சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சினி மினி

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் தமிழில் "இஷ்டம்' படத்தில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தெலுங்கில் நடித்த "சோலோ' என்ற

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:23 am

ஜி. அசோக்

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் தமிழில் "இஷ்டம்' படத்தில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தெலுங்கில் நடித்த "சோலோ' என்ற படம் தமிழில் "என் காதலுக்கு நானே வில்லன்' என்ற பெயரில் வெளிவருகிறது. ரோஹீத் ஹீரோ. பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மணிசர்மா இசையமைக்கிறார். ஷிவேந்திரன் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருக்கிறார் பரசுராம். இது நாள் வரை தன்னிச்சையாக வாழ்ந்து விட்டோமே என்று வருந்தும் ஹீரோ, தனக்கு வரும் மனைவியாவது சொந்த பந்தங்களுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான். இதே எண்ணத்தில் அவனை காதலிக்கும் பெண்ணும் நினைக்கிறாள். அவர்களின் நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் கதை. ""தெலுங்கில் நான் நடித்த முதல் படம் "சோலோ'. நானே எதிர்பாராத நேரத்தில் பெரும் வெற்றியைக் கொடுத்த படம். தமிழுக்கு இந்தப் படம் வருவதன் மூலம், முன்னணி இயக்குநர்களின் பார்வையில் என் நடிப்பு தெரியவரும் என நம்புகிறேன். அதன் மூலம் தமிழ் சினிமா வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்'' என தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார் நிஷா அகர்வால்.

ஸ்ரீவள்ளி ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படம் "ரம்மி'. விஜய்சேதுபதி, இனிகோ பிரபாகர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா, காயத்ரி நடிக்கின்றனர். சூரி, "ஆடுகளம்' ஜெயபாலன், சென்ட்ராயன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். லிங்குசாமியின் உதவியாளர் கே.பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி, இயக்கி அறிமுகமாகிறார். ""இதுவும் காதல் கதைதான். ஒரு வகையில் பார்த்தால் காதலும், ரம்மி சீட்டாட்டமும் ஒன்றுதான். 13 சீட்டு எடுத்து ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு ஆடி ஜெயிக்க வேண்டும். சிலருக்கு முதல் சீட்டிலே வெற்றி அதிர்ஷ்டம் தேடி வந்து விடும். ரம்மியில் ஆடி ஜெயிக்க வேண்டும். காதலில் போராடி ஜெயிக்க வேண்டும். விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி ஆகிய மூன்று பேரும் ஒவ்வொரு ஊரிலிருந்து வந்து ஒன்றாக படிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்படும் நட்பு, காதல் மற்றும் குடும்ப செண்டிமென்ட்டுகளை திரைக்கதையில் வைத்து கமர்ஷியல் பாணியில் இக்கதையை கையாண்டு இருக்கிறேன். 87-லிருந்து 90-ம் ஆண்டு கால கட்டத்தில் நடக்கும் கதையாக இது உருவாகிறது'' என்றார் இயக்குநர்.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரவலான பாராட்டுக்களைப் பெற்ற "குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்' படத்தை இயக்கிய ராஜ்மோகன் அடுத்து இயக்கும் படம் "வானவராயன் வல்லவராயன்.' சகோதர பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இதில் "கழுகு' கிருஷ்ணா அண்ணன் வேடத்திலும், மா.கா.பா. ஆனந்த் தம்பி வேடத்திலும் நடிக்கின்றனர். கதாநாயகி வேடம் ஏற்கிறார் மோனல் கஜ்ஜார். 15 வருட இடைவெளிக்குப் பின் சௌகார் ஜானகி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார். சந்தானம், தம்பி ராமைய்யா, கோவை சரளா, எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படம் குறித்து இயக்குநர் ராஜ்மோகனிடம் பேசிய போது, ""என் முதல் படத்தில் காதல் தோல்வி, கடற்புரத்து வாழ்வியல் என நிறைய சோகம் இருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைக்கதையை எழுதியிருக்கிறேன். கூட்டுக் குடும்ப வாழ்க்கை இன்றைக்கு இல்லாமல் போய் விட்டது. அண்ணன், தம்பி சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை இல்லை. அந்த ஓர்

ஏக்கம்தான் இந்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது. சகோதரர்களுக்கிடையே நிகழும் பாசம், அன்பு, காதல், கலாட்டா ஆகியவற்றைதான் கதையாக்கியாக்கி இருக்கிறேன்''

என்கிறார் இயக்குநர் ராஜ்மோகன்.

"குப்பி', "காதலர் குடியிருப்பு' ஆகிய படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கி தயாரித்திருக்கும் படம் "வனயுத்தம்'. சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை தழுவி உருவாகியிருக்கும் இப்படம் பல தடைகளைக் கடந்து இந்த மாதம் வெளியாகிறது.  வீரப்பனாக கிஷோர் நடித்திருக்கிறார். வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியாக விஜயலெட்சுமி நடிக்க, அதிரடிபடைத் தலைவர் விஜயகுமார் வேடத்தை அர்ஜூன் ஏற்று இருக்கிறார். தடைகளை கடந்து விட்டதால் படக்குழு சந்தோஷமாக இருக்க, சங்கடத்தில் ஆழ்ந்து இருக்கிறார் விஜயலெட்சுமி. படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த முத்துலெட்சுமி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு "கட்' கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முத்துலெட்சுமிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் விஜயலெட்சுமி நடித்திருக்கிற காட்சிகள் படத்திலிருந்து வெகுவாக நீக்கப்பட்டுள்ளதாம். கிஷோர், விஜயலெட்சுமி இணைந்திருக்கிற காட்சிகள் நிறைய இடங்களில் வருவதால், அனைத்து காட்சிகளையுமே வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறதாம்.

கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் சுதந்திரம் தேவை. எந்த காரணத்தையும் கொண்டு படைப்புலகில் அரசியல் பிரச்னைகள் நுழைந்து விடக் கூடாதென இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் "உனக்கு 20 எனக்கு 40' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தை பதிவு செய்தார். ""சினிமாவில் சிறு சிறு சலனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமா வசந்த காலத்தில்தான் இருக்கிறது. "பீட்சா', "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படங்கள் மாதிரியான சிறு முதலீட்டு படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகின்றன. இதைப்பார்த்து புற்றீசல் போல் படங்களை எடுத்து வெளியிடுகிறார்கள். படத்துக்கு கதை முக்கியம். அதை போல் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஹீரோயின்கள் அழகாக இருக்கிறார்கள். படைப்புலகம் சரியான பாதையில் செல்ல கலைஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கு சுதந்திரம் தேவை. கமலின் "விஸ்வரூபம்' படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. ஒரு முறை சென்சார் ஆன படத்தை தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு வலுவான விதிமுறைகள் வேண்டும்'' என்றார் ஆர்.கே. செல்வமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.