நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அதிசயப் பெண் ஜான்வி!

"ஒருவர் முதல் முயற்சியில் தோற்கலாம்... இரண்டாம் முயற்சியிலும் தோற்கலாம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:44 pm

பிஸ்மி பரிணாமன்

"ஒருவர் முதல் முயற்சியில் தோற்கலாம்... இரண்டாம் முயற்சியிலும் தோற்கலாம். இரண்டு முயற்சிகளில் கிடைத்த அனுபவம் மூன்றாம் முயற்சியில் கை கொடுக்கும். தோல்வி என்பது வெற்றிக்கான அடுத்த வாய்ப்பு என்பதை மறந்து விடாதீர்கள்' என்கிறார் இந்தியாவின் "அதிசயப் பெண்' (WONDER  GIRL) ஜான்வி பன்வர்.

ஜான்விக்கு 16 வயது ஆகிறது. எட்டு மொழிகளில் புலமை பெற்றிருக்கும் ஜான்வி ஆங்கில மொழியை 12 வெளிநாடுகளில் வெவ்வேறு விதமாக எப்படி பேசுவார்களோ அப்படிப் பேசி அசத்துகிறார். ஜான்வி பேசுவதைக் கேட்டால் ஏதோ வெளிநாட்டவர் ஆங்கிலம் பேசுவதாகவே தோன்றும். அந்த அளவுக்கு தனித்தன்மையான மேலை நாட்டு ஆங்கில உச்சரிப்பு.

நம்பிக்கைகளை விதைக்கும் ஊக்கச் சொற்பொழிவுகளை 11- வயதிலிருந்து பொது இடங்களில், கல்லூரிகளில் ஆற்றி வரும் ஜான்விக்கு, ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்பதே கனவு. ஜான்வி மனம் திறக்கிறார்:

""என் தந்தை பிரிஜ்மோஹன் பன்வர். பள்ளி ஆசிரியர். சின்ன வயதில் எனக்கு மற்ற குழந்தைகளைப் போல விளையாட்டில் கவனம் செல்லவில்லை. ஆர்வமும் இல்லை. நாளிதழ்களில் பிரசுரமாகும் குறுக்கெழுத்துப் புதிர்கள், போட்டிகள், விதம் விதமான வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும் படங்கள் உள்ள பாடப் புத்தகங்களும் என்னைக் கவர்ந்து இழுத்தன. சின்னத் திரையில் பல சானல்களில் கார்ட்டூன் தொடர்கள், செய்திகளைக் கவனித்துப் பார்ப்பேன்.. கேட்பேன். கார்ட்டூனில் வரும் கதாபாத்திரங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதை, செய்திகள் ஆங்கிலத்தில் வாசிக்கப்படுவதை.. உச்சரிப்பிற்காக கவனமாகக் கேட்பேன். மனதுக்குள் சொல்லிப் பார்ப்பேன். அவர்கள் போல நாமும் ஆங்கிலம் பேச வேண்டும் என்பது எனது லட்சியமாக மாறியது.

ஆனால் நான் பிறந்ததோ குக்கிராமம். அப்பா ஆசிரியர் என்றாலும் ஆங்கிலம் பேச வராது. படித்தவர் நிலைமையே இதுதான் என்றால் கிராமத்தின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டாம். எனது கிராமத்தில் இந்தி மற்றும் ஹரியான்வி மொழிகள்தான் பேசுவார்கள். சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் யாருக்கும் பேச வராது. ஒருமுறை டெல்லியில் செங்கோட்டையைச் சுற்றி பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கு வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்னைப் பார்த்து "ஹாய்' என்றார்கள். நானும் பதிலுக்கு "ஹாய்' சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் அவர்களுடன் பேசினேன். "நான்கு வயதில் நன்றாக ஆங்கிலம் பேசுகிறாளே' என்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியம்.

எனது பெற்றோருக்கோ "எப்படி ஆங்கிலம் பேசக் கற்றாள்' என்று ஆச்சரியமோ ஆச்சரியம். பிரமித்துப் போயினர். எல்லாம் கார்ட்டூன் படங்களைப் பார்த்து, செய்தி அறிக்கைகளைக் கேட்டு கற்றுக் கொண்டதுதான்.

நர்சரி வகுப்பில் என்னைச் சேர்க்க பெற்றோர் அழைத்துச் செல்ல.. எனது திறமையைக் கண்ட நர்சரி தலைமை ஆசிரியர் நேராக "யுகேஜி' யில் சேர்த்துக் கொண்டார். அப்படி அதிரடியாகத் தொடங்கிய எனது பள்ளிப் பருவம், அடுத்தடுத்து பல திருப்பங்களைச் சந்தித்தது.

"ஆங்கிலத்தில் எனக்கிருக்கும் அதீத ஆர்வத்தை உணர்ந்து கொண்ட அப்பா, பல இணையதளங்களின் மூலமாக "பேச்சு ஆங்கிலம்' கற்க பல காணொளிகளை பதிவிறக்கம் செய்து என்னைப் பார்க்க, கேட்கச் செய்தார். அவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துப் புரிந்து கொண்டேன். காணொளியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பவருடன் சேர்ந்து நானும் உச்சரித்துப் பழகினேன். ஆங்கிலத்தை இங்கிலாந்தில் ஒருவகையில் பேசுவார்கள். அமெரிக்காவில் வேறு விதத்தில் பேசுவார்கள். ஆங்கிலத்தைப் பல நாடுகளில் பலவிதமாகப் பேசுவதால், அந்தந்த நாட்டவருக்கு தகுந்தவாறு ஆங்கிலம் பேச வேண்டும் என்று ஆங்கில மொழியியல் அறிஞரிடம் பயிற்சி பெற்றேன்.

பதினோரு வயதில் ஆங்கிலத்தை 11 உச்சரிப்பில் பேசக் கற்றுக் கொண்டேன். தற்சமயம் பன்னிரண்டு உச்சரிப்புகளில் ஆங்கிலம் பேச முடியும். பிரெஞ்ச் ஜப்பானிய மொழியும் எனக்குத் தெரியும்.

பள்ளியில் எனக்கு அவ்வப்போது "டபிள் பிரமோஷன்' கொடுத்து வந்ததால் பன்னிரண்டு வயதிலேயே நான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பதினைந்து வயதில் பட்டப்படிப்பை முடித்து விட்டேன். அடுத்த கட்டமாக, டெல்லியில், பன்னாட்டுத் தூதரகங்கள் நடத்தும் ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பினேன். பயிற்சி வகுப்புகளின் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்ட போது, 16 வயது கடந்தவர்கள் மட்டுமே பயிற்சி வகுப்புகளில் சேர முடியும் என்றனர். ஏமாற்றத்தில் சற்றும் மனம் தளராமல் இணையதளங்களில் பயணித்து ஆங்கில மொழியை வெவ்வேறு உச்சரிப்புகளில் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக் கண்டேன்.

என்னை எங்களது மாநில ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் 150 பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னிலையில் பேச வைத்தார். எனது சொற்பொழிவு முடிந்ததும் அந்த அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினர். அப்போது எனக்கு வயது பதினான்கு. இந்த தருணத்தை வாழ்க்கையின் முக்கிய அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆங்கிலம் முறையாகப் பேசுவது எப்படி என்று ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறேன்.

"பத்திரிகையியல் மற்றும் பொதுமக்கள்' தொடர்பில் முதுகலை படிப்பில் விரைவில் சேர உள்ளேன். கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு.. இவைதான் சாதனைகளை செய்ய வைக்கும்'' என்கிறார் ஜான்வி பன்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.