அனுப்புவது கடிதம் அல்ல... உள்ளம்!
""ஊருக்கு போய்விட்டு, மறக்காம கடுதாசி எழுதுங்க'' என்று சொல்லும் வழக்கம் ஏறத்தாழ அழிந்தே போய்விட்டது. செல்போனும், இணையதளமும் வந்துவிட்ட பிறகு இந்த வரிகள் அர்த்தமிழந்துப் போய்விட்டன.


""ஊருக்கு போய்விட்டு, மறக்காம கடுதாசி எழுதுங்க'' என்று சொல்லும் வழக்கம் ஏறத்தாழ அழிந்தே போய்விட்டது. செல்போனும், இணையதளமும் வந்துவிட்ட பிறகு இந்த வரிகள் அர்த்தமிழந்துப் போய்விட்டன.
கடிதம் எழுதுவது என்பது வெறுமனே தகவலைச் சொல்வது மட்டுமல்ல, விரிவான- நுட்பமானவற்றையும் எழுதுவது. அதுமட்டுமா? அன்றைய காலத்தை ஆவணப்
படுத்துவதும் கூட.
எனவேதான் கடிதம் எழுதும் கலாசாரத்தை, அதுவும் குறிப்பாக பிரபலங்களுக்கு கடிதம் எழுதுவதை திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊக்குவிக்கிறார்கள். இதற்கான பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாளன்று மாணவ, மாணவிகள் பிரபலங்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். கடந்த இரு ஆண்டுகளில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன், டாக்டர் சாந்தா, ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் போன்ற அந்தப் பிரபலங்களிடமிருந்து பதில் கடிதங்களும் வந்திருக்கின்றன.
மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டு போராளி இரோம் சர்மிளா, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், மாவட்டத்தின் ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், திரைப்பட நடிகர் சூர்யா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், ஆசிட் வீச்சில் இறந்த விநோதினியின் பெற்றோர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவி செய்வதையே பணியாக மாற்றிக் கொண்ட இயல் இசை வல்லபி, வானவன் மாதேவி இவர்களுடன் ஐநா பொதுச்செயலருக்கும் எழுதலாம், நம்மைப் பெற்ற அப்பா அம்மாவுக்கும் எழுதலாம் என்றது பள்ளி நிர்வாகம்.
"இனி யாருக்கும் இதுபோல நடக்கக் கூடாது என்று மருத்துவமனையில் திடமாகச் சொல்லியிருக்கிறார் விநோதினி. நாங்கள் உங்கள் மகனாக, மகளாக இருப்போம்'' என்று ஆசிட் வீச்சில் இறந்த விநோதியின் பெற்றோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் 11ஆம் வகுப்பு மாணவர் வி. கிரண்.
"நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் மட்டும் 24 ஆயிரம் நிலுவையில் இருக்கின்றன. நம்மிடமுள்ள சட்டத்தைக் கொண்டே இவற்றைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்' என்கிறார் நீதிபதி சதாசிவத்துக்குக் கடிதம் எழுதிய 11ஆம் வகுப்பு மாணவி வே. திவ்யா.
"என்னைப் போல எத்தனைக் குழந்தைகள் இலங்கையில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பார்கள். அதற்காகத்தான் கடிதம் எழுதினேன்' என்கிறார் ஐநா பொதுச்செயலருக்கு கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி எம். வர்சினி.
"உங்களின் ஓடும் நதியின் ஓசை, ஆத்தங்கரை ஓரம், ஐஏஎஸ் வெற்றிப் படிக்கட்டுகள், அரிதாரம், படிப்பது சுகமே ஆகிய புத்தகங்கள் என்னிடம் உள்ளன. நானும் ஐஏஎஸ் ஆக வேண்டும். ஆலோசனை சொல்லுங்கள்' என்று ஐஏஎஸ் அதிகாரி இறையன்புவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் 12ஆம் வகுப்பு மாணவி பா.ரா. ஸ்நேகா.
"என்மேல் எதையும் திணிக்க மாட்ட, என்னுடைய உடல் நலத்துல கவனம் செலுத்துவ, தனி ஆளா இருந்து என் ஆசைகளைப் புரிஞ்சு நடந்துக்குவ, நான் நல்லா படிச்சு, நல்லா சம்பாதிச்சு உன்னக் காப்பாத்துவேன்' என்று தன்னுடைய தாய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார், தந்தையை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பத்மா பிரியா. இப்படிப் பெரும்பாலானவர்களின் அற்புதமான கடித வரிகளைக் காண முடிந்தது.
""தங்கள் மனதுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைத்துவிடுவதுடன் தன்னுடைய மனதில் தோன்றுவனவற்றைப் பகிர்ந்து கொள்ளும் முறைதான் கடிதம் எழுதுதல் என்பது. அதைத்தான் மாணவ, மாணவிகளைச் செய்ய வைக்கிறோம்'' என்கிறார் பள்ளி முதல்வர் க. துளசிதாசன்.
ஆசிரியர்கள் ஆ. பரிமளாதேவி, பொன். ராமகிருஷ்ணன், கோ. மேகலா ஆகியோர், மாணவ, மாணவிகள் எழுதிய ஏறத்தாழ 500 கடிதங்களை வாங்கி, அவற்றை அப்படியே எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அவர் அத்தனையையும் படித்துவிட்டு 19 கடிதங்களைச் சிறப்பானவையாகத் தேர்வு செய்து பள்ளிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு, அந்த 19 பேருக்கும் தலா ரூ. 500-ஐ ஊக்கப் பரிசாக பள்ளி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. இப்போது எல்லாக் கடிதங்களும் அஞ்சல் செய்யப்பட்டு, பதில்களுக்காகக் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...