து கொண்டிருப்பதால்தான் கவலைகளை மறந்து மக்கள் உழைத்து சேமிக்கின்றனர். இதனால் நான்தான் பெரியவள்'' என்றாள்.
ராஜா மீண்டும் எல்லோரிடமும், ""இனி யாரும் எந்த வேலையும் செய்யாதீர்கள். ஆசை என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்'' என்றார்.
நாள் முழுவதும் அரண்மனையில் யாரும் எந்த வேலையும் செய்யவில்லை. இரவில், ஒரே ஓர் இடத்தில் மட்டும் சிறிய விளக்கு ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் பானை செய்யும் குயவன் ஒருவன் பசி, தாகம், தூக்கத்தை மறந்து வேலை செய்து கொண்டிருந்தான். ஆசை அங்கு சென்று தங்கிவிட்டது.
ராஜா இதை கவனித்தார். இந்த உலகத்தில் யாருடைய வேலையையும் யாரும் நிறுத்தி வைக்க முடியாது. பசி, தாகம், தூக்கம் போன்றவற்றை மறந்து, இரவு பகலாக மக்கள் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், வாழ வேண்டும் என்கிற ஆசைதான். அதனால், மற்ற மூவரையும்விடப் பெரியவள் நீதான் (ஆசைதான்) என்று ஆசையைப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.