/

தாய்லாந்து நாடோடிக் கதை: மக்களுக்கு உண்மை பேசினால்  பிடிக்காது!

உங்களுக்கு  தெரியுமா?

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:51 pm

ராஜிராதா

உங்களுக்கு  தெரியுமா?

கிளிகள் எப்போதும்  நாம் சொன்னதையே  திரும்பச் சொல்லும்..

ஆனால்  முன்னொரு காலத்தில்  அப்படியெல்லாம் இல்லை!  உண்மையாக யோசித்து பேசிக் கொண்டிருந்தன என்பதை  உங்களால்  நம்ப முடிகிறதா? இதற்கு  நாம் தாய்லாந்து நாடோடிக் கதைக்குச் செல்ல வேண்டும்.

தாய்லாந்தில்  ஒரு நகரத்தில் நிரஞ்சன் என்பவன்  வசித்து வந்தான்.  அவன் ஒரு கிளி வளர்த்து வந்தான். கிளிகள் மிக புத்திசாலியாக  இருந்த காலம் அது. அதனால்  மனிதர்களைப் போலவே  அவையும் பேசி வந்தன.

ஒரு நாள்  நிரஞ்சனுக்கு பயங்கர  பசி.  அவன் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் மனைவி.  குழந்தைகளுக்கும் சாப்பிட  ஏதும் இல்லை.  அப்போது நிரஞ்சனின்  கண்களில்  பக்கத்து  வீட்டுக்காரன்  வளர்த்த ஆடு  தென்பட்டது. அது கொழு கொழுவென  வளர்ந்திருந்தது.  

அதனை வெட்டி  சாப்பிட முடிவு  செய்தான்  நிரஞ்சன். பக்கத்து வீட்டு பரமனை காணவில்லை. அவன் வீட்டிலும்  ஆள் இருப்பதாக தெரியவில்லை.  ஆடு மட்டுமே  மேய்ந்து கொண்டிருந்தது.

உடனே  அதனை விரட்டி,  பிடித்து மாமிசத்திற்காக  அதனை  கொன்றான்.   முழு மாமிசத்தையும்  தன்மனைவியிடம்  கொண்டு போய்  கொடுத்து, ""இது பக்கத்து வீட்டு  பரமனுடைய  ஆட்டின்  மாமிசம்.  இந்த மாமிசத்தில் தேவையானதை  சமைத்துவிட்டு, மீதியை  அரிசிப் பானையில்  வைத்துவிடு'' என்றான்.

அவன் மனைவியும்  அப்படியே  செய்தாள்.

சாப்பாடு முடிந்த நேரம்,   அப்போது பக்கத்துவீட்டு  பரமன் வந்து கதவை தட்டினான்.

கதவை திறந்ததும்,  ""என் வீட்டு ஆட்டைப்  பார்த்தாயா?  எங்கு தேடியும் காணவில்லை'' என்றான்.

அதற்கு  நிரஞ்சன்,  ""அடடா நான் பார்க்கவேயில்லை''  என்றான்.

அப்போது கிளி பேசியது, ""இவன் சாப்பிட்ட  மாமிசம்  உன்னுடைய ஆட்டினுடையதுதான். நீ  இல்லாத நேரத்தில் அதனை  வெட்டி,  மாமிசத்தை எடுத்து மனைவியிடம் கொடுத்து அதில் வேண்டியதை  சமைத்து, மீதியை அரிசி பானையில் வைத்துக்கொள்  என்றான்.  சந்தேகம் இருந்தால்  அரிசி பானையை  திறந்துபார்'' என்றது. 

உடனே பரமன், நிரஞ்சனை  கேட்காமலே, நேராக  அரிசிப் பானையைத்  திறந்து  பார்த்தான். அதனுள்  மாமிசம்  இருந்தது.

இதனால் கோபம்  அடைந்த பரமன் நிரஞ்சனிடம்,   ""நாளை நாட்டாண்மையிடம்  செல்வோம். அவர் என்ன தீர்ப்பு  கூறுகிறாரோ ... அதனை ஏற்போம்'' என்றான்.

நிரஞ்சனும்  அதற்கு  சம்மதித்து,  ""கிளி  சொல்லுவதை  நீ நம்ப வேண்டாம். அரிசிப் பானைக்குள்  உள்ள மாமிசம்  உன்னுடையது அல்ல''  எனக் கூறி பரமனை  அனுப்பி வைத்தான்.

நிரஞ்சனுக்கு, உண்மையைக் கூறி,  தனது மானத்தை வாங்கிய  கிளியைப் பழிக்குப் பழிவாங்க துடித்தான்.

அதனால் கிளியைத் தூக்கி, ஒரு பெரிய பானைக்குள் வைத்து,  பானையின் வாயை  அடர்த்தியான துணியால் கட்டி விட்டான்.  பிறகு, சிறிது நேரம் கழித்து, பானை வாயில் கட்டியிருந்த துணியை, குச்சியைக் கொண்டு,  பலமுறை உரக்க உரக்க தட்டினான்.  பிறகு தண்ணீரை  எடுத்து  உள்ளே  ஊற்றினான்.

பாவம் கிளி.  அது நினைத்தது,  "வானம் இருட்டிவிட்டது.  ஒரே கும்மிருட்டு, போறாததுக்கு இடி  இடிக்கிறது.  திடீரென  மழை கொட்டுகிறது.  அதனால், ஆண்டவனே இன்று ராத்திரி  நல்லபடியாக கழிந்து, நாளை காலை பழையபடி, வானம் வெளிச்சமாக இருக்க நீ தான்  உதவணும்'  என  கிளி வேண்டியது.

காலையில்  நிரஞ்சனும், பானையிலிருந்து  கிளியை வெளியே  எடுத்தான். வெளி உலகை  பார்த்ததும் கிளிக்கு சந்தோஷம். பிழைத்தோம்  என நினைத்தது.

நிரஞ்சன்... நாட்டாண்மையைப் பார்க்க சென்றபோது கிளியையும்  எடுத்துச் சென்றான்.  நாட்டாண்மை வந்ததும்  நிரஞ்சனும், பரமனும், தங்கள்  வழக்கை  எடுத்து  வைத்தனர்.

பரமன் ஒரு படி  கூடுதலாக,  ""இவன்தான் என் ஆட்டை  கொன்று மாமிசம் சாப்பிட்டவன்.  அது உண்மையென  அறிந்து கொள்ள அவனுடைய  கிளியை விசாரியுங்கள்''  என்றான்.

நாட்டாண்மை   உடனே  கிளியிடம்,   ""பக்கத்து  வீட்டு பரமன் சொல்லுவது  உண்மையா?''  எனக்  கேட்டார்.

அதற்கு கிளி,  ""உண்மைதான் இவன் மாமிசத்தை, மனைவியிடம்  கொடுத்து "இது பக்கத்துவீட்டு  ஆட்டின்  மாமிசம்.  வேண்டியதை சமைத்து விட்டு மீதியை அரிசிப் பானைக்குள் வை' என்றான். அவன் மனைவியும்  அதையே   செய்தாள். அரிசி பானைக்குள்  மாமிசம்  இருந்ததை  அடுத்த வீட்டு பரமனும் பார்த்தான்'' என்றது.

நாட்டாண்மை  உடனே,  கிளியின்  சாட்சியை  ஏற்று, ""நிரஞ்சன்  குற்றவாளி. அவனுக்கு'' என  ஆரம்பித்தபோது, நிரஞ்சன் குறுக்கிட்டான். 

""மன்னிக்கணும், கிளி உண்மையைச் சொல்லும் என நம்ப முடியாது. உங்களுக்கு சந்தேகம்  இருந்தால்,  கிளியிடம்  நேற்று ராத்திரி எப்படி இருந்தது?''  எனக் கேளுங்கள் என்றான்.

கிளியும்,  ""நேற்று இரவு  பயங்கர இருட்டு, திடீரென இடி... மழை...'' எனக் கூறியது.

உடனே நாட்டாண்மைக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

காரணம்  நேற்று இரவு அவர் வெளியில் சென்றிருந்தார்.  அப்போது பௌர்ணமி,  நிலவு   வெளிச்சத்தில் ஜொலித்தது.  மேலும்  இடியும் இல்லை, மழையும் இல்லை என்பது அவருக்கு தெரிந்த விஷயம்.  இதனால் கிளி மீது  கோபமாய் வந்தது.

""நல்ல வேளை  நீ சொல்வதை,  உண்மை என எண்ணி தீர்ப்பு  வழங்காமல் இருந்தேனே!  இப்போதுதான்  நீ   கூறுவதெல்லாம்  உண்மையல்ல என தெரிந்தது.  ஆக, என் தீர்ப்பின்படி,  நிரஞ்சன் பயன்படுத்திய  மாமிசம், பக்கத்துவீட்டு  ஆட்டின்மாமிசம்  அல்ல.  ஆக தன் ஆடு  எங்கே என கண்டுபிடிக்க வேண்டியது  பரமனின் வேலை.  அதே சமயம்  பொய்யைக் கூறிய;  இந்த கிளி இனி நகருக்குள்  இருக்கக் கூடாது.  கொண்டு போய் காட்டிற்குள் நாளைக்கே விட்டு விட வேண்டும்'' என  தீர்ப்புக் கூறி  புறப்பட்டார்.
நிரஞ்சனும், முதல் வேளையாக தன்னை காட்டிக் கொடுத்த கிளியை நடுகாட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு  வந்து விட்டான்.

 பிறகு, அந்த கிளி, காட்டில் வசித்து  வந்தது.

ஒரு நாள்  காட்டில்,  ஓர்  இடத்தில்  சில கிளிகள்  கூட்டமாக  பேசிக் கொண்டிருந்தன.

அதனை பார்த்த நிரஞ்சனின்  கிளி,  ""என்ன விஷயம்?''  என்றது.

""நாங்கள் எல்லாம்  மனிதர்களுடன், அவர்கள் வீட்டுக் கிளியாக வாழப் போகிறோம்'' என்றன. 

"" ரொம்ப நல்லது. நான் மனிதர்களிடம்  வாழ்ந்துவிட்டு  இப்போது  காட்டில்  வசிக்க வந்துவிட்டேன்'' என்றது. 

""அந்த வாழ்க்கையைவிட்டு,  நீ ஏன்  காட்டை தேர்ந்தெடுத்தாய்?''

""மனிதர்களுக்கு உண்மை  பேசினால்  பிடிக்காது.  நான் உண்மையை பேசினேன். அதனால்  காட்டிற்கு  அனுப்பிவிட்டார்கள்'' என்றது.

"" அப்படியா நாங்கள் போகும் இடத்தில் தொந்தரவு  இல்லாமல்  வாழ வேண்டுமானால்  எப்படி வாழ வேண்டும்?'' என்றன அந்த கிளிகள்.

""எல்லா  இடங்களிலும்  உண்மை பேசக்கூடாது.  அதோடு  மனிதர்கள் வஞ்சக குணம்  கொண்டவர்கள்.  தங்களுக்கு,  நாம் பயன்படவில்லையென்றால்  காட்டில்  கொண்டு வந்து  விடவும்  தயங்க மாட்டார்கள்'' என்றது நிரஞ்சனின் கிளி.

"" சரி.  இனி  நாங்கள்  என்ன  செய்ய வேண்டும்?''.

""மனிதர்கள் மாதிரி நமக்கு  பேச தெரிந்தாலும்,  அவர்கள்  பேசுவதை, திருப்பிச் சொல்வதுடன்  நிறுத்திக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் மக்கள் நம்மை   ரசிப்பார்கள்.  நாமும் நிம்மதியாக  வாழ முடியும்''  என்றது. 

""ரொம்ப சரி.. இனி நாங்கள்  எங்களை கட்டுப்படுத்தி,  மக்கள்  பேசுவதை   திரும்ப பேசி பொழுதை ஓட்டுவோம்'' என முடித்தன மற்ற கிளிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.