டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குட்டி இளவரசி!

""சின்ன ராணி, ....தூங்கலையா? மணி ஒன்பதாயிருச்சே!'' என்றாள் அம்மா.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

எம். அசோக்ராஜா


""சின்ன ராணி, ....தூங்கலையா? மணி ஒன்பதாயிருச்சே!'' என்றாள் அம்மா.
""இந்தப் புத்தகத்துல படங்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்குதும்மா!...இதே மாதிரி நிறைய புத்தகம் வேணும்மா...'' என்றாள் மஞ்சு.
""சரி. வா, தூங்கலாம்....''
""எனக்கு ஒரு கதை சொல்றீங்களா?''
""சரி...''
""பெரிய கதையா சொல்லும்மா...''
இருவரும் ஆளுக்கொரு தலையணையில் படுத்துக்கொண்டார்கள்.
மஞ்சுவை அணைத்துக்கொண்டு, ""ஒரு ஊருல ஒரு பெரிய காடு இருந்ததாம்....'' என்று கதை சொல்லத் தொடங்கினார்.
""காடு கதை வேணாம்மா. வேற கதை சொல்லுங்க....''
""சரி, ஒரு ஊருல ஒரு பள்ளிக்கூடம்...''
""ஐயோ, பள்ளிக்கூடம் வேணாம். வேற சொல்லுங்க!....''
""அப்படியா, ஒரு ஊருல ஒரு தோப்பு இருந்ததாம். அங்க ஒரு பெரிய கிணறு!''
""அதுல பூதம் வருமா? வேணாம்மா. வேற சொல்லுங்க...''
""என்ன எதைச் சொன்னாலும் வேணாங்கற. புதுசா வேற நான் என்ன சொல்றது?'' என்று யோசித்தார் அம்மா.
""அம்மா, நான் ஒரு கதை சொல்லட்டுமா?''
""நீயா?'' என்று ஆச்சரியத்தோடு மஞ்சுவைப் பார்த்தார் அம்மா. ""சரி சரி, சொல்லு!'' என்றபடி அவள் கன்னத்தை அழுத்தி முத்தமிட்டார்.
""நான் சொல்லச் சொல்ல "ம்' கொட்டிட்டே இருக்கணும். அப்பதான் எனக்குக் கதை சொல்ல வரும். சரியா?''
""சரி, சொல்லு...''
அம்மாவின் கண்களைப் பார்த்தபடி, ""ஒரு நாட்டுல ஒரு அழகான இளவரசி இருந்தா!''
""ம்''
""ஒரு நாள் நந்தவனத்துலே உக்காந்துட்டு பூக்கள வேடிக்கை பார்த்துகிட்டிருந்தா, இளவரசி. அந்த நேரத்துல ஒரு குருவி வந்து ஒரு பூவுக்குப் பக்கத்துல உக்காந்து அவளையே பார்த்தது....''
""ம்''
"" அப்புறம் அந்தச் செடியிலிருந்து பக்கத்து செடியில போய் உக்காந்தது. இளவரசி குருவியையே பாத்துட்டிருந்தா. திடீர்னு குருவி சட்டுனு பறந்துபோய் ஒரு மரத்துல உக்காந்துருச்சு....!''
""அடடா, அப்பறம்?''
""இளவரசிக்கும் பறக்கணும்ன்னு ஆசை வந்துருச்சு. உடனே அவளுக்கு றெக்கை மொளைச்சிருச்சு. இளவரசியும் பறந்து போய் மரத்துல உக்காந்துட்டா!....''
""ம்...''
""அப்ப வெள்ள ரிப்பன் காத்துல பறக்கற மாதிரி ஒரு கொக்கு கூட்டம் அந்தப் பக்கமா பறந்து வந்திச்சி. உடனே இளவரசிக்குக் கொக்கு மாதிரி பறக்கணும்னு ஆசை வந்துருச்சு. உடனே கொக்குக்குப் பின்னாலயே அவளும் பறக்க ஆரம்பிச்சிட்டா!..
""ம்''
""எல்லா கொக்கும் பக்கத்து காட்டுல அருவி பக்கமா எறங்கிச்சி. இளவரசியும் அங்க இறங்கி வேடிக்கை பார்த்தா. ஒரு மரத்தடியில நாலஞ்சி மயில்கள் அழகா தோகை விரிச்சி ஆடிட்டிருந்தது!''
""ம்''
""உடனே இளவரசியும் மயிலா மாறி தோகை விரிச்சி ஆனந்தமா ஆடத் தொடங்கிட்டா. ''
""ம்...''
""அந்தப் பக்கமா ஒரு மான் ஓடி வந்துச்சு!...உடனே இளவரசியும் மானா மாறி அது பின்னாலயே ஓடினா. ஓடி ஓடிக் களைச்சி போய் ஒரு குகைக்குப் பக்கத்துல நின்னா. அங்க ஒரு யானை மூங்கில் தோப்பு பக்கமா அசைஞ்சி அசைஞ்சி நடந்து போச்சு. உடனே இளவரசியும் யானையா மாறி அது பின்னாலயே நடந்து போனா!....''
""ம்''
""ரொம்ப தூரம் நடந்து, யானை ஒரு மலை உச்சிக்குப் போய் நின்னுது. மலையின் உச்சிவரைக்கும் போன இளவரசி ஆகாயத்தையே சுத்திச் சுத்தி பார்த்தா. சிலுசிலுனு குளிர்காத்து. எல்லா பக்கமும் பனி மூட்டம். மேகங்கள் எல்லாம் வந்து தொட்டுட்டு தொட்டுட்டுப் போகுது....''
""ம்''
""ஒவ்வொரு மேகமும் பாக்கறதுக்கு குதிரை மாதிரி இருந்தது. உடனே இளவரசி ஒரு மேகத்து முதுகுல ஏறி உக்காந்துட்டா. மேகம் போற திசையில அவளும் போறா.
""ம்...''
""வழியில வட்டமா நிலா தெரிஞ்சது. பாக்கறதுக்கு யாரோ மெத்துமெத்துனு பஞ்சு மெத்தைய போட்டு வச்ச மாதிரி இருந்தது. காலையிலிருந்து அலைஞ்சிட்டே இருந்ததால இளவரசி ரொம்பக் களைச்சி போயிட்டா. அதனால நிலாவுல படுத்து தூங்க ஆரம்பிச்சிட்டா. அவ்ளோதான் கதை!...''
""ரொம்ப நல்ல கதை, செல்லக்குட்டி. ஆமா, இளவரசின்னு சொன்னியே. அவ எந்தத் தேசத்து இளவரசி?''
""மதுரை தேசத்துலயே பெரிய இளவரசி!''
""ஓ... அப்படியா? அப்ப அவ பேரு மஞ்சுவா?''
""ம்...'' என்றபடி அம்மாவைப் பார்த்துச் சிரித்தாள் மஞ்சு.....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.