ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நம்புங்கள் இவர்களை!

சமூகத்தின் மீதான எந்த அக்கறையும் இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள்; இது மிகவும் ஆபத்தானது என்ற குரலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குகளும் இருக்கத்தான்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:44 pm

சா. ஜெயப்பிரகாஷ்

சமூகத்தின் மீதான எந்த அக்கறையும் இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள்; இது மிகவும் ஆபத்தானது என்ற குரலில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் திருச்சியில் ஓர் இளைஞர் குழு "டிரஸ்ட் மீ' என்ற பெயரில் ஒரு சமூக சேவை மையத்தை கடந்த 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற நிறுவனங்களிடம் இன்னொரு சிக்கலும் இருக்கிறது, அது நிதி. எங்கிருந்து வருகிறது; முழுமையாக பயனாளிகளுக்கு சென்று சேருகிறதா? இந்தக் கேள்விகள் எழும்.

"டிரஸ்ட் மீ' இதிலும் வித்தியாசம். இதன் 14 உறுப்பினர்களும் ஒருகாலத்தில் சமூகப் பணித் துறை மாணவர்கள். அப்படியே ஒவ்வொருவரும் ஒரு வேலைக்குச் சென்ற பிறகு, சொந்த நிதியைக் கொண்டும், நண்பர்கள் மூலம் கிடைக்கும் கொடையாளர்களைக் கொண்டும் நிதி திரட்டுகிறார்கள்.

அந்த நிதியின் மூலம் "எச்ஐவி-எய்ட்ஸ்' பாதித்த பெண்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் "வாழ்வளிக்கிறார்கள்' என்று சொன்னால் இதில் கொஞ்சமும் மிகையில்லை. இதுவரை எந்த பெரிய நிதி நிறுவனத்தையும் இவர்கள் நாடியதில்லை.

"டிரஸ்ட் மீ' மையத்தின் அமைப்புச் செயலர் பிரபு நடராஜன். நாமக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இவருக்கு வயது 29. "டிரஸ்ட் மீ'யின் பணிகளை விவரிக்கிறார் பிரபு நடராஜன்:

""எங்களிடம் இப்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 196 பெண்களும், அவர்களின் 286 குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனர். 196 பெண்களும் "எச்ஐவி' தொற்றாளர்கள் என்பதும், இவர்களில் 80 சதவிகிதம் பேர் இளம் விதவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 286 குழந்தைகளில்- 29 ஆண் குழந்தைளும், 18 பெண் குழந்தைகளும் எச்ஐவி தொற்றாளர்கள்.

மாதம்தோறும் இவர்களை அழைத்து ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை வழங்குகிறோம். முதல் வாரம் பழங்கள், அடுத்தடுத்த வாரங்களில் பருப்பு வகைகள்... ஒவ்வொரு ஆண்டும் பெரிய பட்டியல் எடுத்து குழந்தைகளுக்கான கல்விச் செலவு, நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றையும் வழங்குகிறோம். இதுதான் எங்களுக்கு பெரிய செலவு.

இயல்பாக நோட்டுப் புத்தகங்கள்தானே என்று நினைத்துவிடாதீர்கள். இலவசமாகக் கொடுக்கும் நோட்டுப் புத்தகங்கள் வேறு, பள்ளிகளில் ஆசிரியர்கள் கேட்டு வாங்கிக் கொடுக்கும் நோட்டுப் புத்தகங்களின் விலையே வேறு!

அத்துடன் பள்ளிச் சீருடை, பென்சில், பேனா, காலணிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கொடுக்கிறோம்'' என்கிறார் பிரபு நடராஜன்.

"டிரஸ்ட் மீ'யின் செயலர் பிரேம்நாத், கட்டுமானத் தொழில் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றுகிறார். 31 வயது நிரம்பிய பிரேம்நாத் கூறுகிறார்:

""பள்ளிக் குழந்தைகளுக்கான செலவுகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் தேவைப்படும். ஆண்டுக்கு ஆண்டு இந்தத் தொகை அதிகரிக்கிறது. கொடையாளர்களைத் தேடித்தேடிப் பிடிக்கிறோம்.

அரசு மருத்துவமனைக்கு "ஏஆர்டி' மருந்து வாங்க, ஆலோசனை பெறச் செல்லும் நபர்களுடன் "டிரஸ்ட் மீ' சார்பில் ஒருவரையும் உடன் அனுப்பிவைக்கிறோம்.

குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஒவ்வொரு முறை தேர்வு முடிந்த பிறகும் கண்காணிக்கிறோம். மதிப்பெண் அட்டைகள் பெற்றோருக்குச் செல்கிறதோ இல்லையோ, டிரஸ்ட் மீ அலுவலகத்துக்கு வந்துவிடும்'' என்கிறார் பிரேம்நாத்.

நாம் அலுவலகத்துக்குச் சென்ற நேரத்தில் கணவனை ""எச்ஐவி'க்கு பலி கொடுத்திட்ட பெண்கள் சிலர் அங்கு இருந்தார்கள். "திருச்சி நகருக்கு வேறு வேலையாக வந்தாலும்கூட, "ஆபீஸýக்கு' போய்விட்டுப் போகலாம் என்று குழந்தைகள் கூறுவார்கள்'' என்கின்றனர் அவர்கள்.

ஒவ்வொரு முறையும் எங்கள் சொந்த ஊருக்கு - சொந்த வீட்டுக்கு வந்து செல்வதைப் போன்ற உணர்வு, மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதை அவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

""பெரும்பாலானவர்களின் கணவர்கள் இந்த நோய்தான் என்று கடைசிக் கட்டத்தில் தெரிந்து, உரிய மருத்துவச் சிகிச்சை எடுக்காமல் இறந்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து நோய்த் தொற்று பெண்களுக்கும் பரவியிருக்கிறது'' என்கிறார் மையத்தின் உறுப்பினர் ஐயப்பன் சங்கர். இவர், "சிபார்' என்ற தேசிய அளவிலான நிறுவனத்தில் ஊடகத் தொடர்பாளராகப் பணியாற்றுகிறார்.

"டிரஸ்ட் மீ' வெறும் உதவிகளுடன் நிறுத்திவிடுவதில்லை. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பயிற்சியும் அளிக்கிறது.

இவர்களின் கவனிப்பில் படித்த ஒரு மாணவி கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 500-க்கு 420 மதிப்பெண் பெற்றிருக்கிறார். விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் சில முன்மாதிரி இளைஞர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.