மக்களுக்கான கலை வடிவம்!
சினிமா மற்றும் தொலைக்காட்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட இளைய தலைமுறையினருக்கு தெருக்கூத்து, வீதி நாடகம் போன்ற மக்களுக்கு


சினிமா மற்றும் தொலைக்காட்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட இளைய தலைமுறையினருக்கு தெருக்கூத்து, வீதி நாடகம் போன்ற மக்களுக்கு சிறந்த கருத்துக்களை எடுத்துக்கூறும் நிகழ்வுகள் புதுமையாகவே தோன்றுகின்றன. தெருக்கூத்து, வீதி நாடகங்களைப் பற்றிக் கேட்டால் இன்றைய இளைஞர்கள் ஒன்றும் தெரியாமல் விழிக்கிறார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மக்களுக்கு தேச பக்தியை ஊட்டியதில் பெரும் பங்கு இந்த தெருக்கூத்து, நாடகங்களுக்கும் உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த நாடக வடிவம் போராட்ட ஆயுதமாக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஜனவரி 26-இல் குடியரசு தினத்தன்று அரங்கேற்றப்பட்ட "திரும்பிப்பார் திருப்பூர் குமரன்' நாடகமும் அத்துணை உணர்ச்சிகரமாக இருந்தது.
நாடகத்தில் நடித்த மாணவர்கள் அனைவருக்கும் இதுவே முதல் மேடை. ஆனால், மேடை பயம் சிறிதும் இன்றி அவர்கள் திறமையை வெளிக்காட்டினார்கள். திருப்பூர் குமரனாக நடித்த முதலாமாண்டு மாணவர் ரத்தினராஜ், ""இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து பாடத்தில் படித்திருக்கிறோம். ஆனால், இந்த நாடகத்தில் நடித்த பிறகுதான் அவர்கள் சுதந்திரத்துக்காக எவ்வளவு துன்பப்பட்டார்கள் என்பதை உணர முடிந்தது'' என்றார்.
திருப்பூர் குமரனுக்குத் தாயாக நடித்த முதலாமாண்டு மாணவி சிவகாமி, ""இவ்வளவு துன்பப்பட்டு வாங்கித் தந்த இந்த விடுதலையை நாம் பேணிப் பாதுகாக்கும்விதமாக நல்ல முறையில் படித்து நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனது மனம் முழுவதும் நிறைந்துள்ளது'' என்றார்.
இந்த நாடகத்தை எழுதி இயக்கிய ஆழ்வைக் கண்ணனும் இதே கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திருப்பூரில் வசித்துவரும் இவர் அங்குள்ள "பிளாட்டோஸ் அகாடமி' பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிறு நாடகங்கள் எழுதி அதில் நடித்தும் வந்த கண்ணன், திருப்பூர் குமரன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று நிகழ்வுகளை நாடகமாக ஆக்கி தனது மாணவர்களைக் கொண்டு 2002-ஆம் ஆண்டு பள்ளி மேடையில் அரங்கேற்றினார். அந்த நாடகத்தைக் கண்ட பலர் அந்த நாடகத்தை பொதுமக்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். 2004-ஆம் ஆண்டு "திருப்பூர் குமரன்' நூற்றாண்டு விழாவில் அந்த வாய்ப்புக் கிடைத்து பொதுமக்கள் முன் திருப்பூர் குமரன் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். நாடகத்தைக் கண்ட திருப்பூர் தமிழ்ச் சங்கத்தினர் இந்த நாடகத்தை அப்படியே நூலாக வெளியிடுகிறோம் என்று கூறி அவரது நாடக முயற்சிக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்கி கெüரவித்துள்ளனர்.
கண்ணனின் நாடக மொழியும், மாணவர்களின் நடிப்பு ஈடுபாடும் நாடகம் என்பது மக்களை எளிதில் சென்று அடையக்கூடிய ஒரு போராட்ட வடிவம் என்பதை மீண்டும் உறுதி செய்வதாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...