நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மலையாம்பட்டி முதல் ஜெர்மனி வரை!

 தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்து குடிசை வீட்டில் இருந்து அரசு ஆரம்பப் பள்ளியில் தன் படிப்பைத் துவங்கிய தாழ்த்தப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் இன்று தமிழக அரசு உதவியுடன் ஜெர்மன் பல்கலைக்கழகத

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:14 pm

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

 தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்து குடிசை வீட்டில் இருந்து அரசு ஆரம்பப் பள்ளியில் தன் படிப்பைத் துவங்கிய தாழ்த்தப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளி ஒருவரின் மகன் இன்று தமிழக அரசு உதவியுடன் ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிப் படிப்பை பயின்று வருகிறார். அவர் பெயர் மணிகண்டன். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ளது இவரின் சொந்த ஊர் மலையாம்பட்டி கிராமம். மலையாம்பட்டியிலிருந்து ஜெர்மனியில் கால் பதித்திருக்கும் மணி

 கண்டனின் வாழ்க்கைத் தடங்கள்...

 ""என்னுடைய அப்பா பொன்னுசாமி, அம்மா பாப்பாத்தி ஆகியோர் விவசாய கூலித் தொழிலாளிகள். கஞ்சிக்கு கஷ்டப்பட்டாலும் என்னையும் என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரியையும் நன்றாக படிக்கவைத்தனர். மின்வசதியற்ற எங்களின் வீட்டிலிருந்துதான் நான் பத்தாம் வகுப்பு வரை வடுகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன்பின் ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றேன்.

 பிறகு, வறுமை காரணமாகப் படிப்பை இடையில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவனத்தில் இரு ஆண்டுகள் பணியாற்றினேன். படிப்பைப் பாதியில் நிறுத்தினாலும், எனக்குள், எனக்குப் பிடித்த உயிர்வேதியியல் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தீ அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது. என்னுடைய இந்த ஆர்வம் எனது உறவினர் ஒருவரின் உதவியுடன் நிறைவேறியது. அவரது உதவியால் எஸ்.ஆர்.எம் கலை அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் சேர்ந்தேன். அப்போதே இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் வளர்த்துக் கொண்டேன். பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முதுநிலைக்கல்வி பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

 அதன்பின், சென்னையிலிருக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி மையத்திலும், அடையாறு புற்றுநோய் மையத்திலும் திட்டப்பணிகளை முடித்

 தேன்.

 இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்: இதன்பிறகு, பெங்களூரில் உள்ள அகில இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சியாளராகச் சேர்ந்து புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். அப்போதே பல்வேறு பல்கலைக்

 கழகங்களில் நடக்கும் கருத்தரங்கு

 களில், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்

 டிருந்தேன்.

 எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விலங்கியல் துறை விரிவுரையாளர் சங்கரய்யா, மாலிகுலர் பயாலஜி விரிவுரையாளர் சண்முகம், பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பாஸ்கர் டிபான்கர் நந்தி ஆகியோர் என்னிடம் இருந்த ஆர்வத்தை பார்த்து பயோ கெமிஸ்ட்ரி துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிவுரை வழங்கினர்.

 தற்போது புற்றுநோய்க்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளால் உடல் மாற்றம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் உள்ளதால், குறைந்த மாத்திரைகளைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். விலங்குகள் அளவிலேயே இதனைப் பரிசோதிக்க முடிந்தது. மனிதர்கள் அளவில் இதனைப் பரிசோதிக்க அனுமதி கிடைக்கவில்லை.

 மேலும் குழுவாகச் சேர்ந்து நடத்திய எங்களின் கண்டுபிடிப்புக்கு இந்தியா, அமெரிக்கா நாடுகளின் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளோம். இக் கண்டுபிடிப்புகள் பல்வேறு உயிர்வேதியியல் துறை தொடர்பான இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, மேல்நாட்டு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பித்தேன் ஜெர்மன் கலோன் பல்கலைக்கழகத்தில் இருந்து 2010-ல் அழைப்பு வந்தது.

 ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி: இதனையடுத்து, தமிழக முதல்வர் தனிப்பிரிவின் மூலம் உதவியை நாடிய எனக்கு, ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத் துறை மூலம் ஆராய்ச்சிப் படிப்பு முடியும் வரை ஆண்டுக்கு ரூ.22 லட்சம் 2011-ல் கல்வி நிதி ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது. இதன்படி, இந்த நிதி தொடர்ந்து 3 ஆண்டுகள் அல்லது ஆராய்ச்சி பணி தொடர்ந்தால் நான்கு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும். இதற்கான முதல் தவணையை தமிழக அரசிடம் பெற்றுக்கொண்ட நான், கடந்த ஆண்டு ஜெர்மன் கலோன் பல்கலைக்கழகம் சென்று "இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஜெனடிக்ஸ்' பிரிவில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து, ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டு வருகிறேன்.

 மனித செல்களில் புரோட்டினின் பணி என்ன? என்பது குறித்து ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டுள்ளேன். எனது ஆராய்ச்சிப் படிப்பின் வழிகாட்டி டாக்டர் ஜூர்ஜென் டோமென். எனது ஆராய்ச்சி பணியை முடித்து தாய்நாட்டுக்குத் திரும்பி சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்'' என்றார் மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.