நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்திய மருத்துவமுறைகளுக்குக்  கிடைத்த வெற்றி!

சர்வதேச அளவில் எத்தனையோ நாடுகளில் மருத்துவ முறைகள் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கலாம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:47 am

ஏ. பேட்ரிக்

சர்வதேச அளவில் எத்தனையோ நாடுகளில் மருத்துவ முறைகள் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கலாம். ஆனால், இன்னமும் பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
 இதற்கு இந்திய மருத்துவ சிகிச்சைகளில் கட்டணம் மிகக்குறைவு என்பதோடு, இந்திய மருத்துவ முறைகளின் மீதான நம்பிக்கையும் ஒரு காரணமெனலாம்.
 ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் தென்னாப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சை முறைகள் மேம்பட்டுள்ளன. ஆனால், ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தமட்டில் மருத்துவ முறைகள் இன்னமும் பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு, பல்வேறு தொற்றுநோய்களும் பரவி வருகின்றன.
 இதைத் தடுப்பதற்காக இந்திய அறிவியல் தொழிற்நுட்பத்துறை ஆப்பிரிக்க நாடுகளுக்கு பல்வேறு தொழிற்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இதில் மருத்துவ ஆராய்ச்சிகளும், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் அடங்கும். இதில் பங்கேற்கும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இந்தியாவிலேயே செய்து கொடுப்பதோடு, அவர்களின் எதிர்கால ஆராய்ச்சிக்குத் தேவையான உதவிகளையும் இத்துறை அளிக்கிறது.
 இதன் ஒரு கட்டமாக உதகையில் ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூலிகை மருத்துவம் தொடர்பான 3 வார பயிற்சியை உதகையில் நடத்தியது. இதில் ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், டுனிஷியா, உகாண்டா, கென்யா, கானா போன்ற நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
 இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த ஜேஎஸ்எஸ் பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர் தனபால் இப்பயிற்சி முகாம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
 ""இந்தியாவில் சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் அலோபதி ஆகிய மருத்துவ முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மொழியாலும், எல்லையாலும் பல்வேறு வகையாக நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவ சிகிச்சைகள் நாடு முழுமைக்கும் பொதுவானதாகும். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கான தனி மொழி, தனி கலாச்சாரம், தனி பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றால் ஒரு நாட்டின் செயல்பாடுகள் அடுத்த நாட்டிற்குத் தெரிய வருவதில்லை.
 உதாரணமாக நமது நாட்டில் ஒருவருக்கு உடலில் ஒரு பிரச்னை என்றால் அதற்கு நிவாரணம் அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட மருந்துகளும், மாத்திரைகளும் உள்ளன. அதில் குறிப்பிட்ட அளவுகளில் மருந்துகள் கலவையாகச் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஆப்பிரிக்க நாடுகளிலோ ஒரு பச்சிலையை எடுத்து உணவைப்போல உட்கொண்டால் குணமடைந்து விடுமென்ற நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இது பல நேரங்களில் தவறான முடிவுகளையும் கொடுத்து விடுகிறது.
 ஒவ்வொரு மனிதருக்கும் வாதம், பித்தம், கபம் என்ற 3 குணாதிசயங்கள் மட்டுமே அடிப்படையாக அமைந்திருக்கும். அதில் ஏற்படும் பிரச்னை குறித்து அறிந்து அதற்கேற்ற சிகிச்சையை அளித்தால் நோயை குணப்படுத்தி விடலாம். இதுதொடர்பான பயிற்சிகள்தான் ஆப்பிரிக்க நாட்டவருக்கு வழங்கப்பட்டன. பொதுவான பிரச்னைகளுக்கு அலோபதியில் பாரசிட்டமால் என்ற மாத்திரை கொடுக்கப்படுகிறது. இதுவே ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கொடுக்கப்படுகிறது. நெல்லிக்காய் உணவாக மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த இரண்டு மருத்துவ முறைகளுக்கும் வித்தியாசம் இருந்தாலும் அடிப்படையில் சிகிச்சை ஒன்றுதான்.
 நோய் குறித்த ஆதாரபூர்வமான ஆய்வு, எந்த மூலிகையைப் பயன்படுத்தலாம், மருந்தின் அளவு உள்ளிட்ட மருத்துவக்கூறுகள் தொடர்பாகவும், அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்துவது தொடர்பாகவும் விவரிக்கப்பட்டது.
 உதாரணமாக, புற்று நோய்க்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தலைமுடி உதிர்தல் என்பது பக்க விளைவாகும். இதுபோன்ற விரிவான ஆராய்ச்சிகளும் இக்கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்கள்'' எனவும் டாக்டர் தனபால்
 தெரிவித்தார்.
 இக்கருத்தரங்கில் பங்கேற்ற கென்யா நாட்டை சேர்ந்த டாக்டர் டானியல் கூறுகையில், "" இந்தியாவில் மருத்துவ வசதிகள் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளன என்பதை நேரில் அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாகும். இதை எங்கள் நாட்டிலும் நடைமுறைப்படுத்த முயற்சிப்போம்'' என்றார்.
 எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த டாக்டர் ஆடிஸ் கூறுகையில், ""மருத்துவ முறைகள் தொடர்பாக எங்கள் நாட்டில் எதிர்பார்ப்புகள் அதிக அளவில் உள்ளன. ஆனால், அதற்கான கல்வியிலும், பயிற்சியிலும் நாங்கள் பின்தங்கியே உள்ளோம். இங்கு கற்றுக் கொண்டவற்றை நடைமுறையில் கொண்டு வர முயற்சிப்போம். இது எங்களுக்கு ஒரு சவாலாகும்'' என்றார்.
 மொசாம்பிக் நாட்டை சேர்ந்த டாக்டர் பிபியானா கூறுகையில், ""அடித்தட்டு மக்களுக்கு அதிகளவில் மருத்துவ வசதிகள் தேவை. மூலிகை மருந்தையும், அலோபதி மருந்தையும் சேர்த்து பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து அறிந்து கொள்ள இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சி முகாம் மிகவும் உறுதுணையாக இருந்தது. தொற்று நோய் தொடர்பான பல்வேறு விவரங்களையும் இதன்மூலம் தெரிந்து கொண்டேன்'' என்றார்.
 இந்தியாவிலுள்ள மருத்துவ முறைகள் குறித்து பல்வேறு வெளிநாடுகளும் நம்மை உற்று நோக்குவதோடு, நமது மருத்துவ முறைகள் நாளுக்கு நாள் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருவதை வெளிக்காட்டுவதாகவே இப்பயிற்சி முகாமில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்தது, இந்தியாவின் மருத்துவ முறைகளுக்கு கிடைக்கும் வெற்றியே எனலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.