/

அரங்கம்: சொல்லி வளர்க்கணும்!

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:22 pm

உஷாதீபன்


காட்சி - 1   

இடம் - ரெங்கவிலாஸ் உணவகம்,அடுப்படி,   மாந்தர்-  சுந்தரம் மற்றும் 
மகன்  விஸ்வநாதன் என்கிற விச்சு. 

விச்சு:  (..."தப!தப!'  வென்று தணலெடுத்து  எரியும் விறகு அடுப்பைப் பார்த்து பயந்தவனாக அப்பாவிடம் ,....) என்னப்பா லீவுக்கு இங்கே கூட்டிட்டு வந்திருக்கே! ஊட்டி கொடைக்கானல்னு ஹில் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போவேன்னு பார்த்தேன்.... இப்படி ஹோட்டல் அடுப்படிக்கு கூட்டிட்டு வந்திருக்கியே... எனக்கு பயமா இருக்குப்பா ! வா! போகலாம்!.
சுந்தரம்: எதுக்கு பயப்படுறே! அப்பாதான் இருக்கேன்ல! நல்லாப் பாரு! எல்லாத்தையும்!..
விச்சு: இதையெதுக்குப்பா நான் பார்க்கணும்? வா! சாப்பிடுற உறாலுக்குள்ள போய் உட்காரலாம்! எனக்கு ஸ்வீட் வாங்கித் தர்றேன்னியே?... 
சுந்தரம்: நீ பார்க்கணும்னுதான் கூட்டிட்டு வந்தேன்! பார்த்தியா எவ்வளவு சூடு,...வெக்கை பாரு! இதுலயே ஒரு மனுஷன் காலைல நாலு மணியிலேயிருந்து மத்தியானம் ரெண்டு மணிவரைக்கும் நிற்கணும்னா அவனுக்கு எப்டியிருக்கும்?...
விச்சு: அவ்வளவு நேரமா! உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டுறதே!துடைக்கத் துடைக்க வியர்க்கிறதே!குளிச்ச மாதிரியிருக்கே! காத்தே இல்லையேப்பா இங்க!
சுந்தரம்: தெரியறதா! இப்படித்தான் உங்க தாத்தா காலைல நாலு மணிலேர்ந்து மதியம் ரெண்டு மணிவரைக்கும்! அப்புறம் மூன்றரை மணிலேர்ந்து ராத்திரி ஒன்பது வரைக்கும்னு இந்த அடுப்பு முன்னாடி கிடந்து வெந்தார்! இதுதான் அவர்  நாற்பது வருஷத்துக்கும் மேலே வேலை பார்த்த ஓட்டல்!
விச்சு: யாரு?.... கிருஷ்ணத் தாத்தாவா?... அவரு இங்கயா வேலை பார்த்தார்? ஏம்ப்பா? அவர் உன்னை மாதிரி ஆபீசுக்கெல்லாம் போகலியா? 
சுந்தரம்: கிருஷ்ணத் தாத்தாவோட கூடப் பிறந்தவா மூணு பேர்! அவங்க நாலு பேரையும் உங்க கொள்ளுத் தாத்தா படிக்க வைக்காமே ஓட்டல் உத்தியோகத்துக்கு அனுப்பிட்டார்.  வருமானம் வேணுமே..தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா! சித்தப்பா! மாமாக்கள்னு இருந்த காலமில்லையா அது! எல்லாரும் சாப்பிடணுமே! 
விச்சு: ஏன் படிக்க வைக்கலை? பணமில்லையா? 
சுந்தரம்: காசெல்லாம் இருந்தது! ஜவுளிக்கடை, வியாபாரம்னு போயிப் போயி, நஷ்டமாகி, எல்லாத் துட்டும் போய் வீடு நொடிச்சுப் போச்சு!.
விச்சு: நொடிச்சுப் போச்சுன்னா? 
சுந்தரம்: வருமானமே இல்லாம, வறுமையாகி, சாப்பாட்டுக்கே கஷ்டமாயிடுத்துன்னு அர்த்தம்!
விச்சு : அப்புறம்? 
சுந்தரம்: வியாபாரமெல்லாம் வேண்டாம்னுட்டு ஊரு விட்டு ஊரு வந்து அவங்கவங்க ஓட்டல் உத்தியோகத்துக்குப் போக ஆரம்பிச்சாங்க! நம்ப தாத்தா இந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்தார்!
விச்சு: அவர் படிக்கலையா? இங்கிலீஷ் பேப்பர்லாம் படிக்கிறதைப் பார்த்திருக்கேனே?
சுந்தரம்:  அந்தக் காலத்து அஞ்சாங் கிளாஸ்!அப்புறம் வந்த எஸ்.எஸ்.எல்.சிக்கு சமானம்!.
விச்சு: நீயும் அதுவரைக்கும்தானேப்பா படிச்ச? 11-ம் வகுப்பு வரைக்கும்னு சொல்லுவியே? 
சுந்தரம்: உங்க தாத்தா இங்கிலீஷ் பேப்பர்லாம் விடாமப் படிப்பார்! க்ராஸ் வேர்டு பஸில்ஸ் எழுதி பரிசெல்லாம் வாங்கியிருக்கார்! அவங்க எல்லாரையும் படிக்க மட்டும் வச்சிருந்தா பெரிய ஆட்களாகி நல்ல உத்தியோகத்துக்குப் போயிருப்பாங்க எல்லாரும்!அவங்க தலையெழுத்து அப்டி!?
விச்சு: தலையெழுத்தா? அப்டீன்னா! பிறக்கும்போதே தலைல சாமி எழுதிடுவாரா..? 
சுந்தரம்:  (கொஞ்சம் யோசித்தவாறே)  ம்ம்ம்! ஆமா..அப்படித்தான் வச்சிக்கயேன்!...நீதான் விவரமாக் கேட்கிறியே!!
விச்சு: ஏம்ப்பா? இவ்வளவு  பெரிய அடுப்பு முன்னாடி நின்னமேனிக்கே நாள்பூராவும் வேலை பார்த்தார்ங்கிறியே!அவருக்குச் சம்பளம் எவ்வளவு? 
சுந்தரம்: அதுதான் பெரிய வயிற்றெரிச்சல்! வெறும் எழுபது ரூபா!.
விச்சு: (அதிர்ந்தவனாக) என்னது?... எழுபது ரூபாயா?.... யு மீன்!...செவன்டி ருபீஸ்? 
சுந்தரம்: யெஸ்!.....ஒன்லி செவன்டி ருபீஸ்... மந்த்லி சாலரி!
விச்சு: என்னப்பா பெரிய அநியாயமா இருக்கு?... இந்த வெத்து எழுபது ரூபாய்க்கா வருஷக்கணக்கா தாத்தா இங்க வேலை பார்த்தார்?.... பஸ்-ஸ்டான்டுலேர்ந்து, நம்ப வீட்டுக்குப் போறதுக்கு ஆட்டோவுக்கு ஒன் ஃபிப்டி கொடுக்கிறோமேப்பா....நீ வெறும் எழுபதுங்கிறே?.... அதைச் சம்பளம்னு வேறே சொல்றே?.... கூலின்னு கூடச் சொல்ல முடியாதே?....
சுந்தரம்: (ஆச்சரியத்தேயாடு சிறுவன் விச்சுவின் முகத்தைப் பார்க்கிறார்......--அவனைக் கூட்டி வந்து காண்பித்ததே தவறோ என்று ஒரு கணம் தோன்றியது 
அவருக்கு)...--சம்பளம்!.....கூலி!....
என்னென்னவோ சொல்கிறானே! எங்கிருந்து இந்த வார்த்தைகளையெல்லாம் கற்றான்? இதற்கெல்லாம் இவனுக்கு வேறுபாடுகள்தான் தெரியுமா? பய எப்பப் பார்த்தாலும் லைப்ரரியே கதியாக் கிடக்கிறானே!அதோட அடையாளமோ? அங்க என்னென்ன புஸ்தகத்தைப் படிச்சித் தொலைக்கிறானோ?.....யோசனையோடு வீடு வந்து சேர்ந்தார்கள். .... --- அம்மாவிடம் இதுபற்றி நிறையப் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் விஸ்வநாதன். அப்பா சொன்னது காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது....---""எங்க ஆறு பேரையும் தன் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமே படிக்க வச்சார் உன்னோட தாத்தா! நாற்பது வருஷத்துக்கும் மேலே ராப் பகலா  இந்த நெருப்பே கதியாக் கிடந்தார்! அவ்வளவு கடுமையான உழைப்பு!  தனக்குக் கிடைக்கிற பேட்டா காசைக் கூடச் செலவழிக்காமே! வீட்டுல கொடுத்திடுவார்!அத்தனை குடும்பப் பொறுப்பான மனுஷன்!''திரும்பத் திரும்ப இந்த வாக்கியங்கள் அவன் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. தாத்தாவின் வற்றிய உடம்பும், நரைத்துத் தளர்ந்த சோகம் கவிந்த முகமும் கொண்ட புகைப்படம் அவன் ஞாபகத்தில் வந்து சங்கடப்படுத்தியது!)

காட்சி -  2  

இடம் : வீடு   -  மாந்தர் -    விச்சு 
மற்றும்  அம்மா  பார்வதி

விச்சு:  பேட்டாக் காசுன்னா! என்னம்மா!. ?
பார்வதி: உங்கப்பா சொன்னாராக்கும்? குழந்தைகளுக்குக் கஷ்டம் தெரிய வேண்டாம்! பழங்கதை எதுவும் சொல்லாதீங்கோன்னாக் கேட்டாத்தானே? 
விச்சு:  ஏம்மா சொல்ல வேண்டாம்ங்கிறே? தெரிஞ்சிண்டா நல்லதுதானே! முன்னோர்களைப் பத்தித் தெரிஞ்சிக்கிறதுல என்னம்மா தவறு? 
பார்வதி:  என்னடா! என்னென்னவோ வார்த்தையெல்லாம் சொல்றே! இதெல்லாம் எங்க கத்துண்டே நீ?... 
விச்சு: எங்கயோ தெரிஞ்சிண்டேன்!....விடு!...பேட்டான்னா என்ன!...அதை முதல்ல சொல்லு!
பார்வதி: அது அன்றாடம் ஒரு  தொழிலாளியோட சில்லரைச் செலவுக்குன்னு கொடுக்கிற சிறு துட்டு.  ஒரு சின்ன சந்தோஷம்! அவனை ஊக்கப்படுத்துறதுல நிர்வாகத்துக்கு ஒரு சமாதானம்! வெறும் நாலணாத்தான்!... ட்வென்டிஃபைவ் பைசே!
விச்சு: நாலணான்னு சொல்ற அந்தக் காசு எதுக்குத்தாம்மா உதவும், அத வச்சு என்னதான் செய்ய முடியும்? 
பார்வதி: அப்டிச் சொல்லாதே! அந்தக் காலத்துல நம்மூர் சினிமா கொட்டகைல தரை டிக்கெட்டே வெறும் நாலணாதான். ஒரு சினிமா பார்க்கலாமே அந்தக் காசுக்கு! ஆனா உங்க தாத்தா ரொம்ப சின்சியர். அந்தக் காசைக் கூட அப்டியே கொண்டு வந்து உங்க பாட்டிட்டக் கொடுத்திடுவாராம். பாட்டி அதை நாலு நாளைக்கு சேர்த்து வச்சு, குழந்தைகளுக்கு பாட நோட்டு வாங்கிக் கொடுப்பாளாம்! குழந்தைகள் படிப்புல அம்புட்டு அக்கறை!...பாட்டிக்கு!
விச்சு: ஆஉறா!அருமை! எப்டிம்மா ஆறு பேரையும் படிக்க வச்சார் தாத்தா?....எல்லாரும் சாப்பிடணும்! டிரெஸ் வாங்கணும்! உடம்பு சரியில்லைன்னா டாக்டர்ட்டப் போகணும்! மருந்து வாங்கணும்! வீட்டு வாடகை கொடுக்கணும்!நினைச்சே பார்க்க முடிலயே? எவ்வளவு கஷ்டம் இருந்திருக்கும்? இந்தப் பிசாத்துக் காசை வச்சு ஒண்ணுமே செய்ய முடியாதே? 
பார்வதி:  அங்கதான் நீ ஒண்ணு புரிஞ்சிக்கணும்! மனுஷனை மனுஷன் நம்பின காலம் அது! ஒருத்தன் வறுமைல இருக்கான்னா! அது கேவலம் கிடையாதுன்னு நினைச்சாங்க! அவன் நேர்மையானவனாங்கிறதை மட்டும்தான் பார்த்தாங்க! அதை வச்சுதான் ஒருத்தனை மதிச்சாங்க! வறுமையிலேயும் செம்மையா வாழறானான்னு பார்த்தாங்க!செம்மைன்னா!...ஒழுக்க நெறியோட, தவறுகள் செய்யாமே, பொறுப்பா நடந்துக்கிறது! பரஸ்பரம் மனுஷன மனுஷன் மதிச்ச காலம் அது!...அதனால எல்லா இடத்துலேர்ந்தும் உதவி கிடைச்சது!.
விச்சு:  அப்போ நீங்க சாப்பிடுறதுக்கு எல்லாமே உங்களுக்கு ஃப்ரீயாக் கிடைச்சிடுத்தா? இப்போ கவர்ன்மென்ட் நிறைய இலவசம்னு கொடுக்கிறாங்களே!அது மாதிரி அப்பவும் இருந்ததா? 
பார்வதி: எதையாவது உளறாதே!...இந்த மாதிரி இலவசம்ங்கிற தப்பான பழக்கமெல்லாம் அப்பக் கிடையாது. விலைவாசி குறைவா இருந்த காலம் அது!.... படி அரிசி முக்கால் ரூபான்னா பார்த்துக்கோயேன்!
விச்சு: படி அரிசின்னா?
பார்வதி:  சித்த இரு வர்றேன்!....என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போய் கை எட்டும் பரணில் இருந்த ஒரு படி அளவு கொண்ட இரும்புப் பூண் போட்ட படியை எடுத்து வந்து காண்பித்தாள்! இதுதான் ஒரு படிங்கிறது. இது நிறைய கும்மாச்சியா அரிசியை அளந்து போடுவாங்க! அது வெறும் முக்கால் ரூபாதான். முக்கால் ரூபான்னா  இன்னைக்கு, செவன்டிஃபைவ் பைசேன்னு அர்த்தம்! விற்கிறவங்களோட நிறைஞ்ச மனசு தெரியும் அதுல! இன்னைக்கு வாங்க முடியுமா அந்த விலைக்கு? ஒரு கிலோ அறுபது ரூபா!.... எங்கயிருக்கு? 
விச்சு:  அது சரிம்மா! நம்மட்டத்தான் காசு கிடையாதே! அப்புறம் எப்பிடி  வாங்க, சமைக்க எல்லாம் கிடைச்சது? 
பார்வதி: மனுஷங்க இரக்கமுள்ளவங்களா இருந்தாங்க அந்தக் காலத்துல!...இப்பவும் இருக்காங்க! ...ஆனாலும்,  இவங்க ஏமாத்தமாட்டாங்கங்கிற நம்பிக்கைல எப்பப் போனாலும் கடன் கொடுப்பாங்க! அரிசிக்கடைச் செட்டியார் கடனுக்கு அரிசி தருவார்! பலசரக்குக் கடை நாராயணன் சாமான்கள் தருவார்! வெல்லக் கடை நாயுடு சர்க்கரை கொடுப்பார்! எண்ணெய்க் கடை நாடார் எண்ணெய் கொடுப்பார்! காய்கறிக்கடை பேச்சியம்மா காய்கறி தருவாங்க! இப்படி எல்லாரும் விடாம உதவி செய்து செய்துதான் நம்ம வீடே வளர்ந்திச்சு! உங்க அப்பாவோட கூடப் பிறந்தவாளெல்லாம் அதுலதான் வளர்ந்தாங்க!அப்போ காமராஜர்னு ஒரு முதலமைச்சர் இருந்தார். அவர் இலவசக் கல்வி கொண்டு வந்தார். அதுலதான் எல்லாரும் ஸ்கூல் ஃபைனல் வரை படிச்சாங்க! பிறகு அரசாங்க வேலைக்குப் போனாங்க! இதுதான் இந்த வீட்டோட கதை!
விச்சு:  அவங்கெல்லாம் இப்ப இருக்காங்களாம்மா? என்னை அந்தக் கடைகளுக்குக் கூட்டிட்டுப் போறியா? 
பார்வதி:  அவங்களெல்லாம் காலமாகி எத்தனையோ வருஷமாச்சு!...இப்போ பஜார் வீதியே அடையாளம் தெரியாம மாறிப் போய்க்கிடக்கு! யாரைன்னு உனக்கு அடையாளம் காட்டுவேன்! நினைவுகள்தான் அடையாளம்!
விச்சு:  ஏம்மா காலமாகின்னு சொல்றே? செத்துப் போய்ட்டாங்கங்கிறதைத்தானே அப்டிச் சொல்றே? அப்போ இறந்து போன நம்ம தாத்தாவையும் காலமாயிட்டார்னுதான் சொல்லுவாங்களா?...காலமாயிட்டார்ங்கறதுக்கு என்னம்மா அர்த்தம்?
பார்வதி: வாழற காலத்துல மற்றவங்களுக்கு உதவியா!கருணை உள்ளத்தோடயும், பண்போடயும், ஒழுக்கத்தோடையும் வாழ்ந்து இறந்தவங்களை!காலத்தால் மறக்க முடியாது. மற்றவங்க மனசுல நிற்கிறவங்க அவுங்க! அந்த  அடையாளத்துல அவுங்களை மதிச்சு அப்டிச் சொல்றது வழக்கம்! அதுதான் நம்மோட பண்பாடு! காலமானவங்கன்னா! காலத்தால் நினைவு கூறப்படுறவங்கன்னு அர்த்தம்!
விச்சு:  எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா!... நம்மோட இந்த ஊரு! இங்க எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க போலத் தெரியுதே! அன்பானவங்களோட கூடி இருக்கணும்னு எங்க டீச்சர் அடிக்கடி சொல்வாங்க! 
பார்வதி:  அடிப்படைல எல்லாரும் நல்ல மனுஷங்கதான்! காலத்தோட கட்டாயத்துல நிறையப் பேர் தொழில் செய்யணும்னு இடம் பெயர்ந்து உழைச்சு முன்னேறினவங்கதான்!... எல்லோரும் நல்லவரே!ன்னு
நினைக்கணும்! தெரிஞ்சிதா?
விச்சு: ஆனாலும் நம்ம அப்பாவோட சின்ன வயசுக் கதையைக் கேட்குறபோது, தாத்தா பாட்டியோட தியாகங்களை நினைக்கிறபோது,  பலரும்  இப்ப அப்டியில்லையேன்னுதானேம்மா மனசுக்குத் தோணுது!... நான் சொல்றது சரியா? 
பார்வதி: என் தங்கம்டா நீ! மகா புத்திசாலி! சதா கைல புத்தகங்ளோடவே அலையுறயே! பலனில்லாமப் போகுமா? உன்னோட வாசிப்பும், சிந்தனையும்தான்  உன்னை இம்மாதிரியெல்லாம் பேச வச்சிருக்கு!
விச்சு: இந்த முறைதாம்மா சம்மர் லீவு உபயோகமாக் கழிஞ்சிருக்கு! வெறுமே சைட் சீயிங்குன்னு உறில் ஸ்டேஷனுக்குத்தானே போவோம்! வாழ்க்கைப் பாடம்னு ஒரு லெசன் இருக்கு எனக்கு! அந்தப் பேர்தான் ஞாபகம் வந்திச்சு இப்போ! வெரி யூஸ்ஃபுல் டூர்ம்மா!
பார்வதி:  சரி! போய் அப்பாவையும் அழைச்சிட்டு வா! கொல்லைப் பக்கம் தென்னை மரத்துக்கு உரம் வச்சிட்டிருப்பார்! டிபன் சாப்பிடலாம்னு கூட்டிட்டு வா! வந்த இடத்துலயும்  அவருக்கு வேலையைப் பாரு!.
விச்சு:  ஓ.யெஸ்! இதோ !இப்பவே கூட்டிட்டு வர்றேன்!  தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை! தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! ஒளவையாரோட கொன்றை வேந்தன் படிச்சிட்டிருக்கேம்மா! 
(சொல்லிக் கொண்டே பின்புறம் நோக்கி ஓடி அப்பாவைக் கூப்பிட்ட   விஸ்வநாதன் என்கிற விச்சு தோட்டத்துச் செடியிலிருந்து  ஒரு பூவைப் பறித்துக் கொண்டு வந்து தாத்தாவின் படத்திற்கு வைக்கிறான்....அவனது தந்தையின் கண்களில் நீர் துளிர்த்தது!)

திரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.