இசையில் ஓர் இலக்கு!
நிஷா ராஜகோபால், சங்கீதத்தை தன் சிறு வயது முதலே முறையாகக் கற்று, தற்பொழுது சீராய்ப் பாடிக் கொண்டிருப்பவர். அவருக்கு "தி ஹிந்து ஸரிகம எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விருது' இந்த வருடம் கிடைத்துள்ளது. இதை முதன்


நிஷா ராஜகோபால், சங்கீதத்தை தன் சிறு வயது முதலே முறையாகக் கற்று, தற்பொழுது சீராய்ப் பாடிக் கொண்டிருப்பவர். அவருக்கு "தி ஹிந்து ஸரிகம
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விருது' இந்த வருடம்
கிடைத்துள்ளது. இதை முதன்முதலில் பெறுபவரும் இவரே. அவரிடம் இதைப் பற்றிக் கேட்டோம்.
""எம்.எஸ். அம்மாவின் பெயரால் எனக்கு ஒரு விருது கிடைப்பதே எனக்கு அளவிலா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சங்கீதத்தைப் பொறுத்தவரையில் அவர் ஓர் இமயம். எங்கள் எல்லோருக்குமே அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் உண்டு'' என்று பூரிப்புடன் கூறி தொடர்ந்தார்.. ""இதற்காக நான் தனியாக உழைக்கவில்லை. நல்ல சங்கீத வித்வானுக்கு அழகு மேலும் மேலும் இடைவிடாமல் கற்றுக் கொண்டிருப்பதுதான். அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். அவார்டுகள் கிடைப்பது அந்த உழைப்புக்குக் கிடைக்கும் ஓர் அங்கீகாரமே. இதில் நடுவர்களாக இருந்த வேதவல்லி, கெüரி ராம்நாராயண் - இவர் எம்.எஸ். அம்மாவுடனேயே இருந்தவர் - ராஜ்குமார் பாரதி ஆகியோர் நடுவராக வீற்றிருந்தனர் என்பது என் பெருமையை இரட்டிப்பாக்குகிறது.
எங்களது குடும்பம் கனடாவில் இருந்த சமயத்தில் எனது முதல் சங்கீதப் பயிற்சி எனது தாயாரிடம் தான் துவங்கியது. எனது தாயார் வசுந்தரா ராஜகோபால் கோடீஸ்வர ஐயரின் உறவினரான கோபாலய்யரிடம் கற்றவர். நிறையக் கச்சேரிகள் செய்து வருகிறார், பாசுரங்கள் பாடுவதில் வல்லவர்.
ஒருமுறை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பெர்க் கோவிலுக்கு நாங்கள் சென்றிருந்த பொழுது, அங்கு பேராசிரியர் டி.ஆர். சுப்பிரமணியத்தைச் சந்திக்க நேர்ந்தது. அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது என்னைப் பாடுமாறு சொன்னார். நானும் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் சித்தி விநாயகம் என்ற பாடலைப் பாட, அதை கேட்டு அனுபவித்து என்னைப் பாராட்டியதோடு என்னிடமிருந்தே அவர் இந்தப் பாடலைக் கற்றும் கொண்டார். அவரது பெருந்தன்மை எங்களை வியக்கச் செய்தது. அந்தக் கோவிலிலேயே எனக்குப் பாடவும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் நான் செய்த முதல் கச்சேரி.
நான் பாடுவதால் சிறப்புப் பெற வேண்டும் என்றால் சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். 1992- ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்தோம். அதன் பின்பு சில வருடங்கள் கழித்து, சென்னைக்கும் வந்துவிட்டோம். டெல்லியில் டி.ஆர்.எஸ். அவர்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வந்தவுடன் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தியிடம் சுமார் ஒரு வருடம் பயிற்சி பெற்றேன். அதற்கு மேல் எனக்கு அந்தப் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. தொடர்ந்து பி.எஸ். நாராயணசாமி, சுகுணா வரதாச்சாரி ஆகியோரிடம் பயின்று வருகிறேன்.
நான் ஒரு பொறியியல் பட்டதாரி. ஒரு நிறுவனத்தில் 2005 முதல் 2007 வரையில் பணி புரிந்து வந்தேன். வேலை, சங்கீதம் என்று இரண்டு உலகங்களிலும் சஞ்சரிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. நான் கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவள். வேலைக்குச் சென்றதால் அது மறைந்தது. வேலையா? சங்கீதமா? என்ற அலைபாய்தலில், முடிவில் சங்கீதம் தான் வென்றது. இப்பொழுது வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டேன். சங்கீதத்தில் உறுதியாகி ஊறித் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு இரண்டு சகோதரிகள். அக்கா தீபா மருத்துவர். மேலாண்மை பட்டமும் பெற்று லண்டனில் வசித்து வருகிறார். தங்கை திவ்யா சிட்னியில் இருக்கிறார். அவளுக்கும் சங்கீதத்தில் நல்ல ஆர்வம் உண்டு. சங்கீதம் கற்றுக் கொண்டாள். இடையில் விட்டுப்போனது. இப்பொழுது விட்டுப் போனதை மறுபடி புதுப்பிக்கும் எண்ணமும் இருக்கிறது.
எனது பெற்றோர் நான் சங்கீதத்தைத் தேர்ந்தெடுத்ததை மதித்து முழுமையாக ஆதரித்தார்கள். ஒய்ஏசிஎம் என்ற இளைஞர்களுக்கான சங்கீத அமைப்பில் 2005 முதல் மூன்று வருடங்களுக்குச் செயலராக இருந்திருக்கிறேன்.
கர்நாடக சங்கீதத்தைப் பொருத்தவரையில், வரும் காலங்களிலும், இன்றும் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. டிவி, ரேடியோ மற்றும் வெளியிடங்களில் நிகழ்ச்சி நடத்தும் ஸ்பான்சர்கள் எல்லோருமே இசையை ஊக்குவிக்கிறார்கள்.
இப்போதெல்லாம் பெண்கள், வேறு ஊர்களுக்குச் சென்று பாடுவதும், வெளி நாடுகளுக்குச் சென்று பாடுவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஓர் ஆசை. கர்நாடக சங்கீதம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே ரசிக்கப்படாமல் பரவலாகப் பலரும் ரசிக்குமாறு அதை மாற்ற வேண்டும். இதுதான் எனது நீண்ட கால இலக்கு. இதைச் சாதிக்க நான் இன்னும் நுணுக்கமாகத் தேர்ச்சி பெற வேண்டும். கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது''
என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...