வேர்களைத் தேடி தமிழ்ப் பயணம்!
""தஞ்சைப் பகுதியிலிருந்து வந்த என் தாய் சில நூல்களையும் கொண்டு வந்தார். ஒன்றிரண்டு ஓலை சுவடிகளும் அவரிடம் இருந்தன. அப்போதெல்லாம் சுவடி குறித்த ஆர்வம் என்னைத் துரத்தவில்லை.


""தஞ்சைப் பகுதியிலிருந்து வந்த என் தாய் சில நூல்களையும் கொண்டு வந்தார். ஒன்றிரண்டு ஓலை சுவடிகளும் அவரிடம் இருந்தன. அப்போதெல்லாம் சுவடி குறித்த ஆர்வம் என்னைத் துரத்தவில்லை. ஜெர்மனியில் இங்கிலாந்தில் அவர்களின் பழமையான நூல்களை எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டபோது அவர்கள் தமிழ் நாட்டின் ஓலைச் சுவடிகளையும் பாதுகாத்து வருகிறார்கள் என்பது தெரிய வந்தது. அப்போதுதான் எனக்குள் ஒரு விழிப்புணர்வு வந்தது. "ஒரு பந்தமும் இல்லாத வெளிநாட்டவர்கள் தமிழ் ஓலைச் சுவடிகளை ஏன் கண் போன்று பாதுகாக்க வேண்டும்.. நாம் அப்படி செய்வதில்லையே' என்று தோன்ற ஆரம்பித்தது. அதிலிருந்து ஓலைச் சுவடிகளைத் தேடும் பெண் "உ.வே.சா' ஆனேன். தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் தானாக வந்து சேர்ந்து கொண்டது. எனக்கு கிடைக்கும் விடுமுறை நாட்களில் தமிழின் தொன்மை தேடி பயணிக்க தொடங்கினேன்.
சீனாவில் அன்றைய மக்கள் தங்கள் எண்ணங்களை, கண்டுபிடிப்புகளை, பாடல்களை பட்டுத் துணியில் எழுதி வைத்தார்கள். எகிப்தில் பாப்பரஸ் என்ற நதி, ஆற்று ஓரங்களில் வளரும் ஒருவகையான செடிகளின் இலைகளை பதப்படுத்தி பதிவுசெய்தார்கள். தமிழர்கள் பனை ஓலையில் எழுதி வைத்தார்கள்.
புராதன காலத்து உலக பயணியாக இருந்த யுவான் சுவாங், இபுன் பதூதா, மார்கோபோலோ இந்தியா வருகை தந்த போது இந்தியாவை "தமிழர்கள் நாடு' என்றுதான் குறிப்பிட்டார்கள். அப்போது "இந்தியா' என்ற பெயர் அறிமுகம் ஆயிருக்கவில்லை. ஐரோப்பிய நாட்டினர் "தமுலண்ட லேண்ட்' என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். இன்றைய தமிழகத்தின் எல்லைக்கும் அன்றைய தமிழகத்தின் எல்லைக்கும் சம்பந்தம் இல்லை.
தமிழகத்தில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல ஆயிரக்கணக்கான சுவடிகளை கண்டுபிடித்து அவற்றில் பலவற்றை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியுள்ளோம். வெளிநாடுகளில் பாதுகாக்கப்படும் தமிழ் சுவடிகளை அவர்கள் அனுமதியுடன் டிஜிட்டல் வடிவமாக்கும் பணி தொடர்கிறது. எனது ஓய்வு நேரத்தில் இந்தப் பணிகளை செய்வதால் விரைவாகச் செய்ய முடிவதில்லை. ஜெர்மனி, இங்கிலாந்து, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிகவும் அரிதான தமிழ் சுவடிகள் இருக்கின்றன. ஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள், நாட்குறிப்புச் செய்திகள், காகித ஆவணங்கள் இவற்றில் அடங்கும். வாடிகன் நகரத்திலும் உள்ளன. அவற்றை தமிழ் மரபு அறக்கட்டளை அணுக முடியவில்லை. அரசுகள் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தால்தான் அந்த பொக்கிஷங்களைப் பார்க்க முடியும். டிஜிட்டல் மயமாக்க முடியும்.
தஞ்சையை கி.பி. 1620 -இல் ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் தரங்கம்பாடியில் கோட்டை கட்டிக் கொள்ள டென்மார்க் வணிகர் தலைவனுக்கு மூவாயிரத்து நூற்றி பதினொன்று "பணம்' ஆண்டு வாடகையாகப் பெற்றுக் கொண்டு எழுதிக் கொடுத்த தங்க சாசனம் டென்மார்க்கில் இருக்கிறது. வெளிநாட்டவர்கள் இங்கு வணிகம் செய்ய வந்தபோது தமிழ் படித்து பல அறிய சுவடிகளை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்கள். அவை அந்தந்த நூலகங்களில் உறங்குகின்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி பெருமை பேசும் நம் மக்கள் அவர்களுக்கு முன் வாழ்ந்த சாமான்ய தமிழர்களைப் பற்றி பேசுவதில்லை.
வைகைக் கரையோரம் முழுதும் குழிகள் தோண்டி அகழாய்வுகள் தொடர்ந்தால், மறைந்துபோன சிந்துவெளியின் தொடர்ச்சி இங்கு வைகைக்கரை நாகரிகத்தின் அடித்தளத்தை அமைத்தது என்பதற்கு மேலும் பல சான்றுகள் கிடைக்கும். மன்னர்களைப் பற்றி பேசியது போதும்.. அன்றைய தமிழ் மண் குறித்தும் பேசுவோம்.
இலங்கையில் சிங்கள மொழி உருவாக்கம்-வளர்ச்சி நிகழ்வதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் இலங்கைத் தீவு முழுமையும் இருந்தனர். சங்கமித்திரை வருகை, மணிமேகலை வருகை போன்றவற்றை காணும்போது, பெüத்தம் இலங்கைத் தீவு முழுமைக்கும் தமிழர்கள் வழக்கில் ஏற்றுக் கொண்ட ஒரு சமயமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் இன்று சிங்கள இனத்துடன் பெüத்தமும் தமிழ் மக்களுடன் இந்து சமயமும் மட்டுமே பொருந்திப் பார்க்கப்படும் நிலை உருவாகிவிட்டது.
தமிழகத்தில் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தாயம், நொண்டி, பாண்டி, பல்லாங்குழி, பரமபதம் போன்ற விளையாட்டுகளை மலேஷியாவில் பினாங்கு தமிழ் மக்களிடையே அறிமுகம் செய்துவருகிறோம். தமிழகத்தில் புராதானச் சின்னங்கள் இன்றைக்கு நாதியற்று கிடக்கின்றன. இவற்றை நாம் எடுத்து வைக்கவும் இயலாது. ஏனென்றால் அவை அரசுக்கு சொந்தம். அதனால் அந்ததந்தப் பகுதியில் அருங்காட்சியகங்கள் அமைத்து அவற்றைப் பாதுகாக்கலாம். வேரில் கிடக்கும் பலா போல பொக்கிஷங்கள் வெளிநாடுகளில் உள்ளன. அவற்றை இங்கே கொண்டு வர இயலாது. ஆனால், நகல் எடுத்து ஆராய்ச்சிகள் செய்யலாம்'' என்கிறார் சுபாஷிணி.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூறு வரிகளை உள்ளடக்கி "உலகம் என் வீடு; உயிர்கள் அனைத்தும் என் உறவு; நான் ஓர் உலகத் தமிழ்மகள்' என்று வாழ்பவர்தான் சுபாஷிணி. மலேஷியாவில் பிறந்த சுபாஷிணியின் பெற்றோர் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கணினி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சுபாஷிணி வெளிநாடுகளில் படித்தவர். ஜெர்மனியில் பணி புரிவதால் அங்கேயே தங்கியிருப்பவர்.
தனக்கு கிடைக்கும் விடுமுறைகளில் பல நாடுகள், ஊர்கள் சுற்றி வருபவர். அவர் சுற்றுப்பயணம் போவது சுற்றுலா இடங்களைக் கண்டு மகிழ அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த நமது முன்னோர்கள் தடம் பதித்துச் சென்றிருக்கும் தடயங்களைக் கண்டு
பிடிக்க காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பயணிக்கிறார். அந்தத் தடயங்கள் ஓலைச் சுவடியாக இருக்கலாம். புராதன சின்னங்களாக இருக்கலாம். பழங்காலத்து சிற்பம், கல்வெட்டு, நடுகல்... நாணயம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் வந்து செல்லும் சுபாஷிணி இம்முறை இலங்கையும் சென்று வந்திருக்கிறார். பிறந்தது, படித்தது எல்லாம் மலேஷியாவில் என்றாலும் ஒரு தமிழ் நாட்டுப் பெண் போன்று வெகு சரளமாக தமிழ் பேசும் அதிசயம். தமிழின் பால் உள்ள பற்றுதலால் "தமிழ் மரபு அறக்கட்டளை', ஒன்றினை நண்பர்களுடன் சேர்ந்து ஜெர்மனியில் நடத்தி வருபவர். படித்த படிப்பிற்கும் பார்க்கிற வேலைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத தமிழின் வேர்களை சுபாஷிணி தேட.. பல நாடுகள் பயணிக்க எப்படி ஆர்வம் பிறந்தது என்று கேட்டோம்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...