டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதும் சினிமாவின் வேலைதானே!

பெருமிதமான பேச்சு... திளைக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் அட்லீ. 26 வயதான அட்லீ, இயக்குநர் ஷங்கரின் மாணவர். "எந்திரன்', "நண்பன்' என இரண்டே படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு "ராஜா ராணி' படத்தின் மூலம் புதுக் கடை போட வந்து விட்டார்!

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:26 pm

ஜி. அசோக்

பெருமிதமான பேச்சு... திளைக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் அட்லீ. 26 வயதான அட்லீ, இயக்குநர் ஷங்கரின் மாணவர். "எந்திரன்', "நண்பன்' என இரண்டே படங்களில் வேலை பார்த்த அனுபவத்தோடு "ராஜா ராணி' படத்தின் மூலம் புதுக் கடை போட வந்து விட்டார்!
 ஆர்யா - நயன்தாரா கல்யாணம் என பரபர பப்ளிசிட்டி தொடங்கி, படத்துக்கு ஒவ்வொரு நாளும் பரபரப்பு ஏறுதே....?
 எல்லாப் படங்களுக்குமே பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. அந்த வகையில்தான் கல்யாண லெவல் வரைக்கும் யோசித்தோம். ஆனா, தவறு எதுவும் நடந்துவிடவில்லை. யார் மனமும் புண்படவில்லை. எல்லோருமே நயன் - ஆர்யா கல்யாணம் உண்மையாக இருக்குமோ என யோசிக்கும் அளவுக்குதான் இருந்தது. இதில் நயனுக்கு எந்த வருத்தமும் இல்லை. தயங்கிக் கொண்டே கேட்டேன்.
 ""ஆமாம், படத்தின் கதையும் அதைப்பற்றியதுதானே. சரியா வந்தால் செய்யுங்கள்'' என்றார்.
 ஆர்யாவிடம் கேட்ட போது கூட, ""அதுதான் படத்தின் தீம். நல்லா பண்ணலாமே'ன்னு கொஞ்சம் யோசித்து சொன்னார். எல்லாமே சரியாக நடந்துவிட்டது. எந்தக் குறையும் இல்லை. வருத்தமும் இல்லை. படத்தை பார்க்கும் போது உங்களுக்கே அது நியாயமான விளம்பரம் என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு கதைக்கு பொருத்தமான புரமோஷன் அது.
 கல்யாணத்துக்குப் பிறகு ஜோடிகளை மாற்றிக் கொள்வது, காதலிக்கும் போதே சமரசம் செய்து கொள்வது என வெளியில் ஆயிரம் செய்திகள்.... உண்மையில் "ராஜா ராணி' எப்படிப்பட்ட படம்...?
 ஏழு மலை தாண்டி... ஏழு கடல் தாண்டின்னு இந்த கதையை சுலபமாக ஆரம்பிக்க முடியாது. ஆனால் விளங்காத எந்த விஷயமும் படத்துக்குள் இல்லை. நான் மதுரை பையன். சென்னைக்கு வந்து பார்த்த போது, நான் மதுரையில் பார்த்த காதலும், கல்யாணமும் வேறு மாதிரி இருந்தது. சென்னையில் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பயணிக்கிற இளைஞர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தந்தார்கள். எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஒரு சிலருக்கு நடந்து கொண்டிருக்கிறது. தேங்கி கிடக்கும் விவாகரத்து வழக்குகள் எத்தனை என்பது பற்றி புள்ளி விவரங்களே இல்லை. இனிக்க இனிக்க காதல்... சச்சரவு, சமாதானங்களுக்குப் பின் கல்யாணம்... வேகமான வாழ்க்கையில் காதலும், கல்யாணமும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த காதல்.. இந்த கல்யாணம் எல்லாவற்றிலுமே இப்போது குளறுபடிகள். காதலிக்கும் போது, கல்யாணத்தின் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு மனதுக்குள் ஒரு சஞ்சலம் இருக்கும். இதுவும் அப்படித்தான். ஒரு சர்ச்சில் ஆர்யா - நயனுக்கு கல்யாணம் நடக்கிறது. அவர்களின் கல்யாண வாழ்க்கையில் திடீரென்று ஜெய் - நஸ்ரியா வருகிறார்கள். இதற்கு மேலே உள்ளுக்குள் போய் இப்போது கதை சொல்ல முடியாது. காதலையும், கல்யாணத்தையும் நம்ம இளைஞர்கள் பார்க்கிற விதம் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர்களையெல்லாம் இந்தப் படம் சில நிமிஷங்கள் "டச்' செய்யும். கருத்து வேறுபாடுகள் என்ற பேச்சுக்கே இங்கே இடம் இல்லை. காதலும், கல்யாணமும் ஒரு சுவாரஸ்யமான பயணம் என்று இது சொல்லும். நம்ம கலாசாரத்தை கெடுக்கும் அளவுக்கு படத்தில் ஒரு துளி கூட விஷம் இல்லை. வாழக் கற்றுக் கொடுப்பதும், வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதும் சினிமாவின் வேலைதானே!
 ஷங்கர் சார் எப்போதுமே சின்சியர் சினிமாவுக்குள் இருப்பார். அவரிடம் இருந்து வரும் உங்களிடம் ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் தெரியுதே...?
 என் குரு. ரோல்மாடல், வழிகாட்டி எல்லாமே ஷங்கர் சார்தான். ஒரு குறும்படத்தை எடுத்துக்கொண்டு அவரிடம் இண்டர்வியூக்கு போனது, இப்போதும் கண் முன் நிற்கிறது. என் அப்பா, அம்மா யாரும் சினிமாவில் இல்லை. அதனால் சினிமாவை தொழிலாகத்தான் புரிந்து வைத்திருந்தேன். ""சினிமா தொழில் இல்லடா.. அது ஒரு வாழ்க்கைடா''ன்னு புரிய வைத்தவர் ஷங்கர் சார்தான். அப்புறம் நான் சினிமாவைப் பார்த்த பார்வையே வேறு... "எந்திரன்', "நண்பன்' படங்களில் அவரே வியக்கிற அளவுக்கு வேலை செய்தேன். அதற்கு மதிப்பு கொடுத்தோ, என்னவோ என்னை வெளியில், ""அட்லீ நல்லா வருவான்'' என்று பேசுகிறார். அந்த வகையில் ஷங்கர் சாரின் பாதிப்பு இந்தப் படத்தில் இருக்கும். சொல்லப் போனா, ஷங்கர் சார் மாதிரி சீரியஸ் சினிமா எடுக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், முதல் படத்தின் இயக்குநர் மீது இருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாவற்றுக்கும் "ராஜா ராணி'தான் பெஸ்ட் ஓப்பனிங்.
 தினமும் ஏதாவது ஒரு கிசு கிசு... சினிமா ஆள்களின் பார்வையில் கூட நயன் - ஆர்யாவுக்கு தனி இடம் இருக்கு... உண்மையில் அவங்க எப்படி...?
 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது கூட சத்யராஜ் சார் இதைத்தான் சொன்னார். ""ஆர்யா - நயன் ஜோடியை பார்க்கும் போது எம்.ஜி.ஆர். - சரோஜாதேவியை பார்ப்பது மாதிரி இருக்கு'' என்றார். உண்மையிலேயே அவர்களுக்குள் ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள். ஆர்யாவை ""ஜானி''ன்னு நயன்தாரா கூப்பிடுவாங்க. ""நயன்''னு இவர் கூப்பிடுவார். காதலைத் தாண்டி உண்மையில் ஒரு "ஸ்பெஷல்' இருக்கிறது. இது எங்கே போய் நிற்குமோ?
 26-வது வயதில் ஒரு படம்... பலருக்கும் சாத்தியம் இல்லாதது... எப்படி?
 கனவு காணுங்கள் என்ற அப்துல்கலாம் அய்யாவின் வாசகம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சினிமாவில் ஓர் இடம் கிடைத்ததும், ""ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்தேன்''னு எல்லோரும் சொல்லுவார்கள். அது தவறு. இனிமேதான் கஷ்டப்பட நிறைய இருக்குன்னு பலருக்கும் புரிவதில்லை. ஆச்சரியமான இடங்கள் நிறைய காத்திருக்கும் போது, ஒரே இடத்தில் நின்று ""நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்''னு அனுதாபம் தேடுவது எனக்குப் பிடிக்காது. ஷங்கர் சார் எனக்கு சினிமாவில் கற்று கொடுத்தது கணக்கு வழக்கு இல்லை. "தளபதி' படம் பார்த்த பின்னர்தான் எனக்கு சினிமா ஆசையே வந்தது. அம்மாவிடம் போய் ""நான் சினிமா இயக்குநராகப் போகிறேன்'' என சொன்ன போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னதை அப்படியே நம்பினார் என் அம்மா. அன்று முதல் தனியா ஒரு மேடையில் நின்று பேசுவது போலவே கனவு கண்டேன். அதுதான் இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. கதையைக் கேட்டதும், ""ஏதோ புதுசா இருக்கு அட்லீ...''ன்னு ஆதரவு தந்தார். நல்ல மனுஷங்க நிறைய பேர் இருக்காங்க. நாமதான் எந்த முயற்சியும் செய்யாமல் வாழ்க்கையைத் துயரமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். கனவு காணுங்கள்... ப்ளீஸ்!
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.