எளிதில் கற்கலாம் தமிழை! சொல்கிறார் : தமன்னா
தெளிவு தமிழில் பேசுகிறார் தமன்னா. தமிழ்ப் பட வாய்ப்புகளில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்த தமன்னா, இப்போது விஜய்


தெளிவு தமிழில் பேசுகிறார் தமன்னா. தமிழ்ப் பட வாய்ப்புகளில் அவ்வளவாக கவனம் செலுத்தாமல் இருந்த தமன்னா, இப்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தர்மதுரை, விஷாலுக்கு ஜோடியாக கத்திச் சண்டை என பரபரப்பு காட்டுகிறார். அதிலும் தர்மதுரை படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசுவது கூடுதல் சிறப்பு....
அடுத்தடுத்து தமிழில் படங்கள் இருந்த காலங்கள் உண்டு.... இப்போது அப்படியில்லை... ரொம்பவே அமைதியாகி விட்டீர்கள்?
எதுவும் என் கையில் இல்லை. ஒரு படத்தின் வெற்றியோ, வியாபாரமோ ஒரு ஹீரோயின் கையில் இல்லவே இல்லை. அதை பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஒரு படம் ஓடினால் அதற்கு அந்த ஹீரோயின் பெயர் உதவுமே தவிர, மற்றபடி எதுவுமே கிடையாது. இந்த விஷயத்தில் எனக்கு நீக்கமற நம்பிக்கை உண்டு. அதனால்தான் நான் அதிகம் பேசுவது கிடையாது. பாகுபலி படத்துக்காக நீண்ட நெடிய கால்ஷீட் கொடுத்து நடித்தேன். அதனால்தான் தமிழ் உள்ளிட்ட எந்த மொழிகளிலுமே என்னைப் பார்க்க முடியவில்லை. தர்மதுரை படம் நான் எதிர்பார்க்காத வாய்ப்பு. எதேச்சையாக கதை கேட்டேன். பிடித்திருந்தது. அச்சு அசல் கிராமத்துப் பெண் வேடம். பார்க்கவே புதிதாக இருக்கும். அதைப் போல்தான் கத்திச் சண்டை. விஷாலுடன் முதன் முறையாக ஜோடி சேருகிறேன். முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உண்டு என பொய் சொல்லவில்லை. அது ஒரு ஹீரோ படம். ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ, அந்த முக்கியத்துவம் மட்டுமே இருக்கும். இனி தமிழில் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
தமிழ் தெரியாமல் கோலிவுட்டில் அறிமுகமானவர் நீங்கள்... இப்போது டப்பிங் பேசும் அளவுக்கு வளர்ச்சி... எப்படி இருக்கிறது?
எது செய்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என நினைப்பேன். அப்படித்தான் இது நடந்தது. நான் தமிழ் பேசுவதை கண்டு பலர் ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்கள். பரவசத்துடன் பார்த்தவர்களும் உண்டு. தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் போது, நிச்சயம் ஒரு நாள் தமிழில் பேச வேண்டும் என எண்ணினேன். அதற்கான பயிற்சிகளை தினம் தினம் எடுத்து வந்தேன். அதனால்தான் இந்தளவுக்கு என்னால் பேச முடிகிறது. என்னைப் பொருத்தவரை எளிதில் கற்றுக் கொள்ள கூடிய மொழி தமிழ்தான். இது நான் உணர்ந்தது. மற்றவர்களும் உணர்ந்தால் தமிழில் பேசலாம். இப்போது மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என
தென்னகத்து மொழிகளில் பேசுவது எனக்கு கை வந்த கலை. கிளாமர், நடனம் என்று மட்டுமே ஆடுவது ஹீரோயினின் வேலையாக இருக்க முடியாது. டப்பிங் பேசினால் அதில் ஒரு பூரணம் கிடைக்கும். அதனால்தான் இந்த முயற்சி.
பாகுபலி நடிப்பு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது...?
அது பற்றி ரொம்பவே சாதாரணமாக பேசி விட முடியாது. என் சினிமா வாழ்க்கையில் மைல் கல் படமாக அதை நான் பார்த்து கொள்ளலாம். அதை கவனத்தில் கொண்டுதான் அந்தப் படத்துக்கு தயாரானேன். எல்லோராலும் பாராட்டப்படும் என்பது எனக்கு தெரியும். படம் ஹிட்டாகும் என்றும் தெரியும். ஹிட்டாகும் அதே நேரத்தில், என் கேரக்டரும் பேசப்படும் என தெரிந்து நடித்த படம் அது. அது பற்றி நிறைய பேச இருக்கிறது. வியாபார ரீதியாகவும் அந்தப் படம் சாதனை புரிந்ததில் மகிழ்ச்சி. பாகுபலி இரண்டாம் பாகம் குறித்து இப்போது பேசுவதற்கு இல்லை. பாகுபலி படத்தை விட அது வேறு இடத்தில் வைத்து பார்க்கப்படும். பாகுபலிக்கு பாராட்டு தெரிவித்தவர்களுக்கு நன்றி.
விஜய், அஜித், சூர்யா கூட நடித்த அனுபவங்கள்?
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. அவர்களிடம் பல விஷயங்கள் கற்றுக் கொண்டே இருக்கலாம். விஜய் சார் ரொம்பவே அமைதி. பொறுமை. ஆனால், அதெல்லாம் நட்பாக பழகும்போதுதான் தெரியும். கேமரா முன் நின்று விட்டால் வேறு மாதிரி ஆகி விடுவார். அதிகம் பேச மாட்டார். ஆனால் அவரின் புன்னகைகளுக்கு பெரிய அர்த்தம் இருக்கும். தமிழ் சினிமாவில் நான் சந்தித்தவர்களில் அஜித் சார் எனக்கு ரொம்பப் பிடித்த, முக்கியமான நபர். இயக்குநர் தொடங்கி லைட்மேன் வரை எல்லாரிடமும் ஒரே மாதிரி தன்மையாகப் பழகுவார். நம் பிரச்னையை நன்றாக புரிந்து கொண்டு, வழிநடத்துவார். சூர்யாவோடு வேலை பார்ப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கும்போது ஒரு குடும்ப உணர்வு கிடைக்கும். மறக்கக் கூடாத மனிதர். இவர்களோடு நடிக்கும் வாய்ப்புகளை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு மேலாகியும் ஒரே மாதிரியான உடல் அடையாளத்தோடு இருக்கிறீர்கள்?
நான் எதைச் செய்தாலும் இதயத்தில் இருந்து செய்வேன். அதுவே நம்மையும் நம்ம வேலையையும் அழகாக்கும். மனசு சந்தோஷமாக இருக்கும்போது, வயிற்றுக்கும் வஞ்சம் இல்லாமல் சாப்பிட்டிடுவேன். அப்புறம் கூடின வெயிட்டை உடற்பயிற்சிகளில் கரைப்பேன்.
யார் கூட நடிக்க விருப்பம்?
தமிழில் ரஜினி, கமல்.
திருமணம் எப்போது...?
இப்போது சினிமாவைத்தான் காதலிக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...