கட்டாயமாக நடனமாட வேண்டும்!
நீலகிரி மாவட்டத்தில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்துள்ளதைப்போல, இம்மாவட்டத்தின் வித்தியாசமான பழக்க வழக்கங்களும்,


நீலகிரி மாவட்டத்தில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்துள்ளதைப்போல, இம்மாவட்டத்தின் வித்தியாசமான பழக்க வழக்கங்களும், விசித்திரமான கலாசாரங்களும் வியப்பிற்குரியவை. நீலகிரியின் பண்டைய பழங்குடிகள் என அழைக்கப்படும் கோத்தர் இன மக்களின் திருவிழாவான அய்னோர்-அம்னோர் திருவிழா வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படுகிறது.
கோத்தர் இன மக்களும் தங்களது வழிபாட்டுக்குரிய கோவிலில் எத்தகைய உருவங்களும் இல்லாமல் வழிபடுகின்றனர். நீலகிரியைப் பொறுத்தமட்டில் கோத்தர் இன மக்கள் 7 இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமப்பகுதி கோக்கால் என அழைக்கப்படுகிறது. இவர்களது 7 கிராமங்களிலும் ஒரே நாளில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இக்கோவிலுக்குள் நுழைய முடியும். அதுவும் கோத்தர் இன ஆண்கள் மட்டுமே கோவில் உள்ள பகுதிக்குள் வர முடியும். பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண் குழந்தையாக இருந்தால் பிறந்தவுடன் ஒருமுறை கோவிலுக்குள் எடுத்துச் சென்று வர அனுமதி வழங்கப்படும். இதுதொடர்பாக கொல்லிமலை கிராமத்தைச் சேர்ந்தவரும், வனவாசி இயக்கத்தின் நீலகிரி மாவட்ட செயலருமான
பால கம்பட்டன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
""கோத்தர் இன மக்கள் தங்களது குல தெய்வத்தை அய்னோர்
(தந்தை), அம்னோர் (தாய்) என அழைக்கின்றனர். மற்ற கிராமங்களில் இல்லாத அளவுக்கு கொல்லிமலையில் குனைனோர் (குழந்தை) என்ற வழிபாட்டுத் தலமும் உள்ளது. இக்கோயில்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். மற்ற வழிபாட்டு முறைகளைப் போல தீபமேற்றுதல், ஆரத்தி காட்டுதல், தேங்காய், பழம் போன்ற எந்த முறையும் கடைபிடிக்கப்படுவதில்லை. உருவ வழிபாடும் கிடையாது. கோவிலுக்குள் நுழையும் நாளன்று சூரிய நமஸ்காரம் செய்து உள்ளே நுழைவர்.
மார்கழி மாதத்தின் அமாவாசையைத் தொடர்ந்து இக்கோவிலின் திருவிழா நாள் குறிக்கப்படும். ஓர் ஆண்டில் 1 நாளும், அதற்கடுத்த ஆண்டில் 3 நாட்களுமாக இத்திருவிழா மாறி, மாறி கொண்டாடப்படும். நடப்பாண்டில் 1 நாள் திருவிழா மட்டுமே கொண்டாடப்பட்டுள்ளது.
இத்திருவிழாவுக்கான நாள் குறித்தவுடன் திருவிழாவுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக ஆண்கள் வீட்டிலிருந்து வெளியேறி கோவில் எதிரே உள்ளே பொது மைதானத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கு பூசாரிகளுக்குத் தனிச் சமையல், ஆண்களுக்குத் தனிச் சமையல், குடும்பத்தினருக்குத் தனிச் சமையலென செய்யப்படும். திருவிழா முடிந்து ஆண்கள் வீட்டிற்குத் திரும்பும்வரை வீடுகளில் சமைக்கக் கூடாது. வேக வைத்த சாமை அரிசி உணவும், உப்பு சேர்த்து வேக வைக்கப்பட்ட அவரையுமே உணவாகும். மசாலாப் பொருட்களைச் சேர்க்கக்கூடாது.
அந்த காலத்தில் கடவுள் மக்களிடம் நேரடியாகவே பேசிக் கொண்டிருந்ததாகவும், நாளடைவில் அந்தத் தொடர்பு அறுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் கடவுள் பேசும் வீடான கோவிலுக்குள் யாரும் நுழைவதில்லை. அந்த காலகட்டத்தில் கடவுளே கோத்தர் இன மக்களுக்கு வில்லும், அம்பும் பாதுகாப்புக்காக கொடுத்துள்ளாராம். இந்த வில் குறிப்பிட்ட எதிரியை தாக்கி அழித்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்துவிடும் தன்மை கொண்டதாகவும் இருந்ததாம். காலப்போக்கில் அந்த வில்லும், அம்பும் மறைந்து விட்டதாக முன்னோர்கள் கூறியுள்ளனர்.
முற்காலத்தில் கோத்தர் இன மக்கள் கடவுள் கோத்தகிரி (கோத்தர் வசிக்கும் மலை) பகுதியில் வசித்து வந்ததாகவும், ஆனால், கொல்லிமலையில் இசைக்கப்பட்ட இசைக்கு விரும்பி அங்கிருந்து வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கோத்தர் இன மக்களுக்கு மொழி வழக்கு மட்டுமே உண்டு. அதனால், முற்கால வரலாறு குறித்த எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் உருவாகவில்லை.
இத்திருவிழாவின் சிறப்பம்சமே ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி கடவுளை மகிழ்விப்பதுதான். அதனால், ஆண்கள் நடனமாடும்போது பெண்கள் அமர்ந்து பார்க்க வேண்டும். பெண்கள் நடனமாடும்போது ஆண்கள் அமர்ந்து பார்க்க வேண்டும். இந்த நடனமே முக்கியமென்பதால் கோத்தர் இன மக்களில் யார் எந்த ஊரில் இருந்தாலும் திருவிழா நாட்களில் அவரவர் கிராமத்திற்கு வந்து கட்டாயமாக நடனத்தில் பங்கேற்க வேண்டுமென்பது கட்டுப்பாடாகும். இன்றளவும் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது'' என்றார் பால கம்பட்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...