நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஊருக்குள் வந்த ஒரு புலியின் கதை!

புலியைப் பார்க்க வேண்டுமெனில் அதன் வாழ்விடத்திற்குள் நாம்தான் செல்ல வேண்டும். ஆனால், தற்போது நீலகிரியில் நிலையே மாறியிருக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:14 am

ஏ. பேட்ரிக்

புலியைப் பார்க்க வேண்டுமெனில் அதன் வாழ்விடத்திற்குள் நாம்தான் செல்ல வேண்டும். ஆனால், தற்போது நீலகிரியில் நிலையே மாறியிருக்கிறது.
 இந்த மாதத்தின் தொடக்கத்தில் புலி ஒன்று ஊருக்குள் வந்து 5 நாட்களில் 3 பேரை கொன்று ஆள் கொல்லி புலியாக உருவெடுத்திருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1965ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய ஆள் கொல்லி புலி நடமாடியது இதுவே முதன்முறை. இப்புலியை உயிருடன் பிடிக்க வனத்துறையினரும், அதிரடிப்படையினரும், கால்நடை பராமரிப்புத் துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.இறுதியில் அந்தப் புலியைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கேட்டோம்:
 எஸ்.ஜெயச்சந்திரன் (இணைச்செயலர், தமிழக
 பசுமை இயக்கம்)-நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ஆள் கொல்லி புலி என்பது கடந்த 1965ம் ஆண்டில் வாழைத்தோட்டம் பகுதியில் இருந்துள்ளது. அப்போது வனச்சட்டங்கள் கடுமையாக இல்லாததால் அந்த விலங்கை உரிமம் பெற்ற வேட்டைக்காரர்கள் சுட்டுக் கொல்லலாம் என பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் மேன் ஈட்டர் எனப்படும் புலியின் நடமாட்டம் நீலகிரியில் காணப்படுகிறது.
 நமது தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாப்பதற்காகவே கடந்த 1974ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நாட்டில் சுமார் 4ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 1,400க்கும் குறைவாக போய்விட்டதால் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலைக்கேற்ப காடுகள் அதிகரிக்கவில்லை. புலிகள் சராசரியாக 10 சதுர கி.மீ. பரப்பளவைத் தங்களது எல்லைப்பகுதியாக வகுத்துக் கொள்ளும். ஆனால், தற்போது அந்த அளவிற்கு அவற்றிற்கு வாழ்விடம் கிடைப்பதில்லை.
 எனவே, வனப்பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனவிலங்குகளின் பழைய வாழ்விடங்களைப் பாதுகாப்பதுடன் புதிய வாழ்விடங்களையும் உருவாக்க வேண்டும். நீலகிரியில் ஆள்கொல்லி புலி உருவாகியிருப்பது புதிதல்ல, இது ஆரம்பமே. கண் மூடித்தனமாக காடுகளை அழித்து காட்டின் எல்லைகள் குறைந்து வருவதைத் தடுக்காவிட்டால் இத்தகைய பிரச்னைகள் இனியும் தொடரும்.
 காளிதாசன்(ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு)-புலிகள் தங்களுக்கென எல்லையை வகுத்து வாழும் விலங்காகும். அதனால், தனது வாழ்விடத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. வலிமையற்ற புலியை, வலிமையான புலி வனத்தின் விளிம்புக்கு வெளியே தள்ளிவிடும்போதுதான் ஊருக்குள் நுழைகிறது. வேட்டையாடி உணவைச் சேகரிக்க முடியாத நிலையில்தான் மனிதர்களைத் தாக்குகிறது.
 பொதுவாக அசாதாரண சூழ்நிலைகளில்தான் புலிகள் மனிதர்களைத் தாக்குகின்றன. சுந்தரவனக் காடுகளில் ராயல் பெங்கால் புலிகள் மனித வேட்டையில் ஈடுபடுகின்றன. அத்தகைய நிலை தற்போது நீலகிரியிலும் ஏற்பட்டுள்ளது. இப்புலியை உயிருடன் பிடிக்க முடியாவிட்டால் கொன்றாவது பிடிக்கலாம். அதில் தவறில்லை. மக்கள் பங்களிப்பின்றி வனத்தைப் பாதுகாக்க முடியாது.
 எஸ்.மோகன்ராஜ்(டபிள்யு டபிள்யு எப்)-
 மூன்று உயிர்களைப் பலிவாங்கியுள்ள இது போன்ற விலங்குகளை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் திட்டமிட வேண்டும். இதுதொடர்பாக உரிய கொள்கை முடிவுகளை எடுத்து சிறப்புக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும். அவர்களுக்குப் போதிய அளவில் பயிற்சியளித்து, தேவையான ஆயுதங்கள் மற்றும்
 கருவிகளையும் வழங்க வேண்டும்.
 என்.சாதிக் அலி(வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை)- மக்கள் தொகை பெருக்கத்தாலும், காட்டின் பரப்பளவு குறைவதாலும், கட்டிட மயமாக்கலாலும் உணவு மற்றும் நோய் பிரச்சனைகள் காரணமாகவும் வனத்தை விட்டு விலங்குகள் வெளியே வருகின்றன. புலிகளைப் பொறுத்தமட்டில் இயற்கையாகவே பதுங்கி வாழும் தன்மையைக் கொண்டதாக இருந்தாலும் அவற்றிற்கு ஏற்படும் ஒருவிதமான நோயால்(கெனைன் டிஸ்டம்ப்ர்) மனிதர்கள் மீதான பயம் போய்விடும். சாதுவான மனிதர்கள், மாடு போன்றவற்றின் மீதே அதன் கவனம் திரும்பும்.
 தான் வாழும் பகுதியில் புதிதாக ஏதாவது தென்பட்டாலோ, தனக்கு வழிகாட்டும் குரங்கு மற்றும் காகங்களின் எச்சரிக்கை வித்தியாசமாக இருந்தாலோ அதை வைத்தே இடம் பெயர்வதும், பதுங்குவதும் இருக்கும். வனங்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதே மக்களுக்காகத்தான். எனவே இது போன்ற புலிகளிடம் இருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.