நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சினி பிட்ஸ்...

சினி பிட்ஸ்...  பாரதிராஜாவின் கனவுப் படமான "அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் அம்மா ராதாவின் கட்டளைப்படி, சம்பளத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நடித்து வருகிறார் கார்த்திகா. படத்தின் நாயகனான இ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:27 pm

மனோஜ் கிருஷ்ணா

சினி பிட்ஸ்...

 பாரதிராஜாவின் கனவுப் படமான "அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தில் அம்மா ராதாவின் கட்டளைப்படி, சம்பளத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நடித்து வருகிறார் கார்த்திகா. படத்தின் நாயகனான இயக்குநர் அமீர் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பாரதிராஜாவின் வேண்டுகோளை ஏற்று இருபது ஆண்டுகளாக தான் ஆசையாக வளர்த்து வந்த தாடியைத் தியாகம் செய்திருக்கிறார்.

 தெலுங்கானா பிரச்னையை மையமாக வைத்து விஜயேந்திர பிரசாத் இயக்கும் "ராஜண்ணா' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நாகார்ஜுனா. சுதந்திரப் போராட்டக் கால கட்டத்தில் நடைபெறும் இந்தக் கதைக்காக ரூ.20 லட்சம் செலவில் தன்னுடைய ஹேர் ஸ்டைலை வித்தியாசமாக மாற்றியிருக்கிறார். இதற்காக பாலிவுட்டின் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஸ்டீவ் என்பவரிடம் இரண்டு மாதம் மெனக்கெட்டிருக்கிறார். நாகார்ஜுனாவின் தலை முடிக்கு ஆன இந்த செலவு தயாரிப்பாளரின் தலையைத்தான் பதம் பார்த்திருக்கிறது.

 தான் இயக்கும் "முகமூடி' படத்தின் தொடக்க விழாவில் நாயகன் ஜீவாவைப் பற்றி குறிப்பிடுகையில் "ஜீவா போல அர்ப்பணிப்புடன், புரிந்துகொண்டு நடிக்கும் நடிகர் யாரும் இல்லை' என்றெல்லாம் பெருமையாகப் பேசினார் மிஷ்கின். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட கமல், சூர்யா, அஜித் ஆகியோர் கால்ஷீட் தர மறுத்துவிட்டதால்தான் ஜீவாவைப் புகழ்வது போல அவர்களை மறைமுகமாகத் தாக்கிப் பேசுகிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. அடுத்து பேசிய ஜீவா, ""அஞ்சாதே' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க முதலில் என்னைத்தான் அழைத்தார். நான்தான் இன்னும் மீசை கூட சரியாக முளைக்கவில்லை. அதற்குள் எப்படி போலீஸ் வேடத்தில் நடிப்பது? இன்னும் வயதாகட்டும் எனக் கூறி மறுத்துவிட்டேன். மிஷ்கின் திறமையானவர். அவர் கேட்டால் தொடர்ச்சியாக எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவேன்'' என்றார். "ஒஸ்தி' படத்தில் மீசையில்லாமல் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சிம்புவைத்தான் தாக்கிப் பேசுகிறார் ஜீவா' என அதற்கும் சினிமா வட்டாரத்தில் ஓர் அர்த்தம் கற்பிக்கப்பட்டது.

 முதல் படமான "பொல்லாதவன்' மூலம் கவனம் ஈர்த்து, அடுத்து இயக்கிய "ஆடுகளம்' படத்தில் சிறந்த இயக்கத்துக்கும் சிறந்த திரைக்கதைக்கும் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற வெற்றிமாறன் "நான் ராஜாவாகப் போகிறேன்' படத்துக்கு வசனகர்த்தா ஆகியிருக்கிறார். நகுல் நடிக்கும் இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். "இப்படி ஒரு கதையை இயக்க வேண்டும் என நினைத்திருந்தேன். என் சிந்தனைக்கு ஏற்ற அதே போன்ற கதையைப் பிருத்வி சொன்னதால் நான் இயக்காவிட்டாலும் பரவாயில்லை; வசனம் எழுதலாம் என சம்மதித்தேன்' என்கிறார் வெற்றிமாறன்.

 இயக்குநராக இருந்து நடிகராக மாறிய சுந்தர்.சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு "மசாலா கபே' என்ற படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குநர்களும் நடிகர்களும் தங்களைக் கவிஞர்களாகப் பாவித்துக்கொண்டு பாடல் எழுதி தங்கள் க(கொ)லை வெறியைத் தீர்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தோ என்னவோ இந்தப் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் சுந்தர்.சி மட்டுமே எழுதியிருக்கிறார்.

 சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தேஜாவுடன் தமன்னா நடிக்கும் "ரச்சா' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு சித்தூரில் கடந்த வாரம் நடைபெற்றது. அருகிலேயே திருப்பதி என்பதால் வெங்கடாஜலபதியை தரிசிக்க இருவரும் திருமலைக்குச் சென்றுள்ளனர். திருப்பதி கோவிலுக்குப் பெண்கள் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து வர நிர்வாகம் அனுமதிப்பதில்லை. ஆனால் ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்து வி.ஐ.பி. வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் தமன்னா. இதையடுத்து அங்கிருந்த பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட, போலீஸ் தலையிட்டு தமன்னாவை கோயிலிலிருந்து விரைவாக அனுப்பி வைத்திருக்கிறது.

 திருமண வாழ்க்கைக்காக சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக்கொள்ளும் முடிவில் இருந்தார் நயன்தாரா. ஆனால் பிரபுதேவா பாலிவுட் படங்களில் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் திருமணத்தைத் தள்ளிவைத்துக்கொண்டே இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிடுவேன் என எச்சரிக்காத குறையாகக் கூறியிருக்கிறார் நயன்தாரா. அதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஜோடியின் திருமணத்தை எதிர்பார்க்கலாம்.

 அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் உள்ள ஜூலியன் ஏல நிறுவனம் பிரபலங்கள் பயன்படுத்திய பொருள்களை ஏலத்தில் விற்று வருகிறது. அண்மையில் நடந்த இந்த ஏலத்தில் ஹாலிவுட்டின் கனவுக் கன்னியான மறைந்த நடிகை மர்லின் மன்றோவின் புகைப்படம் ஒரு கோடியே 75 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. நடிகையான பின் மர்லின் மன்றோ எடுத்த முதல் புகைப்படம் அதுதானாம்.

 மணிரத்னம் இயக்கும் "பூக்கடை' படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் மகன் கெüதம் கதாநாயகனாகிறார். இதில் நடிக்க கமல் மகள் அக்ஷரா, ராதாவின் இளைய மகள் துளசி, பார்த்திபன் மகள் கீர்த்தனா உள்ளிட்ட பலரையும் பரிசீலித்து இறுதியில் பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூரைக் கதாநாயகியாக்கும் திட்டத்தில் இருக்கிறார் மணிரத்னம். இதற்கு அனில் கபூர் பூரண சம்மதம் தெரிவித்ததுடன் மகளையும் படத்தில் நடிக்குமாறு கூறியிருக்கிறார். அனில்கபூர் கதாநாயகனாக நடித்த "பல்லவி அனுபல்லவி' கன்னடப் படம்தான் மணிரத்னம் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.