குறிஞ்சியில் ஒரு பாலை !
தவமுதல்வன் ஓர் எழுத்தாளர். தினமணி - நெய்வேலி சிறுகதைப் பரிசு, இலக்கிய சிந்தனை பரிசு போன்ற மெல்லிய இலக்கிய அங்கீகாரம் இவருக்கு உண்டு. இலங்கை மலையகத்திலிருந்து அகதிகளாகத் திருப்பி அனுப்பப்பட்டு தங்கள் ம


தவமுதல்வன் ஓர் எழுத்தாளர். தினமணி - நெய்வேலி சிறுகதைப் பரிசு, இலக்கிய சிந்தனை பரிசு போன்ற மெல்லிய இலக்கிய அங்கீகாரம் இவருக்கு உண்டு. இலங்கை மலையகத்திலிருந்து அகதிகளாகத் திருப்பி அனுப்பப்பட்டு தங்கள் மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை நாவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நாவல் வடிவத்தைவிட, காட்சி ஊடகங்களின் மூலமாகவே அத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தார். அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக அப்படியே "பச்சை ரத்தம்' என்ற ஆவணப் படமாக்கியிருக்கிறார்.
""இவர்கள் 1800ம் ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் சாதாரணமானதல்ல. ஆயிரக்கணக்கான உயிர்களை பயணத்திலேயே பறிகொடுத்துதான் சென்றுள்ளனர். வெள்ளைக்காரனின் ஏஜெண்டுகள் போல செயல்பட்ட கங்காணிகளால் தமிழகத்திலிருந்து பிடித்து செல்லப்பட்ட இம்மக்கள்தான் இலங்கையில் முதன்முதலில் காபி பயிரிட்டனர். பிறகே தேயிலைப் பயிரிட்டனர். சுரங்கப் பாதைகள், பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டன. இலங்கையின் முதுகெலும்பான தேசிய வருவாய் இவர்கள் உருவாக்கிய தேயிலை உற்பத்தியில்தான் ஈட்டப்பட்டது. ஆனால், இந்த மக்களுக்குக் கிடைத்ததோ ஏளனப் பட்டங்கள்தான்.
பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி பழகிவிட்ட இந்த மக்களுக்கு உழவுத் தொழிலும்கூட தெரியாத நிலை. தாயகம் திரும்பி வந்தபோது, தங்கள் சொந்த ஊர்களில் விட்டுச் சென்ற நிலங்களிலோ வேறு மனிதர்களின் ஆக்கிரமிப்பு. வேறுவழியில்லாமல் தமிழகத்தின் தேயிலைத் தோட்டங்களிலேயே வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அரசு நாளொன்றுக்கு 119 ரூபாய் கூலி தரவேண்டும் என்று நிர்ணயம் செய்திருக்கிறது. பல இடங்களில் அதை நிறைவேற்றுவதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அங்கன்வாடி வசதி, மருத்துவ விடுப்பு, பொழுதுபோக்கு போன்ற பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எஸ்டேட்டைவிட்டு வெளியே செல்வதும் வருவதும்கூட பல எஸ்டேட் உரிமையாளர்களின் தயவோடுதான். கொத்தடிமை வாழ்க்கை. இந்த வாழ்க்கையை ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும். அரசின் பார்வைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் இந்த ஆவணப்படத்தின் நோக்கம்'' என்று உருக்கமாகப் பேசத் தொடங்கினார் தவமுதல்வன்.
பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் மலைகள், பசுமை போர்த்தியிருக்கும் வனங்கள், நீர் வழியும் சுனைகள், மலைகளின் விளிம்பிலிருந்து வெள்ளியை உருக்கினாற்போல கொட்டும் அருவிகள், ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் மலர்கள், சில்லென்ற குளிர்க் காற்று, பச்சைக் கம்பளமாய் விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள் இவை யாவுமே மலைகளை நோக்கி பயணிப்போருக்கு உற்சாகத்தையும் பரவசத்தையும் தருபவை என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆவணப்படத்தில் வளமை இல்லை, பசுமை இல்லை. நாம் பரவசப்பட்ட அத்தனையும் கேள்விக்குறியாகி மனதைத் தைக்கிறது. வளமைக்காகவும், பசுமைக்காகவும் உழைக்கின்ற உழைப்பாளிகளின் கதையைச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.
""பசுமை படர்ந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்களிடையே நாம் நடக்கத் தொடங்கி இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும், தேயிலை மலைகளை நோக்கியே இன்னும் நடந்து கொண்டிருக்கிறோம். உயிரை பணயம் வைத்து கடல் கடந்து போனோம். தொட்டால் துலங்கி விடும் கரங்களால் இலங்கையின் மலைகளைப் பசுமை மாறா தேயிலை மலைகளாக மாற்றினோம். இலங்கை உயர்ந்தது. ஆனால், ஒப்பந்தங்களின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். மீண்டும் தேயிலையின் வேர்களிலேயே சரணடைந்தோம். வால்பாறை, தேனி, மூணாறு, நீலகிரி என எல்லா மலைகளும் பசுமை போர்த்தி உயர்ந்து நிற்கின்றன. நாம் உழைத்தோம். தேயிலையின் வேர்களுக்கு நமது தலைமுறையினரே உரமாகிப் போயினர். மரமாய் வளர வேண்டிய தேயிலை குறுகி நிற்பதைப்போல நமது சந்ததிகளும் இன்னும் அடிப்படைத் தேவைகூட நிறைவேறாமல் மலையின் மடிப்புகளிலேயே அமிழ்ந்து கிடக்கின்றனர்.
உலகம் நமது வாழ்க்கையை தேனீராகப் பருகிக் கொண்டிருக்கிறது. சோர்வு வரும் போதெல்லாம் தேனீரால் உற்சாகமடைகின்றது. நம்முடைய வாழ்க்கையோ சோர்விலும், இடம் பெயர்தலிலும் இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டது. உழைப்பையே நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களின் அவல வாழ்வை, தேயிலைத் தோட்ட அனுபவங்களை, போற்றப்படாத உழைப்பின் கண்ணீர் கதைகளை இந்த ஆவணப்படத்தில் அவர்களே பேசுகின்றனர்.
தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வது அவ்வளவு எளிதானதல்ல. வனவிலங்குகள், அட்டைக்கடி என்றெல்லாம் இவர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். இந்த கசப்பான அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டு பெருந்தோட்ட நிறுவனங்கள் இவர்களது உழைப்பால் உயர்ந்து நிற்கின்றன. இரண்டு நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் இருக்கின்ற சோகம்தான் இந்த ஆவணப்படம். இது அரசின் பார்வைக்குப் போனால் இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரும் என்பது என் நம்பிக்கை'' என்றார் தவமுதல்வன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...