ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திப்பு சுல்தானின் அவுட் போஸ்ட்!

உலகில் பல்வேறு விஷயங்கள் இன்னமும் புதிராகவும், மர்மமாகவுமே இருக்கின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:27 am

ஏ. பேட்ரிக்

உலகில் பல்வேறு விஷயங்கள் இன்னமும் புதிராகவும், மர்மமாகவுமே இருக்கின்றன.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகேயுள்ள பக்காசூரன் மலையும் ஒன்றாகும். உலிக்கல் டிரூக் மலை எனவும் அழைக்கப்படும் இந்த மலைப்பகுதியில் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படுவதால் மர்மங்கள் மட்டுமின்றி, அரிய மூலிகை வகைகளும், பறவையினங்களும் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த மலைப்பகுதியில் பெரிய அசுரன் ஒருவன் வாழ்ந்து வந்ததாகவும், அவனால் இந்த மலைப்பகுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டதாகவும், யாராலும் வெல்ல முடியாதவனாக இருந்த அந்த அரக்கனை மலையடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள வன பத்ரகாளியம்மனே கொன்றதாகவும், அந்த அரக்கனால் கருங்கல்லால் ஒரு கோட்டை கட்டப்பட்டிருந்ததாகவும், அந்த அரக்கன் வாழ்ந்த மலைப்பகுதியே பக்காசூரன் மலை என அழைக்கப்பட்டு வருவதாகவும் உலிக்கல் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த கோட்டை சிதிலமடைந்து விட்டாலும் அதன் எஞ்சிய பாகங்கள் இன்னமும் அங்குள்ளன. அதேபோல, அங்கு அந்த அரக்கனால் தோண்டப்பட்ட ஒரு கிணறும் இருந்ததாகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அந்த கிணறு நிலத்திற்குள் புதைந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே அப்பகுதியிலுள்ள கருங்கல் கோட்டை திப்பு சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் மற்றொரு பிரிவினர் கூறுகின்றனர். நீலகிரி மலைப்பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த திப்பு அனைத்து மலைப்பகுதிகளிலும் ஒரு காட்சி மாடத்தை அமைத்து சமவெளிப் பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரபல ஆங்கிலேய எழுத்தாளர் கர்னல் மெடோஸ் டெய்லர் எழுதியுள்ள திப்புவின் வரலாறு குறித்த நூலிலும் இக்கோட்டையைக் குறித்து விவரித்துள்ளார்.

உலிக்கல் என்பதற்கு இரு அர்த்தங்கள் உள்ளதாகவும், படுகு மொழியில் உலி என்றால் புலி, எனவே திப்புவை புலி என அழைக்கப்பட்ட நிலையில் திப்புவின் கோட்டையையே உலிக்கல் கோட்டை என அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கோட்டையிலிருந்து சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வழியாக திப்பு ஒரு சுரங்கப்பாதை அமைத்திருந்ததாகவும், அதன் வழியாகவே கர்நாடகத்திற்கு ரகசியமாகச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக கிணறு போன்ற குழியில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஓர் அமைப்பு இங்கிருந்தது. ஆனால், பராமரிப்பில்லாத காரணத்தால் பிற்காலத்தில் அந்த இரும்புச் சங்கிலி இருந்த பள்ளமே மறைந்து விட்டது.

1500ஆம் ஆண்டுகளில் உம்மத்தூர் வம்சத்தின் வசமிருந்த நீலகிரி மலையில் உலிக்கல் டிரூக்கில் இருந்த கோட்டையைத் தவிர கோத்தகிரியில் கூட்டாடா அருகே மலை உச்சியில் கட்டப்பட்ட உதயராய கோட்டையும், உதகையில் கல்லட்டி அருகே கட்டப்பட்ட மேலக்கோட்டையும் பிற்காலத்தில் திப்புவின் வசமிருந்ததும் கர்னல் டெய்லரின் நூலில் விவரிக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.

இது தொடர்பான தகவல்கள் ஒருபுறமிருக்க வனவிலங்குகளும், இப்பகுதியில் நச்சுத் தன்மை வாய்ந்த ஊர்வனவும் அதிக அளவில் இருந்த காரணத்தால் இங்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கும் தடையிருந்தது. அதனாலேயே இப்பகுதியைச் சுற்றுலா மையமாக அறிவிக்காமலும் இருந்தனர். ஆனால், தற்போது தமிழக அரசு இப்பகுதியைச் சுற்றுலா மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் இப்பகுதி சுற்றுலா மையமாக அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதோடு, இந்தப் பகுதியைக் குறித்த ஆராய்ச்சிகளும் அதிகரிக்குமென்பதால் விரைவில் உலிக்கல் டிரூக் கோட்டை எனப்படும் பக்காசூரன் மலை குறித்த பல்வேறு புதிய தகவல்களும் வெளிவருமென நம்பலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.