ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இதுவும் யோகாதான்!

மனதை ஒருமுகப்படுத்தி தெளிவான சிந்தனையோடு மூச்சுப் பயிற்சியும் சேர்ந்து கொள்வது யோகாசனமாகும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:01 am

ஏ. பேட்ரிக்

மனதை ஒருமுகப்படுத்தி தெளிவான சிந்தனையோடு மூச்சுப் பயிற்சியும் சேர்ந்து கொள்வது யோகாசனமாகும். அண்மைக்காலமாக உலகம் முழுதும் யோகாசனத்தின் அவசியம் அல்லது முக்கியத்துவம் அதிகரித்து வரும் சூழலில் ஓரிடத்தில் இருந்தபடியே மட்டுமின்றி அமைதியான வெளியிடங்களிலும் மனதை ஒருமுகப்படுத்த முடியும். இதனால் மனதோடு, உடலும் பொலிவு பெறும் என்கின்றனர் பறவை ஆய்வாளர்கள்.

இக்கருத்துகளை அடிப்படையாக வைத்தே அண்மைக்காலமாக பறவைகளை இனம் காணுதல் (ஆண்ழ்க் ரஹற்ஸ்ரீட்ண்ய்ஞ்) என்ற பொழுதுபோக்கிற்கான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. மற்ற பகுதிகளை விட நீலகிரியில் இந்த ஆர்வம் அதிகரித்து வருவதோடு, வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கூட பறவைகளைத் தேடி நீலகிரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரும், பறவை ஆய்வாளருமான ரங்கசாமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:

""நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உலகிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையுமாக சுமார் 5.500 கி.மீ. பரப்பளவு கொண்டது. தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைத்து உருவாகியுள்ள இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில் 3 புலிகள் காப்பகங்களும், தேசிய பூங்காக்களும், அமைதிப் பள்ளத்தாக்கும், புல்வெளிகளும், சோலைக்காடுகளும் அமைந்துள்ளதோடு, பவானி, மோயார், பாண்டியார், புன்னம்புழா போன்ற ஆறுகளும் உற்பத்தியாகின்றன.

இந்த முக்கியமான நீலகிரி மலைப் பகுதியில்தான் உலகிலுள்ள பறவை இனங்களில் 3 சதவீதப் பறவைகள் உள்ளன. அதாவது, இந்தியாவிலுள்ள பறவை இனங்களில் 25 சதவீதப் பறவை இனங்கள் இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில்தான் உள்ளன. நீர்ப்பறவைகளுக்கு வேண்டிய உணவிலிருந்து, பிற பறவை இனங்களுக்குத் தேவையான உணவும், கூடு கட்டி வாழ்வதற்கான வசதிகளும் இயற்கையிலேயே இங்கு அமைந்துள்ளதால் நீலகிரி மலைப்பகுதியில் மட்டும் சுமார் 350 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றன.

இவற்றோடு இமயமலை போன்ற பகுதிகளிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை நீலகிரியில் 6 மாதம் வரை தங்கியிருப்பதற்காக இடம் பெயர்ந்து வரும் பறவைகளும் உண்டு. இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் பறவை இனங்களில் 10 சதவீதப் பறவைகள் நீலகிரிக்கே உரித்தானவையாகும். உட் சேன்ட் பைப்பர், எல்லோ வாக் டெயில், இந்தியன் புளூ ராபின், காஷ்மீரி பிளை கேட்சர், பீட்டட் ஈகிள், பேர்ன் ஸ்வாலோ, காமன் ரோஸ் பிஞ்ச், டிராங்கோ, பிப்பிட், லாபிங் திரஷ் போன்ற பறவைகளைக் காண்பதே இனிமையான அனுபவமாகும்.

பறவைகளை இனம் காணுதல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். இதில், ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்போது தினந்தோறும் நடைபயிற்சியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், சுவாசிக்க சுத்தமான காற்றும், கண்களுக்கு ரம்மியமான காட்சிகளும் கிடைக்க வாய்ப்பாகிறது. இது ஒரு மனிதன் தனது மனதை ஒருநிலைப்படுத்தி யோகாசன பயிற்சி செய்வதற்குச் சமமானதாகும்.

பறவைகளை புல்வெளிகள், நீர்நிலைகள், உயர்ந்த மரங்கள், குட்டைப் புதர்கள் என பல்வேறு இடங்களிலும் காணலாம். வெளியிடங்களிலிருந்து நீலகிரிக்கு இடம் பெயர்ந்து வரும் பறவைகளை அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை காண முடியும். ஏற்கெனவே, வந்த பறவை இனங்கள்

திடீரென தங்களது வருகையை நிறுத்தி விடுவதும், பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பறவை இனங்கள் வருவதும் நாம் தொடர்ந்து கண்காணிக்கும் போதுதான் தெரியவரும். இவ்வாறு ஒரு புதிய குறிப்பைப் பதிவு செய்வோருக்கு பறவை ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைக்கும்.

நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றால் அரிய வகை பறவைகள் வனங்களில் உள்ள இயற்கை உணவுகளை நாடாமல் இப்புதிய உணவுகளுக்கு அடிமையாகி விடுகின்றன. அதனால் இப்பறவைகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

அதேபோன்று, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், உரங்களாலும் காற்றிலும், நீரிலும், நிலத்திலும் நச்சுத்தன்மை பரவி பறவை இனங்கள் நோய்வாய்ப்படுகின்றன. இதன் காரணமாகவே விவசாய நிலங்களிலும், நீர்நிலைகளிலும் தற்போது பறவை இனங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.

எனவே, மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றியும், இயற்கையை அழிக்காமலும் வாழக் கற்றுக் கொண்டால் அதிக அளவிலான பறவை இனங்கள் நீலகிரிக்கு வரும் என்பதோடு, பறவைகளை இனங்காணுதலுக்கான ஆர்வமும் மேலும் அதிகரிக்கும்'' என்றார் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.