கையில் "அக்னிச் சிறகுகள்' சிறகடிக்க, இரண்டாமாண்டு பியூசி படித்துக் கொண்டிருந்தபோது, "சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை; துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை. உன் ரேகையை பார்த்து எதிர்காலத்தை தீர்மானித்துவிடாதே... ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக்கூட எதிர்காலம் உண்டு. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்' என்ற டாக்டர்.ஆ.ப.ஜே.அப்துல் கலாமின் வாசகங்கள் மனத்தோடு தைக்கப்பட்டுள்ளன.
காணொளியில் தினமும் கண்ட அப்துல்கலாமின் உரைவீச்சுகள், மனதை வெற்றியை நோக்கி நகர்த்தியுள்ளன. விளைவு... வறுமை தந்த தடைகளை உடைத்தெறிந்து, கர்நாடக மாநிலத்தின் விஸ்வேஷ்வரையா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் விமானவியல் துறையில் முதலிடம் பிடித்து தங்க மங்கையாக மின்னுகிறார் கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூர் பகுதியை சேர்ந்த இரா.லலிதா.
படிப்பு வாசனையே இல்லாத தாய், தந்தைக்கு மகளான லலிதா, "இளமையில் கல்" என்பதை எழுத்து மாறாமல் பின்பற்றி வந்திருக்கிறார். காய் வியாபாரியின் மகளான லலிதா, பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்று பலருக்கும் முன்மாதிரியாக உருவெடுத்திருக்கிறார்.
அப்துல்கலாம் போல விஞ்ஞானி ஆக துடிக்கும் லலிதா, உச்சம் தொட்டக் கதையை விளக்குகிறார்:
""விமானவியல் துறையில் தங்கப்பதக்கம் பெறுவதற்கு முழுமுதற்காரணமாக இருந்தது எனது தந்தை கே.ராஜேந்திரன், தாய் ஆர்.சித்ரா, தங்கைகள் புவனா, துளசி. எனது தாய்மொழி தமிழாக இருந்தாலும், ஹிரியூரில் உள்ள ஸ்ரீவாக்தேவி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை கன்னட மொழியில் படித்தேன். பத்தாம் வகுப்பு தேர்வில் 94 சதம், பியூசி தேர்வில் 87சதம் மதிப்பெண் பெற்றிருந்தேன்.
சித்ரதுர்காவில் உள்ள எஸ்.ஆர்.எஸ். பியூ கல்லூரியில் பியூசி வகுப்பை முடித்து, பெங்களூரில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் பொறியியல் கல்லூரியில் பி.இ.(விமானவியல்) படித்தேன். விமானவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்தபோது, "இது பெண்களுக்கு உகந்த படிப்பு அல்ல" என்று தடுத்து பார்த்தனர். ஆனால், கலாம் ஐயா படித்த படிப்பையே படிக்க வேண்டுமென்ற ஆவல், விமானவியல் படிக்க ஊக்கப்
படுத்தியது.
ஆரம்பத்தில் விமானவியல் படிக்க கடினமாக இருந்தாலும், அதில் காணப்பட்ட புதுமையான அம்சங்கள் என் ஆர்வத்தைத் தூண்டியது. புதிது புனைதலும், புதிது தெரிதலும் எனக்கு பிடித்தமானது என்பதால் விமானவியல் படிப்பு என்னை புது மாதிரியாக உருமாற்றியது. புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு விமானவியல் படிப்பு சரியானது. அதனால் ஊக்கம் குறையாமல் படித்தேன். அதன் காரணமாக, பல்கலைக்கழகத்தில் 10க்கு 9.07 தர மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளேன்.
அடுத்ததாக விமானவியல் பொறியியலில் எம்.எஸ்.முதுகலை பட்டப்படிப்பு படிக்கவும் ஆசையாக உள்ளது.
எனது அப்பாவும் அம்மாவும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கள். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்து, இரவு 10 மணி வரை வியாபாரம் செய்து, எங்களை காப்பாற்றுவதற்காக கடினமாக உழைப்பதை பார்த்து, எனக்கும் உழைக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
சிறுமியாக இருந்த காலந்தொட்டே "பெண்களுக்கு கல்விதான் மிகச்சிறந்த கருவி. படித்தால் தான் மதிப்பு' என்று அம்மா கூறி வந்தது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. வெங்காயம், உருளைக்கிழங்கு மூட்டைகளை அப்பா சுமந்து கொண்டு சிரமப்படுவதை பார்த்ததால், வறுமையை போக்க கல்வியை கற்றுக்கொண்டேன். கொஞ்சம் வளர்ந்தபிறகு அப்துல்கலாமின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். அவரது எளிமை, ஊக்குவிக்கும் தன்மை, உற்சாகம் என் மனம் கவர்ந்தவை. அவரது வழியில் புதிதாக பலவற்றை கற்க வேண்டும், அறிவு வெளியை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளது.
2020}ஆம் ஆண்டில் இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென்று அப்துல்கலாம் கண்ட கனவு நனவாகவில்லை. அந்த கனவு ஒருநாள் மெய்ப்படும். மெய்ப்படும் நாளில் கலாமின் ஆன்மா சாந்தியடையும். அதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். பெண்கள் படிக்க துணிய வேண்டும். எல்லா பெண்களுக்கும் குறிப்பாக கிராமப் பெண்களுக்கு கட்டாயம் கல்வி கிடைக்க வேண்டும்.
சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் கல்விதான் பெண்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும். இஸ்ரோ தலைவர் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, கல்பனா சாவ்லா போன்ற விஞ்ஞானிகளின் வாழ்க்கை எனக்கு வழிகாட்டியாக உள்ளது. கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதே என் அனுபவம். வீட்டிலேயே தாய்மொழி தமிழை எழுத படிக்க கற்றுக் கொண்டுவிட்டேன். விஞ்ஞானியாக புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட ஆசைப்படுகிறேன்'' என்றார்.
தங்க மங்கையாக ஒளிரும் லலிதா தந்தை ராஜேந்திரன் கூறுகையில்,"10 வயதுமுதலே அம்மாவுடன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். நான் படிக்கவில்லை. கையெழுத்துக்கூட போட தெரியாது. எதையாவது எழுத வேண்டுமானால், பிறரின் உதவியை நாட வேண்டியிருந்தது. படிப்பில்லாதது, உடல் ஊனத்தை விட மோசமாக கருதினேன்.
அதனால் என் தங்கைகளை படிக்க வைக்க நினைத்தேன், முடியவில்லை. அந்த குறையை எனது மூன்று மகள்
களும் நிறைவேற்றி தந்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது கனவிலும் நினைக்காத ஒன்று. என் மகள்களை படிக்க வைக்க ஏராளமாக கடன்பட்டிருக்கிறேன். அதை விரைவில் தீர்த்து விடுவேன். எத்தனை கடன்பட்டாவது என் மகள்களுக்கு உயர்ந்த கல்வியை வழங்க தயாராக இருக்கிறேன். கல்வியை விட மிகப்பெரிய செல்வம் பெண்களுக்கு வேறு எதுவும் இல்லை என்று நினைப்பவன் நான். பெண்களுக்கு கல்வி தான் அழகு'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!
வீடியோக்கள்

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

