நடிகருக்காகக் கதையில்லை! அருள்நிதி
ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கோட்டூர்புரம் வீட்டுக்கு செல்ல அரை மணி நேரம் பிடிக்கும்... அந்த நேரத்தில் பேசலாமா...?


ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கோட்டூர்புரம்
வீட்டுக்கு செல்ல அரை மணி நேரம் பிடிக்கும்... அந்த நேரத்தில் பேசலாமா...? கேள்வி கேட்டு
எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார் அருள்நிதி. "தகராறு', "ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' என
பரபரத்து பயணிக்கிறது அருள்நிதியின் கார்....
"மௌன குரு' எதிர்பார்க்காத நேரத்தில் கைக்கு வந்த ஹிட்... இருந்தும் ஏன் இவ்வளவு இடைவெளி... வெற்றியைத் தக்க வைக்க அடுத்தடுத்த இடங்களில் இருக்க வேண்டுமே...?
"மௌன குரு' ரிசல்ட்டைப் பார்த்ததும் நிறைய இயக்குநர்கள் தேடி வந்தார்கள். அப்போதும் வெற்றிதான் கண் முன் நின்றது. அடுத்தும் எதிர்பார்க்கிற இடத்தில் இருக்க வேண்டும் என யோசித்தேன். புதுமுக இயக்குநர் கணேஷ் விநாயக் சிலிர்ப்பாக ஒரு கதை சொன்னார். அதுதான் "தகராறு'. முதல் படமே கனமாக அமைந்து போனது. எனக்கான அறிமுகத்துக்கு அந்த கதை, பெரிய இடம்தான். இருந்தாலும் நம்பிக்கை இருந்தது. "உதயன்' படத்தில் நிறையத் தவறுகள். இருந்தாலும் அது நல்ல கமர்ஷியல் பேக்கேஜ். பெரிதாக சறுக்கல் இல்லை. ஆனால் அடுத்த படத்தில் எல்லோரும் திரும்பி பார்க்கிற இடத்தில் இருக்க நினைத்தேன். அந்த தேடல்தான் "மௌன குரு'. இதுவரை எந்த ஃபார்முலாவிலும் நான் இல்லை. அதனால்தான் அடுத்தடுத்து நானே ஆச்சரியப்படுகிற கதைகளில் இருக்கிறேன். "தகராறு' செம ஆக்ஷன் ஏரியா. அதே நேரத்தில் காதலும் இருக்கிறது. சிம்புதேவன் இயக்கும் "ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்', அடுத்து "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை தயாரித்த லியோ புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் "நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என்ற காமெடி படம். எல்லா கதைகளுமே வெவ்வேறு ஏரியா. அதனால்தான் உடம்பை ஏற்ற, இறக்க ஜிம் வொர்க் அவுட்டுன்னு கஷ்டமாக இருக்கிறது. வயதும், இளமையும் கூட இருப்பதால் சமாளிக்க முடிகிறது. படங்கள் நன்றாக வரும் போது எல்லா வலிகளும் மறைந்து விடும்.
சிம்புதேவனும் பெரிய இடைவெளிக்குப் பின் வருகிறாரே... எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் இருக்கும்...?
விழுந்து விழுந்து சிரிக்கிற அளவுக்கு காமெடியும், கொஞ்சம் மனம் வருடும் இடங்களும் சரி பாதியாக இருக்கிற சினிமா அது. சிம்புதேவன் படங்களுக்கு நான் பெரிய ரசிகன். "இம்சை அரசன்' இப்போதும் ஆச்சரியம் தரும். சின்ன லைன் சொன்னார். அன்று முதல் சிம்புவைப் பின் தொடர்ந்து செல்கிறேன். எதற்கும் தயார் என்று ஒப்படைத்து விட்டேன். பிந்துமாதவி, அஸ்ரிதா ஷெட்டி, "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பக்ஸ் என நிறைய ஸ்டார்ஸ் இருக்கிறார்கள். சிம்புதேவன் ஸ்டைல் படம்தான். கொஞ்சம் உணர்வுகளும், காமெடியும் சரியாக கலந்த கதை.
இப்போதுதான் சினிமாவுக்கு வந்த ஃபீல் இருக்கும்... ஆனால் சின்ன சின்னதா நிறைய மாற்றங்களைப் பார்த்திருப்பீர்கள்... இதில் உங்களுக்கான இடம்..?
அதை உணர முடிகிறது. பத்து வருடத்துக்கு ஒரு முறை டிரெண்ட் மாறியே ஆகும். இது சினிமாவில் மட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் நடக்கும். மாற்றம் நல்லதுதானே?
முன்பை விட எதார்த்த கதைகள் நிறைய வரத் தொடங்கியிருக்கிறது. அதற்கு எதார்த்த முகங்கள்தான் தேவைப்படுகிறது. எந்த ஸ்டார் நடிகராக இருந்தாலும் அதற்குள் மட்டுமேதான் பயணிக்க முடியும் என்கிற நிலை வந்திருக்கிறது. நடிகருக்காக கதை செய்து காத்திருந்த இயக்குநர்கள் இப்போது இல்லை. உண்மையை மட்டுமே பேசுகிற கூட்டம் சினிமாவுக்கு வந்திருக்கிறது. இதை எல்லோருமே உணரும் தருணம் இது.
சமீபத்தில் திரைக்கு வந்தவர்களில் யாரையெல்லாம் பிடிக்கும்...?
விஜய் சேதுபதியை எல்லோருக்கும் பிடிக்கும். "தென்மேற்கு பருவக்காற்று' படத்திலிருந்தே அவரைக் கவனித்து வருகிறேன். நல்ல உழைப்பும், கதையைத் தேர்வு செய்யும் நிதானமும் அவரை நல்ல இடத்தில் வைத்திருப்பதாக நினைக்கிறேன். பக்கத்து வீட்டு பையன் போல.... தோளில் கைப் போட்டு பேசும் நண்பன் போல... ஒரு ஹீரோ வந்திருப்பது நல்ல விஷயம். சிவகார்த்திக்கேயனை என் அம்மாவுக்கு பிடிக்கும். விஜய் டி.வி.யில் வந்த "அது இது எது' நிகழ்ச்சிக்கு நான் பெரிய ரசிகன். அவர் இருக்கிற இடமும் இப்போது நல்லாவே இருக்கிறது. இன்னும் நிறைய பேர் சில நேரங்களில் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...