/

என்னுடைய வெற்றி ரசிகர்களின் வெற்றி! மாலி

தேசப்பற்று, சமூகக் கொடுமைகளுக்கு எதிரான கோபம், நகைச்சுவை, உறவுப் பின்னல்களைக் கொண்ட குடும்ப நாடகங்கள்.... என பலவிதமான உணர்ச்சிக் குவியல்களைக் கொண்ட நாடகங்களை கடந்த 50 ஆண்டுகளாக மேடையேற்றி வருபவர் மாலி

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:51 pm

பெ.சுப்ரமணியன்

தேசப்பற்று, சமூகக் கொடுமைகளுக்கு எதிரான கோபம், நகைச்சுவை, உறவுப் பின்னல்களைக் கொண்ட குடும்ப நாடகங்கள்.... என பலவிதமான உணர்ச்சிக் குவியல்களைக் கொண்ட நாடகங்களை கடந்த 50 ஆண்டுகளாக மேடையேற்றி வருபவர் மாலி. நாடக ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக இவரது பணி, கடந்த 1957-லிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 என். மகாலிங்கம் என்னும் இவரின் இயற்பெயரை "குடந்தை மாலி' என்று அன்புடன் மாற்றியவர் ம.பொ.சிவஞானம். அவர் பெயர்வைத்த ராசி, மாலி ஸ்டேஜில் தொடர்ந்து அரங்கேறுகின்றன பல புகழ்பெற்ற நாடகங்கள்.

 சமீபத்தில் அவரின் "ஞானபீடம்' நாடகம் நூறாவது காட்சியாக நாரத கான சபாவில் அரங்கேறியது. அந்த மகிழ்ச்சியையும் அவரின் நாடக வாழ்வில் கடந்த மைல்கற்களைப் பற்றியும் நம்மிடம் மாலி பகிர்ந்து கொண்டதிலிருந்து...

 ""பள்ளியில் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் படித்த என்னை தமிழ் இலக்கியங்களின் பக்கம் திருப்பிய பெருமைக்குரியவர் ம.பொ.சி. அவருடைய எழுத்துக்களும் பேச்சும் நாட்டுப் பற்றும் தமிழ் உணர்வும் என்னை மெய்மறக்க வைத்தது. என்னுடைய இளமைப் பருவத்தில் நான் பார்த்து வியந்த மிகப் பெரிய ஆளுமையாக ம.பொ.சி இருந்தார். அவரின் வழியில்தான் தமிழ் இலக்கியங்களின் செழுமையைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படித்ததை பிறருக்குச் சொல்வதற்கு நான் தேர்ந்தெடுத்த கலை வடிவம்தான் நாடகம்.

 நாடகம் போட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததே ஒழிய அதற்குரிய பொருளாதார வசதிகள் இல்லை. என்னுடைய நாடகத் திறமை வெளிப்படுவதற்கு அந்நாளில் பொருளாதாரக் கட்டைவிரலாக இருந்தவர் என்.கே.டி.முத்து. அவரின் தூண்டுதலால் விவேகானந்தா கல்லூரி மாணவனான நான், "தந்தை என் தெய்வம்' என்ற என்னுடைய முதல் நாடகத்தை அரங்கேற்றினேன். இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர் பரத்வாஜ். இன்றைக்கு "டம்மீஸ் டிராமா குழுவை' நடத்திவரும் ஸ்ரீதர், ஸ்ரீவத்ஸனின் தந்தைதான் பரத்வாஜ். இவரோடு விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் கணேசனின் சகோதரர் சுப்பிரமணியமும் நடித்தார். முதல் நாடகத்திலேயே ரசிகர்களின் பேராதரவு எனக்குக் கிடைத்தது.

 ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் என்னுடைய அடுத்த நாடகத்தை கொஞ்சம் விமர்சனப் போக்கோடு இருக்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்தேன். அந்த காலத்தில் இருபது வயது இளைஞராக இருந்தவர்களிடையே கடவுள் மறுப்புக் கொள்கை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். "ஆனந்தவிகடன்' இதழில் ஏ.கே.பட்டுசாமியின் பரிசுபெற்ற சிறுகதை "கடவுள் எங்கே?' இந்தக் கதைக்கு நாடக வடிவம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

 கடவுள் மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அவனுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு கடவுளை உணர்வதாக அந்தக் கதை முடியும். இந்த கதையை நாடகமாக்குவதற்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இறுதியில் அதற்கு நானே நாடக வடிவம் கொடுத்து அரங்கேற்றினேன். இந்த நாடகத்தில், நான் படித்த கல்லூரியில் எனக்கு விரிவுரையாளராக இருந்த கணேசன் முக்கிய வேடத்தில் நடித்தார். மாணவன் இயக்கிய நாடகத்தில் ஆசிரியர் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. அந்த நாடகத்தை ஒüவை சண்முகம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோர் பார்த்துவிட்டுப் பாராட்டியது, தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களே பார்த்து ஆசீர்வதித்த மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. இந்த நாடகத்தின் வெற்றி என்னை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இந்த நாடகம் அரங்கேறிய ஒருசில நாட்களில் என்னை, பெரியாரிடம் அறிமுகப்படுத்தும் போது ஒüவை சண்முகம், ""இவர்தான் "கடவுள் எங்கே?'' நாடகத்தை அரங்கேற்றியவர் என்று சொன்னார்.

 அதற்குப் பெரியார், ""நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்துகிறீர்கள்... அவ்வளவுதான்'' என்று மகிழ்ச்சியுடன் பேசினார். மாறுபட்ட கருத்துடையவர்களையும் நேசித்த அவரின் பண்பை எண்ணி இன்றைக்கும் வியக்கிறேன்.

 "கடவுள் எங்கே?' நாடகத்திற்கு ஜி.ராமநாதன்தான் இசையமைத்தார். புலவர் கீரன், புத்தனேரி சுப்பிரமணியம் ஆகியோர் பாடல்களை எழுதினர். டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.வீரமணி, டி.எஸ்.பகவதி ஆகியோர் பாடல்களைப் பாடினர். இப்படிப்பட்ட பிரபலங்களின் பங்களிப்பு, என்னுடைய நாடக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

 அன்றைக்கு எண்ணற்ற வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட நா.பார்த்தசாரதியின் "குறிஞ்சிமலர்' நாவலை நாடகமாக்கியதும் என் நாடக வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. இதைத் தொடர்ந்து ஆர்.சூடாமணியின் "ஆழ்கடல்', திருப்பூர் கிருஷ்ணனின் "பொய் சொல்லும் தேவதைகள்' ஆகிய படைப்புகளை நாடகமாக்கினேன். இந்த நாடகங்களுக்கு மக்கள் மன்றத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

 சுந்தரிபாய் என்னுடைய பல நாடகங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். செüந்தர்யன், எஸ்.ஆர்.கே. கோவை அனுராதா, புதுகை முகுந்தன், மணிமோகன், கே.எஸ்.என். சுந்தர் போன்ற பல நாடக ஆசிரியர்கள் என்னுடன் பணிபுரிந்திருக்கின்றனர்.

 நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் என்னிடம் ஒருமுறை, உங்களின் நாடகம் ஒன்றை இயக்குவதற்கு நான் ஆர்வமாக இருக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால், அது நடைபெறவில்லை.

 நாடகச் செம்மல், நாடக சேவாரத்னா, நாடக கலா பாரதி போன்ற பல விருதுகள் எனக்குக் கிடைத்திருந்தாலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரத்யேகமாக எனக்கும் என் குழுவினருக்கும் விருந்தளித்து மகிழ்ந்ததை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

 ஐம்பதாண்டுகளுக்கும் மேலான என்னுடைய நாடக வாழ்க்கையில் 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறேன். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட சாதனையாக நான் நினைக்கவில்லை.

 நாடகத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் சபாக்களின் சாதனை; இன்னும் சொல்லப்போனால், விரல் நுனியில் நூறு சேனல்கள் இருந்தாலும், மெனக்கெட்டு நாடகத்தைப் பார்க்கவரும் ரசிகர்களின் வெற்றியாகவே நினைக்கிறேன்!'' என்கிறார் நெகிழ்ச்சியான புன்னகையை இதழ்களில் தேக்கியபடி... மாலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.