எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கிரைண்டருக்குள் மாட்டிய கல்லுரல்... குக்கருக்குள் குழைந்த கட்டுச்சோறு...!

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் அதிலிருந்து தற்போது வெகு தூரம் விலகிச்சென்றுவிட்டதை உணர்ந்துள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:43 pm

ஜெயப்பாண்டி

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் அதிலிருந்து தற்போது வெகு தூரம் விலகிச்சென்றுவிட்டதை உணர்ந்துள்ளனர். எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இறந்த காலத்தின் அறிமுகம் அவசியமாகும். ஆகவே நமது மூதாதையரின் பாரம்பரியப் பண்பாட்டை இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

  பழம் பெரும் தமிழ் பாரம்பரியத்தை இளந்தலைமுறைக்கு நினைவூட்டுவதில் "தமிழ் மரபு அறக்கட்டளை' தனித்துவத்துடன் செயல்பட்டுவருகிறது.

 மதுரையில் மாணவர்களிடையே பழைய மரபுப் பொருள் கண்காட்சியை நடத்தி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. கண்காட்சியில், கல்லுரலில் மர உலக்கையைக் கொண்டு நெல்லை குத்தி அரிசி எடுத்த கிராமத்து பாட்டிகளைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்தனர் கல்லூரி மாணவியர்.

டயர் சக்கரமும், இரும்பு மரச் சட்டங்களையும் கொண்ட மாட்டு வண்டியில் மாணவ, மாணவியரைப் பயணிக்க வைத்து மகிழ்ச்சியில் துள்ள வைக்கின்றனர். அலுமினியச் சட்டியில் அல்வாத் துண்டுபோல எடுத்த கட்டுச் சோற்றை ருசி பார்த்த இளைஞர்கள்... ""ஆகா... இப்படியொரு ருசி மிகுந்த சோற்றை இதுவரை உண்டதில்லை'' என ரசித்துச் சாப்பிட்டனர்.

""கல்லுரல் இன்று கிரைண்டருக்குள் சிக்கியும், கட்டுச்சோறு குக்கரில் குழைந்தும் இருப்பது போலத்தான் நமது பாரம்பரிய, பண்பாடும் நவீன நாகரீகத்தில் சிதைந்து போனது. அதை மீட்டெடுக்கும் முயற்சியே எங்களது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியாகும்'' என்கிறார் மதுரை தியாகராஜர் கல்லூரிப் பேராசிரியை மலர்விழி மங்கையர்க்கரசி.

 அவர் மேலும் கூறியது: ""பாரம்பரியப் பொருள்கள் சேகரிப்பதன் நோக்கமே, நமது மரபைப் போற்றி, அந்த  மரபுச்சங்கிலித் தொடர் அறுந்துவிடாமல் காப்பதுதான். மரபிலிருந்து நழுவுவதால் நமக்கு ஏற்படும் எதிர்காலப் பாதிப்புகளையும் இளந்தலைமுறைக்கு எச்சரித்தலும் எங்கள் பணியில் அடங்கியிருக்கிறது.

 கடந்த 2015-இல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சந்தித்த தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்களின் சிந்தனையே தமிழ் மரபு அறக்கட்டளையின் உருவாக்கம். அதை ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் சுபாஷிணி

டிரம்மல் ஏற்படுத்தினார். இதில் தமிழர் அனைவரும் உறுப்பினராகலாம். அதில் "மாணவர் மரபுமையம்' தனியாகச் செயல்படுகிறது.

 மையத்தில்  இணையும் அனைவரும் தங்களிடம் உள்ள மரபுசார்ந்த கருத்துகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்த முடியும்.

மதுரை மையத்தின் தொடக்க நிகழ்வாக கடந்த ஆண்டு மணலூர் அழகுமலர் பள்ளியில் பாரம்பரியப் பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற மாணவர்கள் பலர் அவரவர் வீட்டிலிருந்து ஆர்வத்துடன் ஏராளமான மரபுப் பொருட்களைப் பள்ளிவளாகம் முழுவதும் குவித்து எங்களை மலைக்க வைத்துவிட்டனர்.

  ஆர்வத்தில் வீட்டிலிருந்து தாத்தா, பாட்டியரையும் அழைத்துக் கொண்டு வந்து கண்காட்சியில் அமர்த்திவிட்டனர் என்றால் நமது இளந்தலைமுறை எந்த அளவுக்கு பாரம்பரியத்தை நேசிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 நெல், அரிசியை அளக்கப் பயன்படும், படி, மரக்கால்; அவற்றை இடிக்கப் பயன்படும் உரல், உலக்கை,தானியங்களை அரைக்கப் பயன்படும் கல் திரிகை; கல்லை பிரிக்கப் பயன்படும் முறம்(சொளகு); ஓலைப் பெட்டிவகைகள், உழவுக் கருவிகள், ஏர், கலப்பை, களைக்கொத்தி, பாத்திரங்கள், அண்டா,  இரும்புப் பொருட்கள், மரக்கிளை அறுப்பது முதல் நெற்கதிர் அறுப்பது வரையிலான வித விதமான கத்திகள், அரிவாள்கள். மன்னர் காலத்துக் குத்துவாள்கள்.

காளை மாட்டுச் சலங்கை, மாட்டுக்கு மருந்து கொடுக்கும் மூங்கில் குழாய், சாட்டை, மாட்டு வண்டி என அப்பள்ளி வளாகமே பழங்கால தமிழர்களின் கிராமமாகிப் போனது.

Story image

 ஓலைச்சுவடிகள், நெல் மற்றும் நவதானியம், உணவுப் பொருட்கள், கவுணி அரிசிச் சோறு, கருவாட்டு குழம்பு, பால் கொழுக்கட்டை, கம்பு முதலான மாவு உருண்டைகள், பணியாரம், கொழுக்கட்டை வகைககள், விதவிதமான கட்டுச்சோறுகள், கீரை, பலகாரம் என, மாதிரிக் குடில் ஒன்றையே அமைத்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் பொருட்களைக் கொண்டு வந்து வகுப்பு வாரியாகப் பெயர்கள் ஒட்டிக் காட்சிப் படுத்தினர்'' என்கிறார் மூச்சுவிடாமல்.

  புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மரபு சார்ந்த பொருள்களின் கண்காட்சியை தமிழ் மரபு மையம் தொடர்ந்து நடத்தி வருவது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

  முதலிரண்டு தமிழ்ச் சங்கத்தைக் கடல் கொண்டு விட மூன்றாம் தமிழ்ச்சங்கம் மதுரையில் செயல்பட்டதாக சரித்திரம் கூறுகிறது. அதன் பின் திருக்குறளுக்கு உரை கிடைக்காத நிலையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தொடங்கி இதுவரையும் அச்சங்கம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

 ஆம்...தமிழின் கலாசார நகரான மதுரையில் தற்போது தமிழின் தொன்மையையும், நாகரீகத்தையும் காப்பதற்காக புதுப்பயணத்தை தமிழ்மரபு அறக்கட்டளை தொடங்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.