பழம் வாங்கப் பதிவு செய்ய வேண்டும்!
பழங்களின் ராஜா என அழைக்கப்படும் துரியன் பழம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. துரியா ஸிபெத்தினஸ் என்ற


பழங்களின் ராஜா என அழைக்கப்படும் துரியன் பழம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே காணப்படுகிறது. துரியா ஸிபெத்தினஸ் என்ற தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இந்த பழ ரகம் மலேசியாவை தாயகமாகக் கொண்டதாகும். உலகில் சுமார் 25 ரகங்களில் காணப்படும் துரியன் பழங்களில் 9 ரகங்கள் மட்டுமே உண்ணத்தக்கவையாகும்.
இந்த பழம் பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் பலாப்பழத்தை போல அளவில் பெரிதாக இருந்தாலும், இதில் 1 முதல் அதிகபட்சமாக 6 சுளைகள் மட்டுமே இருக்கும். அத்துடன் நன்கு பழுத்த இப்பழத்தின் மணம் புனுகுப் பூனையின் புனுகு வாடையைப்போல இருக்கும். மலேசிய மற்றும் தாய்லாந்து மொழிகளில் துரி என்றால் முள் என அர்த்தமாம். அதேபோல, புனுகுப்பூனையை ஸிபெத்தினா என அழைப்பார்களாம். புனுகின் மணத்தைப் போலவும், மேல்தோலில் முட்கள் நிறைந்தும் காணப்படுவதாலேயே இதை துரியா ஸிபெத்தினஸ் என அழைக்கின்றனர்.
இந்த பழத்தில் அதிக அளவில் ஈஸ்டிரோஜென் ஹார்மோன்கள் நிறைந்துள்ளதாக ஆராய்ச்சிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த ஹார்மோன்கள்தான் கரு உருவாவதில் பிரதான பங்கு வகிப்பவையாகும். அதனால், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இப்பழத்தை அதிகமாக பயன்படுத்தினால் விரைவில் கருத்தரிப்பர் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதன் காரணமாகவே இப்பழத்திற்கான மவுசும் அதிகமாகவே உள்ளது. இந்த பழத்தை வாங்குவதற்காக ஓராண்டுக்கு முன்னரே பதிவு செய்து வரிசையில் காத்திருப்போர் நூற்றுக்கணக்கில் உள்ளனர் என்பதே இப்பழத்திற்கான டிமாண்டை தெரிவிக்கும். இப்பழத்தைக் குறித்து மருத்துவ மூலிகைகள் ஆராய்ச்சியாளரான டாக்டர் எஸ்.ராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட
தகவல்களாவன:
துரியன் பழ மரங்கள் மிக உயரமான மரங்களாகும். 100 அடி உயரம் வரை வளரும் இம்மரங்களின் மீதேறி பழங்களை பறிக்க முடியாது. கொத்து கொத்தாய் பூக்கும் மலர்களிலிருந்து பெரும்பாலானவை காய்களாக மாறும். இவை பழமாகும்போது அவற்றின் பாரம் தாங்காமல் கிளைகளே உடைந்து விடுவதுண்டு. சாதாரணமாக ஒரு பழத்தின் எடை 4 கிலோ வரை இருக்கும். ஆண்டுக்கு இருமுறை காய்க்கும் திறன் கொண்டவை இவை. இந்தியாவில் கடல்மட்டத்திலிருந்து 800 அடி உயரம் வரையிலான மிதவெட்ப பகுதிகளில் மட்டுமே இவை வளரும். நீலகிரி மாவட்டத்தில் பர்லியார் மற்றும் கல்லார் பகுதிகளிலும், குற்றாலத்திலும் மட்டுமே இந்த மரங்கள் உள்ளன.
இத்தகைய மரங்களை நாற்றாக நட்டதிலிருந்து பலன் தருவதற்கு 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதாலேயே பெரும்பாலானோர் இவற்றை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இப்பழத்திற்கான தேவையைக் கருத்தில் கொண்டு மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளிலிருந்து இப்பழத்தை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். ஆனால், நீலகிரியில் வளரும் பழங்களிலேயே மருத்துவத்தன்மை அதிக அளவில் உள்ளதாக போர்ச்சுக்கல் உள்ளிட்ட வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும் குறிப்புகளை எழுதியுள்ளனர். இப்பழத்தின் சிறப்புக்காகவே ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வாரத்தில் தாய்லாந்தில் "சர்வதேச துரியன் பழ தினம்' அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் இப்பழத்தின் சுளைகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், மலேசியா போன்ற நாடுகளில் இதன் இலை முதல் தோல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையுமே பயன்படுத்துகின்றனர். இலையைக் காய்ச்சி எடுக்கப்படும் வடிநீர், காய்ச்சல் நிவாரணியாகவும், மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகவும், பழத்தின் சாறு டானிக்காகவும், தோல் பகுதிகள் தோல் நோய்க்கு மருந்தாகவும்
பயன்படுகின்றன.
இப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின்களும், தாது சத்துகளும், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து உள்ளிட்ட அனைத்து சத்துகளுமே இருப்பதால்தான் இதைப் பழங்களின் ராஜா என அழைப்பதாகவும் டாக்டர் ராஜன் தெரிவித்தார்.
மலைகளின் அரசியான நீலகிரி மலைக்கே உரித்தான பல்வேறு வளங்களும் இருந்தாலும், துரியன் பழமும் தமிழகத்திலேயே அதிக அளவாக நீலகிரியில் உள்ளது இம்மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும்.
ஒரு கொசுறு தகவல்:
புனுகின் மணம் வெளிநாடுகளில் வசிக்கும் பலருக்கும் பிடிக்காத ஒன்று என்பதால் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இப்பழம் பொது இடங்களில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...