ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் எழுத்தாளரின் பெயர்!

தமிழ் எழுத்தாளர்கள் வட்டாரத்தில் ஜே.எம். சாலி என்ற பெயரை அறியாதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்தபோது "கண்ணன்' மற்றும் "ஆனந்தவிகடன்' இதழ்களில் சிறுகதைகளும், முத்திரைக் கதைகளும், தொடர்கதைகளும், அவற்றுக்குப் பரிசுகளும் பெற்றவர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:08 am

த. சித்தார்த்

தமிழ் எழுத்தாளர்கள் வட்டாரத்தில் ஜே.எம். சாலி என்ற பெயரை அறியாதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்தபோது "கண்ணன்' மற்றும் "ஆனந்தவிகடன்' இதழ்களில் சிறுகதைகளும், முத்திரைக் கதைகளும், தொடர்கதைகளும், அவற்றுக்குப் பரிசுகளும் பெற்றவர். கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வியை முடித்துவிட்டு, அக்கௌன்டென்ட் ஜெனரல் அலுவலகத்தில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார் சாலி. 1964இல், நாகப்பட்டினத்தில் கப்பலேறி, சிங்கப்பூர் சென்று, அன்றைக்கு அங்கே இருந்த ஒரே தமிழ் நாளேடான "தமிழ் முரசி'ல் துணை ஆசிரியராகச் சேர்ந்தது எல்லாம் சுருக்கமான முன்கதை.

""என்னைத் தன் மகன் போலப் பார்த்துக்கொண்டு, பத்திரிகைத் துறையின் எல்லா அம்சங்களையும் சொல்லித் தந்தவர் ஆசிரியர், தமிழவேள் கோ. சாரங்கபாணி. சில சமயங்களில் தலையங்கம் கூட எழுதச் சொல்லுவார்'' என்கிறார் சாலி. அங்கே ஏழாண்டுகள் பணியாற்றியபின், சென்னை, "ஆனந்தவிகடனி'லிருந்து அழைப்பு வர, தாய் நாட்டுக்குத் திரும்ப வரும் எல்லோரையும்போலத்தான் சாலியும் ஆவலுடன் வந்து துணை ஆசிரியர்களில் ஒருவராகச் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் மணியனின் "மயன்' இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த அனுபவமும் சாலிக்குக் கிடைத்தது. மீண்டும் சிங்கப்பூர் சாலியை அழைத்தது.

""சிங்கப்பூர் வானொலியிலும் பின்னர் அதுவே தொலைக்காட்சியாக மாறியதும், எனக்கு தொடர்ந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. மொழி பெயர்ப்புப் பணியோடு, கற்பனைவளம் நிறைந்த படைப்புக்களையும் அங்கேயிருந்து உருவாக்க முடிந்தது''

என்கிறார்.

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் நூலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஜே.எம். சாலி. குத்துச் சண்டை வீரர் முகமது அலி, குங்க்பூ வீரர் ப்ரூஸ் லீ ஆகியவர்களின் வரலாற்றையும் எழுதியிருக்கிறார்.

இதெல்லாம் பழைய கதை. இப்போது சாலிக்கு சிங்கப்பூர் அரசு கலாசாரப் பதக்கம் அளித்து கௌரவித்திருக்கிறது. பரிசின் மதிப்பு எண்பதாயிரம் சிங்கப்பூர் வெள்ளிகள். கால்குலேட்டரை எடுத்து, சிங்கப்பூர் டாலரைக் கணக்குப் பண்ணினால் இன்றைய நிலைக்கு 35 லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும்.

""இது ஒருவகை மானியம் போல. என் எழுத்துக்கள் வேறு மொழிகளில் வரவும், குறிப்பாக சிங்கப்பூரைப் பின்னணியாகக் கொண்ட படைப்புகள் பிற மொழிகளில் வெளியாகவும், இந்தத் தொகையைக் கொடுப்பார்கள்'' என்கிறார் சாலி. முதலில் தம்மை உருவாக்கிய தமிழவேள் சாரங்கபாணி அவர்களைப் பற்றியும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உழைத்த கோவிந்தசாமி பிள்ளை, பக்கிரிசாமி பிள்ளை, யூசுப் இஷாக் ஆகியோரைப் பற்றியும் எழுதப் போகிறாராம்.

""இந்த உயர்ந்த விருது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த அங்கீகாரம். பல அமைச்சர்கள் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு என் கருத்துக்களைக் கேட்டறிந்தார்கள்'' என்கிறார் சாலி.

சிங்கப்பூருக்கு அனைத்துலக அங்கீகாரத்தைத் தேடித் தந்த ஐந்து சீன, மலாய், தமிழ் எழுத்தாளர்களின் பெயர்களை, 2005-ல் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அன்றைய தகவல், கலை அமைச்சர் டாக்டர் லீ பூன் யாங். அதில் டாக்டர் லீ குறிப்பிட்ட ஒரே தமிழ் எழுத்தாளர் ஜே.எம். சாலி மட்டுமே. ஏற்கெனவே சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு மன்றம் சாலியின் "நோன்பு' சிறுகதைத் தொகுப்புக்கு 1996ல் பரிசு வழங்கியிருக்கிறது. ஏராளமான சிறுகதைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார் சாலி.

விருதைப் பெற்ற பிறகு, முதன் முதலாக இந்த மாதம் சென்னைக்கு வந்திருந்த ஜே.எம். சாலிக்கு, அமிழ்தத் தமிழ் ஆய்வகம் சார்பில் பாவலர் இளவரசு அமிழ்தன் பாராட்டு விழா நடத்தினார். "இலக்கியவீதி' பதிப்பித்த சாலியின் "முத்திரை நினைவுகள்' நூலை முனைவர் தெ.ஞானசுந்தரம் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.