ஊனத்துடன் பிறந்தாலும் மனம் சோர்ந்து போகாமல், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஜெ. ரஞ்சித் குமார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் தேசிய, சர்வதேச அளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ள இவரை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய அளவிலான சிறந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரருக்கான விருதுக்கு அண்மையில் தேர்ந்தெடுத்தது.
மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருது பெற்றார் ரஞ்சித் குமார். அவரிடம் பேசியபோது....
""எனது சொந்த ஊர் மதுரை. பிறந்து 9 மாதத்திலேயே எனக்கு போலியோ நோய் கண்டது. எனது கால்கள் செயலிழந்தன. பள்ளியில் படிக்கும் போது விளையாட்டில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நடக்க இயலாத என்னை ஊக்கப்படுத்த யாரும் முன்வரவில்லை. இதனால், மற்றவர்கள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்ப்பேன். விளையாட்டில் சாதித்தே தீர வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. எனது ஆர்வத்திற்கு ஊக்கம் அளித்தவர் பயிற்சியாளர் பரசுராம். அவரது ஊக்குவிப்பால் 1999-ஆம் ஆண்டில் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினேன்.
2002-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றேன். அதன்பிறகு, காமன்வெல்த் போட்டிகள் மற்றும் சர்வதேச தடகளப் போட்டிகள் பலவற்றில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களைப் பெற்றேன்.
2010 முதல் இதுவரை 8 தங்கப் பதக்கங்களைக் குண்டு எறிதல், வட்டு எறிதல் பிரிவுகளில் பெற்றுள்ளேன். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 18 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 36 தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளேன்.
கடந்த 2007-ஆம் ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளராக சேர்ந்து ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி
வருகிறேன். இரு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தாலும்கூட இன்னும் அது செயல்படுத்தப்படவில்லை. இதனால், எனது குடும்பத்தினரைப் பராமரிப்பது சிரமமாக உள்ளது.
தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் ரூ. 500 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ. 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் சவாலாகத் திகழ்கின்றனர். தேவையான வாய்ப்புகள், பயிற்சிகள் இன்மையாலும், பொருளாதாரரீதியிலான பாதிப்புகள் உள்ளதாலும் நமது வீரர்களின் செயல்பாட்டில் குறைவு உள்ளது.
இவையெல்லாம் கிடைக்க வழிசெய்தால் உலக அளவில் நமது வீரர்கள் சிறந்த சாதனைகளை எட்டுவது திண்ணம். குறிப்பாக தடகளம் உள்ளிட்ட 12 விளையாட்டுகளில் நம்மால் சாதிக்க முடியும். அத்தகைய வீரர்களை ஊக்கப்படுத்தும் போது பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிச்சயமாக முதலிடத்தில் வரும்.
அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறும் இரண்டாவது பாரா ஏசியன் விளையாட்டுப் போட்டிக்காக என்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டு வருகிறேன். ஏற்கெனவே, கடந்த முறை லண்டனில் நடைபெற்ற பாரா ஓலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வான இந்தியக் குழுவில் நானும் இடம்பெற்றேன். ஆனால், கடைசி நேரத்தில் அதில் பங்கேற்க முடியாமல் போனது. வரும் முறை நிச்சயம் பங்கேற்று தங்கம் வெல்வதே எனது லட்சியம்.
தமிழகத்தில் சர்வதேச மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்கள் 100 பேரும், தேசிய அளவிலான மாற்றுத்திறன் வீரர்கள் 1,000 பேரும் உள்ளனர். மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றால் அதில் சுமார் 500 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் அதிகப்படுத்தினால். பல சாதனைகளைப் படைப்பார்கள்'' என்கிறார் ரஞ்சித் குமார்.
படங்கள்: டி.ராமகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

