இந்தியாவின் நவீன, துடிப்பான, தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களின் நாடித் துடிப்பை துல்லியமாக கணித்து வைத்திருப்பவர் ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத். இவரது புதினங்கள் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெற்று வருகின்றன.
ஃபைவ் பாயின்ட் சம்ஒன் (2004), ஒன் நைட் அட் தி கால் சென்டர் (2005), 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் (2008), 2 ஸ்டேட்ஸ் (2009), ரெவலூஷன், வாட் யங் இன்டியா வான்ட் (2012) போன்ற நாவல்கள் இளைஞர்களின் இதயங்களையும், இல்லங்களையும் அலங்கரித்து வருகின்றன.
இவரது படைப்புகளில் ஒன்றான ஃபைவ் பாயின்ட் சம்ஒன் இந்தியில் "த்ரீ இடியட்ஸ்' என்றும், தமிழில் "நண்பர்கள்' என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளியாகி அனைவரையும் வசப்படுத்தியது. சேத்தன் பகத் நாவலாசிரியர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும்கூட.
இளைஞர் நலன், நாட்டின் முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டுள்ள சேத்தன் பகத், இந்திய மேலாண்மைக் கழகம்- ஆமதாபாதில் எம்.பி.ஏ. படித்தவர். 2009-இல் ஹாங்காங்கில் செய்து வந்த வங்கிப் பணியை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக வலம் வருகிறார்.
இந்திய மேலாண்மைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, தமிழ்ப் பெண்ணிடம் தனது இதயத்தைப் பறிகொடுத்திருக்கிறார். பஞ்சாபியான சேத்தன் பகத், தமிழ்ப் பெண்ணான அனுஷாவைத் திருமணம் செய்து கொண்டதை தன்னுடைய "2 ஸ்டேட்ஸ்' என்ற புதினத்தில் அழகாக விவரித்திருக்கிறார்.
சேத்தன் பகத் கூறியது:
""இந்திய மேலாண்மைக் கழகத்தில் படித்த போது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான அனுஷாவைச் சந்தித்தேன். அவரது இயல்புகள் என்னைக் கவர்ந்தன.
எங்கள் திருமணத்துக்கு இரு குடும்பங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது. அவற்றைச் சமாளித்து 1999-இல் அனுஷாவைக் கரம் பிடித்தேன். இதை எனது "2 ஸ்டேட்ஸ்' என்ற புதினத்தில் எழுதியுள்ளேன்.
அனுஷாவைப் பார்க்க அடிக்கடி சென்னை மயிலாப்பூர் வந்த போது தமிழர்களின் கலாசாரம், கலை உணர்வு, ஒழுக்கத்தைக் கண்டு வியப்படைந்தேன். தமிழர்களின் வாழ்க்கை முறை வட இந்தியர்களுக்கும், பஞ்சாபிகளுக்கும் சம்பந்தம் இல்லாதது.
நான் தமிழனாகப் பிறந்திருக்கக் கூடாதா... என்று ஏங்க வைத்தது தமிழர்களின் கலை
உணர்வுதான்.
இளம் வயதிலேயே பாட்டு, வாத்தியம், ஓவியம், இசை என்று கலைகளை நேசிக்கவும், சுவாசிக்கவும் தொடங்கி விடுகிறார்கள் தமிழர்கள். இதை வட இந்தியாவில் காண்பது அரிது.
அனுஷாவை மணந்ததால் தமிழர்களின் கலையை நேரில் கண்டு ரசிக்க முடிந்தது.
எங்கள் காதலை விவரித்திருக்கும் "2 ஸ்டேட்ஸ்' இந்தியில் திரைப்படமாக தயாராகியுள்ளது. இந்தப் படம் தமிழிலும் வெளியாகும். இதில் நடிகை ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அபிஷேக் வர்மன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் முன்னோட்ட காட்சிகள் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாகும். திரைப்படம் ஏப்ரல் 18-இல் வெளிவரும். தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்ற விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு சரியாக கைகூடவில்லை. இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்துள்ளேன்.
தமிழர்கள், தமிழர்களின் கலை மீது எப்போதும் எனக்கு தீராத காதல் உண்டு. கிராமப்புற காதலை மையப்படுத்தி புதிய ஆங்கில நூல் எழுதியுள்ளேன். இந்த நூல் வருகிற அக்டோபரில் வெளியிடப்படும்.
தமிழ் இலக்கியம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்திரா செüந்திரராஜன், புஷ்பாதங்கதுரை, ராஜேஷ்குமார், இந்துமதி போன்றோரின் ஆங்கில மொழியாக்க கதைகளைப் படித்துள்ளேன்'' என்றார் அவர்.