/

அனைத்தும் நீயே..!

'வாழ்க்கை வாழ்வதற்கே! அவரவருக்கு கடைசி வரை துணை வரப் போவது அவரவர்தான். எனவே, வாழ்க்கையை சந்தோஷமாக, இனிமையாக வாழ வேண்டும்.

News image
Updated On :16 மார்ச் 2025, 11:12 am

பாரத்.தி.நந்தகுமார்

'வாழ்க்கை வாழ்வதற்கே! அவரவருக்கு கடைசி வரை துணை வரப் போவது அவரவர்தான். எனவே, வாழ்க்கையை சந்தோஷமாக, இனிமையாக வாழ வேண்டும். 'அனைத்தும் நீயே' என்பதை உணர்ந்து, எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நல்ல சிந்தனைகளை மனதில் இளையத் தலைமுறையினர் விதைத்துகொள்ள வேண்டும்'' என்கிறார் வாணி பிரதீப்.

கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், வாழ்வியல் திறன்களை ஊக்குவிக்கும் பேச்சாளர்.. என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டு இயங்கும் அவர் சென்னை அண்ணா நகர் கிழக்கில் வசித்து வருகிறார்.

இன்றைய இளம்பெண்களுக்கு ரோல் மாடலாக இருந்துவரும் அவருடன் பேசியபோது:

'சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ.வும், எம்.பி.ஏ.வும் பயின்றேன். 'இன்டர்நேஷனல் ஸ்டேடிஸ்' துறையில் பி.ஜி. டிப்ளமோவையும் படித்தேன். மென்பொருள் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.

2001-இல் எனது தாய் மீது வைத்திருந்த பாசத்தால், 'தாய்' எனும் தலைப்பில் எழுதிய கவிதை இணையதளம் ஒன்றில் வெளியாகி, எனது எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது.

2016-இல், கனடாவில் இயங்கிவரும் 'வேர்ல்டு பீஸ்' (உலக அமைதி) எனும் அமைப்புக்காக, மனித வாழ்க்கை, வாழ்வியல் திறன்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு அனுப்பினேன். இதன்பின்னர், எழுத்துலகின் மீது ஆர்வம் பெற்று, மென்பொருள் பணியைத் துறந்தேன்.

'வாழ்க்கை வாழ்வதற்கே' என்பதை ஆராய்ந்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி 'சோல் பீடர்' என்ற ஆங்கில நூலை 2022-இல் வெளியிட்டேன். 34 பிரிவுகளைக் கொண்ட இந்த நூல் 2,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகும்.

மனித வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் என்னென்ன என்பதையெல்லாம் தொகுத்துள்ளேன். சிரிப்பு நாளின் ஒரு பகுதியாக இருந்தால்தான் வாழ்க்கை மேம்படும். மன அழுத்தங்களில் இருந்து மனிதர்கள் வெளியே வர வேண்டும். மின்னும் பட்டாம்பூச்சிகளாய், சிறகுகளை விரித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விட்டொழிந்து, நல்ல எண்ணங்களை மனதில் புகுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையை கண்ணாடியாக நாம் நினைக்க வேண்டும். எதை நினைக்கிறமோ, அதுவே நம்மைச் சாரும். இந்த நூலின் சிறப்பு என்ன தெரியுமா? 'யூனிவர்சல் சேலஞ்ச்' என்ற ஒரு பாகத்தில், 1 முதல் 200 பக்கங்கள் இருக்கும். ஏதாவது ஒரு எண்ணை நினைத்துகொண்டு, அந்தப் பக்கத்தைப் புரட்டினால் அவருக்கு தனது வாழ்வில் நடக்கும் அன்றாட விஷயங்களே சரியாகப் பொருந்தும். இதை பல நூறு பேருக்கும் மேல் சரி செய்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலின் இரண்டாம் பாகத்தை 'சோல் பீடர் 2.0' என்ற இரண்டாம் நூலை 2024-இல் வெளியிட்டேன். இரு நூல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, 'அனைத்தும் நீயே' எனும் தலைப்பில் தமிழாக்க நூலை அண்மையில் வெளியிட்டேன்.

வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இருப்பது ஒரு வாழ்க்கைதான். அதை நிம்மதியாக வாழ்ந்துவிட்டு போக வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் தங்களுடைய திறமைகளை, எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல், அதற்கான சூழல் இல்லாமல், தயக்கம் கொண்டுள்ளனர். அதை விட்டு விலக வேண்டும். இதையெல்லாம், இளையதலைமுறையினர் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்துச் செயல்பட்டால், அவர்களின் எதிர்காலம் நிச்சயம் முன்னேறும்.

இன்றைய பெற்றோருக்கு தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும். இதற்கான சமூகப் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இதை மையப்படுத்தி, இணையம் வாயிலாகவும், நேரடியாகவும் பயிற்சிகளை அளித்துவருகிறேன்.

எட்டு முதல் 14 வரையிலான குழந்தைகள் வாழ்க்கையை உணரவும், அவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சியை அளித்து தடையின்றி பேசி, எழுதி, எதிர்காலத்தில் எழுத்தாளராக உருவாக்கும் முனைப்பில் இணையவழியில் பயிற்சியை அளித்துவருகிறேன். இதுதவிர, இளையத் தலைமுறையினருக்கு கதைச் சொல்லியான எனது நண்பர் முபின் இர்ஷாத்துடன் இணைந்து, எழுத்தாளர்களாக்குவதற்கான பயிற்சியையும் அளித்துவருகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் கல்லூரிகள், நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், இணையவழியிலும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழ்வியல் திறன் பயிற்சிகளை அளித்துள்ளேன். இளையத் தலைமுறையினருக்கு வாழ்வியல் திறன்களை அளிக்கும் பயிற்சியாளராக என் பணி தொடரும். நல்ல பயனுள்ள நூல்களை எழுதி, இளையச் சமுதாயத்தை மேம்படுத்தி, எதிர்கால இந்தியாவை ஆளும் வலிமை மிக்கவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும் என்பதே ஆவல்'' என்கிறார் வாணி பிரதீப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.