/

ஆயிரத்தில் ஒருத்தி!

ஒரே நாளில் ஊரே கொண்டாடும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது மைவிழிக்கு. அட, யார் அந்த மைவிழி அப்படி என்ன அதிர்ஷடம் அவருக்கு?  பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வர

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:40 pm

ப. இசக்கி

ஒரே நாளில் ஊரே கொண்டாடும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது மைவிழிக்கு. அட, யார் அந்த மைவிழி அப்படி என்ன அதிர்ஷடம் அவருக்கு?

 பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் பி.காம். இரண்டாமாண்டு படித்து வருகிறார் மைவிழி. இங்கு வந்திருந்த ராகுல் காந்தியை பார்க்க செல்லும்போது அவரிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்ற ஆசையை மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான் சென்றார். ஆனால் அங்கே அவருக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி.

ஆமாம், ராகுல் காந்தியின் அருகிலேயே நின்று, ஒரு வார்த்தை அல்ல ஓராயிரம் வார்த்தை அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது மைவிழிக்கு. அவருடைய பேச்சை மொழிபெயர்க்கும் வாய்ப்பு. சுமார் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் "ஆயிரத்தில் ஒருத்தி'யாக சுடர்விட்டு ஒளிர்ந்த மைவிழியை அவரது கல்லூரியில் சந்தித்தபோது அவரது விழிகளில் மகிழ்ச்சி தேங்கி வழிந்தது. இனி அவருடன் பேசுவோம்.

ராகுல் காந்தி கூட்டத்துக்குப் போக வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது?

ராகுல் பாளையங்கோட்டையில் இளம் பெண்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார் என அறிந்து எனது பெயரையும், எனது தோழியின் பெயரையும் சேர்த்து மொத்தம் 15 பேரின் பெயர்களை எங்கள் ஆசிரியர்கள் கொடுத்து விட்டனர்.

ஆசிரியர்கள் அந்த விவரத்தை எங்களிடம் தெரிவித்த உடன் ராகுலை கேள்வியால் துளைத் தெடுக்க வேண்டும் என 15 கேள்விகளைத் தயார் செய்து வைத்துக் கொண்டு அவர் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

ஆயிரம் பேர் பங்கேற்றிருந்த அந்தக் கூட்டத்தில் ராகுல் பேச்சை மொழி பெயர்க்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?

அதை இப்போது நினைத்தாலும் "ஷாக்கிங்'காக இருக்கிறது. ராகுல் பேச்சை வேறுஒரு பெண்தான் முதலில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். அவரது மொழி பெயர்ப்பில் திருப்தி அடையாத ராகுல், நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை' எனக் கூறிவிட்டு வேறு யாராவது மொழி பெயர்க்க முடியுமா? எனக் கேட்டார்.

மேடைக்கு முன்பு முதல் வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து "உங்களுக்கு ஆங்கிலம், தமிழ் தெரியுமா?' எனக் கேட்டார். நான் தெரியும் எனத் தலையை ஆட்டினேன். உடனே மேடைக்கு வாருங்கள் என்றார்.   எனக்கு முன்னால் பெரிய மேஜை இருந்ததால் உடனே என்னால் மேடைக்கு செல்ல முடியவில்லை. "குதித்து வாருங்கள்' என்றார். ஒரு நிமிட நேரத்தைகூட ராகுல் வீணடிக்க விரும்பவில்லை போலும். அதை புரிந்து கொண்ட நான் அந்த மேஜைக்கு மேலே ஏறிக் குதித்து மேடையை சென்றடைந்தேன்.

அந்த அரைமணி நேர மொழி பெயர்ப்பு பணியின்போது ராகுலிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

அவர் சொன்ன கருத்துகளும், அவரது பேச்சும், அவரது அணுகுமுறையும் ரொம்ப "இம்பரசிவ்'வாக இருந்தது. ரொம்ப கேஷூவலாக இருந்தார். எந்தவித பந்தாவும் கிடையாது. அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவரை ஒரு பெரிய தலைவராக எண்ணாமல் எனது அண்ணனின் அருகில் நின்று பேசுவது போல உணர்ந்தேன். எவ்வளவு பெரிய ஆள், இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என வியந்தேன்.

உங்களுக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?

எனது பெரியப்பா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த   வர்தான். நாட்டுப்பற்றுடன் கூடிய அரசியல் எனக்கு பிடிக்கும். இன்றைய அரசியலில் அது கேள்விக்குறி.     ஆனால் அதற்காக நாம் ஒதுங்க முடியாது. இவற்றையெல்லாம் சரிபடுத்த வேண்டுமென்றால் படித்தவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். ராகுல் காந்தியைப் பார்த்த பின்பு நானும், எனது தோழியும் இளைஞர் காங்கிரஸில் சேர முடிவு செய்து அதற்கான விண்ணப்பத்தை எல்லாம் வாங்கி வைத்துள்ளோம்.

அப்படியானால் தேர்தலில் போட்டியிடும் ஆசை உண்டா?

ஏன் போட்டியிடக் கூடாது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போட்டியிடுவேன்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

பத்திரிகையாளராக வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. சென்னை கல்லூரி ஒன்றில் இடமும் கிடைத்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக அதில் சேர இயலவில்லை. இங்கு வந்து பி.காம். படிக்கிறேன். தொடர்ந்து எம்.பி.ஏ. படிக்க வேண்டும். அடுத்து மற்றவர்கள் என்னைப் பார்த்து வியக்கும்படி சாதனை படைக்க வேண்டும். எனது திறமையை பயன்படுத்தி பெரிய ஆளாக வர வேண்டும். அதன் மூலம் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். அது அரசியல் மூலம் சாத்தியம் என்றால் அதற்கும் நான் தயார்தான்!

இத்தனையும் சொன்ன நீங்கள் உங்களைப் பற்றி சொல்லவில்லையே.

எனது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கூடலூர். எனது தந்தை விஜயசெல்வன், சென்னையில் வியாபாரம் செய்கிறார். நான் பாளையங்கோட்டையில் எனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறேன்.

படங்கள்: பூ. வீரமணிகண்டன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.