ஊடகங்கள் தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கக் கூடாது!
உலக அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில் மொரிஷியஸ் தீவு வாழ் தமிழர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.


உலக அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில் மொரிஷியஸ் தீவு வாழ் தமிழர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர். தமிழ் அடையாளங்களோடு அயல்நாட்டில் வாழும் அத்தமிழர்களால் நாம் பெருமையடையலாம். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு வெட்டும் கூலியாட்களாக பிரெஞ்சு தேச காலனியாதிக்கத்திலிருந்த மொரிஷியசுக்குச் சென்ற நம் தமிழர், 3 தலைமுறை கடந்து அத்தேசத்தின் மதிப்புமிகு குடிமக்களாகியுள்ளனர்.
அரசியல், அதிகாரம் என சகல உரிமைகளிலும் பங்கெடுத்து வாழ்ந்தாலும், பூர்வீகத் தமிழ் மண்ணை மறப்பதில்லை. மொரிஷியஸிலிருந்து, தமிழகம் வந்து தங்கள் கலாசாரத்தின் ஆணிவேரை அறிந்து செல்கின்றனர். சமீபத்தில் கோவை பேரூர் ஆதீன மடத்தில் நடந்த உலக சைவ சமய மாநாட்டில் பங்கேற்றுவிட்டு மதுரை வந்த மொரிஷியஸ் தம்பதி அருணாச்சலம் புட்பரதம், சின்னம்மா புட்பராசை சந்தித்தோம். அவர்களிடம் பேசியதிலிருந்து...
""காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எம்முன்னோர் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு மொரிஷியஸýக்கு கரும்பு வெட்டும் கூலியாளாகச் சென்றனர். நான் அங்குதான் பிறந்தேன். காதல் திருமணம் செய்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பட்டம் பெற்றுள்ளேன். மொரிஷியஸ் அரசு காவல்துறையில் பணிபுரிந்தேன். பின்னர் மகாத்மா காந்தி தலைமை கல்வி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.
தென்னாப்பிரிக்க நாட்டின் அருகேயுள்ள மொரிஷியஸில் 14 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அதில் 75 ஆயிரம் பேர் தமிழர்கள். தஞ்சைப் பகுதி தமிழர்களே அதிகமுள்ளனர். மதுரை, திருச்சி, சேலம் பகுதியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
மலேசிய, சிங்கப்பூர் நாட்டுத் தமிழர்களுடன் ஒப்பிடும் போது பொருளாதாரத்தில் மொரிஷியஸ் தமிழர்கள் பின்தங்கியவர்கள். ஆனால் கல்வி, அரசியல் உரிமை போன்றவற்றில் மற்ற நாட்டுத் தமிழரை விட ஒரு படி மேலாகவே மொரிஷியஸ் தமிழர்கள் இருக்கிறோம். அங்கு 2 பேர் எம்.பி.யாகவும், அதில் யோகிதா சுப்பிரமணியன் அமைச்சராகவும் உள்ளார்.
மொழி, சமயம், பண்பாடு, குடும்ப உறவு என அனைத்து நிலைகளிலும் தாய்த் தமிழகத்தில் இருப்போரை விட மொரிஷியஸ் தமிழர்கள் அதிக கவனமுடன் உள்ளனர். ஆனாலும், தற்போதைய தலைமுறை, வீட்டில் சிதைந்த பிரெஞ்சு மொழியாக கருதப்படும் சிரியோல் மொழியை அதிகம் பயன்படுத்துவது கவலையளிக்கிறது. அதில், தமிழ், சீனம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிச்சொற்கள் கலந்திருக்கும். மொரிஷியஸில் ஆங்கிலமே ஆட்சி மொழியாகும்.
மொரிஷியஸ் தமிழர்கள் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவர்கள். அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 75 தமிழ்க் கோயில்கள் இருந்தன. தற்போது 150-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. சிவராத்திரி, தைப்பூசம் மற்றும் ஆடிப்பெருக்கு ஆகியவை மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆடிப்பெருக்கன்று நமது தமிழ்ப் பெண்கள் தாலி மாற்றி புதுத் தாலிக்கயிறை அணிவார்கள். அங்குள்ள ஆற்றோரம் நடைபெறும் சிறப்பு வழிபாடு பூஜைகளில் அரசு நிர்வாகத்திலிருப்போர் மொழி, மதம் கடந்து கலந்துகொள்கிறார்கள்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை நாங்கள் வன்மையாகக் கண்டித்தோம். எங்கள் உணர்வுக்கு மதிப்பளித்தே இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை மொரிஷியஸ் அரசு புறக்கணித்தது. ஆகவே அங்கு தமிழர்கள் உரிமையை அரசு மதித்து வருகிறது. தமிழ் பண்பாடு, கலாச்சாரம், சமயத்தை போற்றும் வகையில் அரசே நிதியுதவியும் அளிக்கிறது.
தமிழர்கள் மொரிஷியஸ் தேசத்தின் அங்கம். ஈழத்தமிழர், சிங்கப்பூர் தமிழர் என அந்தந்த நாட்டிலிருந்து தமிழர் தனியாகப் பிரிந்து வாழ்வது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே உரிமையை விட்டுக் கொடுக்காமல் அந்தந்த நாட்டுத் தேசியத் தன்மையுடன் தமிழர்கள் வாழ்வதே நல்லது.
தமிழின் தொன்மை, கலாச்சாரம், பண்பாட்டை தாய்த் தமிழகம் தொலைத்து விடக்கூடாது. தமிழ்த் திரைப்படங்கள் தமிழரை உலக அளவில் கொச்சைப்படுத்துவது போலவே உள்ளன. பொதிகையைத் தவிர அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் திரைப்படத் தாக்கமே அதிகம் உள்ளது. ஆனால், அத்திரைப்படங்கள் தமிழ்ப் பெண்களைக் கொச்சைப்படுத்தியும், கலாசாரத்தை சீரழிப்பதுமாகவே உள்ளன.
அயல் நாட்டவரிடம் நமது பண்பாடு, கலாசார உயர்வை கூறும்போது, அவர்கள் நமது திரைப்படக் காட்சிகளை சுட்டிக்காட்டி எதிர்க்கேள்வி கேட்கும் போது பரிதாபமாகவே நாங்கள் இருக்கவேண்டியுள்ளது.
உலகத் தமிழர்கள் தொலைக்காட்சி வாயிலாகவே தாய்த் தமிழகக் கலாசாரத்தை அறிய வேண்டியுள்ளது. ஆகவே நமது பண்பாட்டை சிதைக்காத வகையில் கலை, அறிவியல் வளர்ச்சியை நாம் பயன்படுத்துவது முக்கியமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...