சினிபிட்ஸ்
தெலுங்குப் படவுலகின் முன்னணி நாயகி இலியானாவின் காஸ்ட்யூம், திரையுலகினர் மத்தியில் வெகு பிரசித்தம். அதற்குக் காரணம், ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்துள்ள அவரது அம்மாதான். தன்னுடைய மேனிக்கு பொருத்தமாக விதவ


தெலுங்குப் படவுலகின் முன்னணி நாயகி இலியானாவின் காஸ்ட்யூம், திரையுலகினர் மத்தியில் வெகு பிரசித்தம். அதற்குக் காரணம், ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்துள்ள அவரது அம்மாதான். தன்னுடைய மேனிக்கு பொருத்தமாக விதவிதமான ஆடைகளையும் ஆபரணங்களையும் தேர்ந்தெடுத்துத் தந்து தன்னை அழகூட்டி அழகு பார்க்கும் தனது ஆசை அம்மா சமீராவுக்காகத் தன்னுடைய சொந்த ஊரான கோவாவில் ஒரு அதி நவீன காஸ்ட்யூம் கடையைக் கட்டி பரிசளித்திருக்கிறார் இலியானா. படப்பிடிப்புகளுக்காக வெளிநாடு செல்லும்போதெல்லாம் அங்கிருந்து பல வித்தியாசமான ஆடை, அணிகலன்களையும் வாங்கி வந்து இந்த ஷோ ரூமில் விற்பனைக்கு வைத்துவிடுகிறார் இலியானா.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள "ஆதாமின்டெ மகன் அபு' மலையாளப் படத்தை இயக்கிய சலீம் அகமது, தனது அடுத்த படத்துக்காக விக்ரமிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமுத்திரி ராஜா என்ற மன்னனின் தளபதியான குஞ்சாலி மரைக்காயரைப் பற்றியது இந்தக் கதை. ஓர் இந்து மன்னனுக்காக இஸ்லாமியத் தளபதி ஒருவர் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக நடத்திய போர் பற்றிய இந்த உண்மைக் கதையில் விக்ரமுக்கு தளபதி கதாபாத்திரம்.
தனுஷுடன் "மயக்கம் என்ன', சிம்புவுடன் "ஒஸ்தி' படங்களில் நடித்துள்ள ரிச்சா கங்கோபாத்யாயாதான் தற்போதைய தமிழ் சினிமாவின் "ஹாட் கேக்'. "வாமனன்' படத்தை இயக்கிய அகமது, தனது புதிய படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ரிச்சாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அவரும் உடனடியாகச் சம்மதித்து தேதி ஒதுக்கித் தந்துள்ளார். ஆனால் இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஜீவாவுடன் நடிக்க கால்ஷீட் இல்லை எனக் கைவிரித்து விட்டார் ரிச்சா. இதற்குக் காரணம் "ஒஸ்தி' நாயகன்தான் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஜீவாவுடன் சமீப காலமாக பகிரங்கமாக மோதி வரும் சிம்பு, ரிச்சாவிடம் ஜீவாவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அந்தப் படத்தில் நடிக்க விடாமல் செய்துவிட்டார் என்பதுதான் கோலிவுட் கிசுகிசு.
திரையுலகில் முன்னணியில் இருக்கிறாரோ இல்லையோ ட்விட்டரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொடர்பாளர்களைப் (FOLLOWERS) பெற்று முன்னணியில் இருக்கிறார் ஜெனீலியா. இதற்காக தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் கணினி முன் அமர்கிறார். சமீபத்தில் தான் வாங்கிய வளையல், தோடு, ஆடை, பார்த்த படங்கள், அவற்றைப் பற்றிய விமர்சனங்கள் எனப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார். தான் தும்மியதைக் கூட ட்விட்டரில் பதிவு செய்யும் ஜெனீலியா, தனது திருமண விஷயத்தைப் பற்றி மட்டும் எதுவும் சொல்ல மாட்டேன்கிறார் என்பதுதான் பலருடைய ஆதங்கம்.
அண்மையில் "ஏழாம் அறிவு' படத்தைப் பார்த்த ஷாருக் கான், உடனடியாக ஸ்ருதிஹாசனைத் தொடர்புகொண்டு பாராட்டியிருக்கிறார். "உங்களுக்கான இடம் இதுவல்ல. நீங்கள் நினைத்தால் இன்னும் உயரத்துக்குச் சென்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழலாம். இந்திப் படவுலகில் உங்களைப் பெரிய நடிகையாக ஆக்கும் பொறுப்பு என்னுடையது' என்று வாக்களித்துள்ளாராம். இதனால் ஜுனியர் என்.டி.ஆருடன் தான் நடிக்கவிருந்த புதிய தெலுங்குப் படத்தை நிராகரித்துவிட்டாராம் ஸ்ருதிஹாசன்.
"மங்காத்தா' படத்துடன் க்ளவுட் நைன் மூவிஸில் துரை தயாநிதியின் "பிடி' ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அவருக்குப் பதிலாக மு.க.அழகிரியின் மருமகன் விவேக் ரத்னவேல் பட நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்கிறார். வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் "வட சென்னை' படம், புதியவர் நிர்வாகத்தில் தயாராகவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
சர்வதேச அளவில் பரவலான பாராட்டுகளையும் விருதுகளையும் வென்ற "மஸூம்', "மிஸ்டர் இண்டியா', "டைம் மெஷின்', "பேண்டிட் குயின்', "எலிசபெத்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சேகர் கபூர் முதல் முறையாகத் தமிழில் நடிக்கிறார். தான் இயக்கி நடிக்கும் "விஸ்வரூபம்' படத்தைப் பற்றி சேகர் கபூருடன் பல முறை கதை விவாதம் செய்துள்ளார் கமல்ஹாசன்.
படத்தில் இடம்பெறும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தைச் சுட்டிக் காட்டி அதில் சேகர் கபூர் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கெனவே இருவருக்கும் நெருங்கிய நட்பு உள்ளதால் சேகர் கபூரும் உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துவிட்டார்.
""விஸ்வரூபம்' படத்தின் கதையைக் கேட்டு நான் பிரமித்துவிட்டேன். படத்தில் ஒரு புதுமையான வேடம்; அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்' என்றார் கமல். ""நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் உடனே சம்மதித்துவிட்டேன். நண்பனுக்காக தமிழ் நடிகனாக மாறிவிட்டேன்'' என தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் சேகர் கபூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...