சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

யாருக்கு "ரெட் சிக்னல்'?

பொய்த்துப் போன பருவமழை, "நகர்மய' வாழ்க்கை, "விலையில்லா' விவசாய உற்பத்திப் பொருள்கள்

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:11 am

சா. ஜெயப்பிரகாஷ்

பொய்த்துப் போன பருவமழை, "நகர்மய' வாழ்க்கை, "விலையில்லா' விவசாய உற்பத்திப் பொருள்கள் இவற்றின் ஊடாக விவசாயிகளின் நிலையை கண்ணாடியைப் போலக் காட்சிப்படுத்துகிறது "ரெட் சிக்னல்' நாடகம்.

வளர்ந்து வரும் இளம் நாடக இயக்குநர்களில் ஒருவரான கி. பார்த்திபராஜாவின் இயக்கத்தில், திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 35 பேர் நடித்த நாடகம் இது.

கட்டுப்படியாகாத நிலைக்கு மாறியுள்ள தமிழ்த் திருநாட்டின் முதல் முக்கியத் தொழிலான விவசாயத்தின் அவலத்தை பள்ளி மாணவர்களைக் கொண்டும் மேடையேற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பார்த்திபராஜா.

வீட்டுக் கிணறு வற்றிவிட்டதையும், ஆழ்குழாய் கிணறு அமைத்தும் தண்ணீர் வரவில்லையென்றும் மாணவர்கள் பேசிக் கொள்வதாகத் தொடங்குகிறது நாடகம்.

பள்ளிக்கூடத்தில் "அரிசி எங்கிருந்து வருகிறது?' என ஆசிரியர் கேள்வி கேட்க, நகர்ப்புற மாணவர்கள் எல்லோரும் "ஸ்பென்சரில் இருந்து...' என்றும், "சூப்பர் மார்க்கெட்டில் இருந்து...' என்றும் பதிலளிக்கின்றனர். கிராமப்புற மாணவன் ஒருவன்தான் "வயலில் பயிரிடப்பட்ட நெல்லில் இருந்து வருகிறது'

என்கிறான்.

வயல்வெளிகளை விலைக்கு வாங்க வந்த ஒரு கூட்டம், "இங்கே நெல்லு காய்க்கும் மரம் எங்கே இருக்கிறது?' எனக் கேட்க பார்வையாளர் தரப்பில் பலத்த சிரிப்பொலி.

தடுமாறிக் கீழே விழுந்த ஒருவர் "ஆம்புலன்ஸ் இருக்குமா?' எனக் கேட்க, "காயத்துக்கு எங்களிடம் வெள்ளைப்பூண்டுச் சாறு இருக்கிறது' என எளிதான மருத்துவம் சொல்கின்றனர் கிராமத்தினர்.

இப்படித்தான் கிராமம் குறித்தும், விவசாயம் குறித்தும் அறிமுகங்களோடு செல்கிறது நாடகம். அந்த ஊரில், ஊர்க் கூட்டம் போட்டு 500 ஏக்கர் விவசாய நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்வது குறித்துப் பேசுகிறார்கள்.

"விவசாயம் பொய்த்துப் போனதால் தொடர்ந்து நம் ஊரில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; எனவே நிலங்களை விற்றுவிடுவதைவிட வேறு வழியில்லை' எனப் பலரும் பேசுகின்றனர்.

தொடர்ந்து, பயிர்களுக்கு தண்ணீர் இல்லாததால் பூச்சி மருந்தைக் குடித்துச் சாகும் விவசாயி, தீர்க்க முடியாத கடன் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி, கந்துவட்டிக்காரனின் ஏளனப் பேச்சை சகிக்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி, விளைச்சல் அமோகமாக இருந்தும் விலையில்லாததால் தீயிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் பெண் விவசாயி என நால்வரின் தற்கொலைகள்.

தற்கொலைக் காட்சிகளை வெறும் கதாபாத்திரங்களாக மட்டுமல்லாமல், கிணறாக... தீயாக... மாணவர்களே வடிவமெடுத்த அரங்க அமைப்பும், அவர்களின் நடிப்பும் அற்புதம்.

"ஃபிளாஷ்பேக்' முடிந்து மீண்டும் ஊர்க்கூட்டம். "உசிராவது மிஞ்சட்டும்' என்ற பரிதாபத்துடன் நிலங்களை விற்க முடிவு செய்யப்படுகிறது. வரிசையாக நின்று கையெழுத்திட்டு பணத்தை வாங்கிக் கொள்கின்றனர், அழுதுகொண்டே.

முழு கிராமமும் மூட்டை முடிச்சுகளுடன் வரிசையாகப் புறப்படுகிறது. நகருக்குள் நுழையும்போது, சாலையைக் கடக்க நின்ற அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது "சிக்னல்'.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் மாணவி, "விவசாயமில்லாத நாடு யாருக்கான "ரெட் சிக்னல்?' என்ற கேள்வியுடன் முடிக்கிறார் நாடகத்தை. இதுவே நாடகத்தின் முடிவில் முன்வைக்கப்படும் - அச்சுறுத்தும் "கிளைமாக்ஸ்'. பின்னணி இசையிலும் இசை ஆசிரியரின் உதவியுடன் மாணவர்களே அசத்தினர்.

நாடகத் தயாரிப்பு குறித்து இயக்குநர் கி. பார்த்திபராஜா கூறியது:

"வழக்கமான நாடகத் தயாரிப்பு பாணியை கடைப்பிடிக்கவில்லை. ஏதோவொரு நாடகக் கருவை உருவாக்கிக் கொண்டு, வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்யச் சொல்லி நடிக்க வைக்கும் முயற்சி இல்லை.

பள்ளியிலேயே ஒரு வாரம் தங்கி, நாடகத்தில் பங்கேற்கப் போகும் 35 பேருக்கும் அடிப்படை நாடகப் பயிற்சிகளை அளித்துவிட்டு, நாடகக் கரு குறித்து விவாதித்தோம். முடிவில் விவசாயிகளின் நிலை குறித்து நடத்தலாம் என முடிவு செய்து பயிற்சிக்குள் சென்றோம்.

பள்ளிக் குழந்தைகள் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகச் செய்தார்கள். வழக்கமான நாடகங்களைக் காட்டிலும் அதிக திருப்தி இதில் கிடைத்தது' என்கிறார் பார்த்திபராஜா.

பள்ளிக்குள்ளே சில நூறு மாணவர்களுடன் மட்டுமே இந்த நாடகம் முடிந்து விடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.