மீண்டும் பழைய வாழ்க்கை வேண்டும்!
கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக அடுத்தடுத்து ஊரடங்குகள் கிட்டத்தட்ட அனைவரது வாழ்க்கை முறைகளை கலைத்துப் போட்டுள்ளது.


கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக அடுத்தடுத்து ஊரடங்குகள் கிட்டத்தட்ட அனைவரது வாழ்க்கை முறைகளை கலைத்துப் போட்டுள்ளது. உற்றார் உறவினர்களைப் பார்த்து நேரில் பேசி பல மாதங்கள் ஆகிவிட்டன. நல்லது கெட்டதற்குப் போக முடியவில்லை.
இப்படி பல பிரச்னைகளை மக்கள் தினமும் சந்தித்து வரும் வேளையில் "எனது மகன் தனது அப்பாவை இனி எப்போது பார்ப்பான்' என்று ஏக்கத்துடன் டென்னிஸ் ஆட்ட வீராங்கனை சானியா மிர்ஸா தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
சானியா மகன் இஸான் மிர்ஸா மாலிக்குடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கணவர் சோயிப் மாலிக் பாகிஸ்தானில் தனது தாயுடன் வசித்து வருகிறார். சானியா சோயிப் துபாயில் உள்ள வீட்டில் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் கரோனா வந்ததினால் எல்லா நாடுகளிலும் விமானப் போக்குவரத்து நின்று போனதால் சானியா, சோயிப் மாலிக் துபாய் செல்ல முடியாமல் இருக்கிறார்கள்.
பிரசவம் ஆன இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2020-இல் ஜனவரி மாதம் சானியா டென்னிஸ் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்தார். அமெரிக்காவில் விளையாடச் சென்ற சானியா கரோனா முடக்கம் அமெரிக்காவில் அறிவிக்கப்படும் முன்பு தப்பித்தேன் பிழைத்தேன் என்று இந்தியா வந்து சேர்ந்துவிட்டார். இது குறித்து சானியா கூறுகையில்:
""கணவர் மாலிக் பாகிஸ்தானில் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் பாகிஸ்தானிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட விமான சேவைகளும் தடை செய்யப்பட்டு அங்கேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. தவிர 65 வயதாகும் தனது தாய்க்குத் துணையாக இருந்து மாலிக் தாயைக் கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
கரோனா பரவல் குறையாத சூழ்நிலையில் "இனி என் மகன் இஸான் அவன் தந்தையை எப்போது சந்திப்பான் என்று தெரியவில்லை. நவம்பர் 3 வந்தால் இஸானுக்கு இரண்டு வயது நிறைவடையும்.
வீட்டில் சிறு குழந்தை. வயதான பெற்றோர். அவர்களுக்கு தொற்று வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு நிலைமை கைவிட்டுப் போயுள்ளது. இந்த சூழ்நிலையில் டென்னிஸ் விளையாடுவது குறித்து எப்படி நினைத்துப் பார்க்க முடியும்.
இப்போது இருக்கும் பிரச்னையே கரோனா தொற்றிலிருந்து தப்புவதுதான்... ஏழை எளியவருக்கு கரோனா காலத்தில் உதவினாலும், அடுத்தடுத்து சமூக ஊடகங்களில் சாதாரணமானவர்களின் துயரங்களை கஷ்டங்களை பார்க்கும் பொழுது அனைவருக்கும் உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எழுந்து நிற்கிறது. அதிர்ஷ்டவசமாக என்னைப் போன்றவர்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். பிறருக்கு எங்களால் உதவ முடியும். நானும் எனது நண்பர்களும் சேர்ந்து மூன்று கோடி ரூபாய் நிதி திரட்டி நலிந்தவர்களுக்கு உதவினாலும் அது போதாது. ஏனென்றால் நலிந்தவர்கள் மிக அதிகமாக இங்கே இருக்கிறார்கள்.
கரோனாவில் அனைத்து விளையாட்டுகளும் பாதிக்கப்பட்டது போல டென்னிஸூம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரசவத்திற்குப் பிறகு டென்னிஸ் விளையாட வந்ததே 2020 ஒலிம்பிக்சில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் கரோனா காரணமாக ஒலிம்பிக்úஸ ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா காலம் விளையாட்டு வீரர்களுக்கும் சோதனைக் காலம்தான். அவர்கள் முறையான பயிற்சி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. மீண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முயற்சிகள் நடந்து வந்தாலும் , போட்டிகள் ஆங்காங்கே நடத்தினாலும் பயணங்களில் கரோனா அபாயம் இல்லாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதனால் கரோனா தொற்று காரணமாக நான் நடத்தும் டென்னிஸ் பயிற்சி அரங்கை திறப்பதைத் தள்ளிப் போட்டுள்ளேன். காரணம் டென்னிஸ் பயிற்சியில் சிறு பிள்ளைகளும் கலந்து கொள்கின்றனர். அவர்களை அபாயத்தில் இறக்கிவிட முடியாது. அதனால் இப்போதைக்கு உயிர் வாழ்வதற்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். பிறகு எனது குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
என்னதான் வீடியோ அழைப்புகள் வழியாகப் பேசினாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், குழந்தையுடன் நேரில் தொட்டு தூக்கி பேசுவது போலாகுமா.. பழைய வாழ்க்கை மீண்டும் வாழும்படியான காலம் விரைவில் மாறும் என்று நம்புவோம்...' என்கிறார் சானியா மிர்ஸா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...