திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலைப்படாத காலம் ஒன்று இருந்தது.

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 12:04 pm

முனைவா் ம.பெ.சீனிவாசன்

மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலைப்படாத காலம் ஒன்று இருந்தது.

பிள்ளை பெத்துக் கெட்டவனில்லை

பிச்சையிட்டுக் கெட்டவனில்லை

மக்கள் தலையெடுத்தால் மச்சு

தலையெடுக்கும்

என்னும் நாட்டார் சொலவடைகளால் இது நன்கு விளங்கும்.

இந்த நிலையில் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கண்டு அஞ்சிய அரசு, நாட்டின் வளங்கள் மற்றும் அதன் பயன்கள் அனைவரையும் சென்று அடையத்தக்க வகையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது; தீவிரமாகவும் அதை நடைமுறைப்படுத்தியது. 1952-இல் உலகிலேயே முதன்முதலில் தேசிய அளவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு இந்தியாதான்.

எனினும், அதற்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே 1930-களில் குடும்பக் கட்டுப்பாடு குறித்துப் பேசும் கவிதை ஒன்று தமிழில் பிறந்தது. அந்தக் கவிதைக்குரியவர் பாவேந்தர்

பாரதிதாசன். 1938-இல் வெளியான பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில், 'தவிப்பதற்கோ பிள்ளை?' என்னும் தலைப்பில் ஒரு பாடல் காணப்படுகிறது.

இந்தப் பாடலை எப்போது அவர் எழுதினார்? முதல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறுவதற்கு முன்பாக ஏதேனும் ஒரு பத்திரிகையில் அது பிரசுரமானதா? என்ற விவரத்தை இன்று அறிய முடியவில்லை.

கவிஞர் தன்னையே ஒரு பாத்திரமாக்கி அடுத்தடுத்துப் பிறந்த பிள்ளைகளால், தாம் அடைந்த வருத்தத்தை எண்சீர் விருத்தத்தால் வெளிப்படுத்தும் கவிதை அது.

வறுமை படுத்தும் பாடு ஒரு பக்கம்; காதல் படுத்தும் பாடு மறுபக்கம். இவற்றுக்கிடையில் நைந்த பழங்கயிறாக அவன் வாழ்க்கை. எனினும், அவனும் அவளும் காதல் வெள்ளத்தில் தடுக்கி விழவே மனைவி மீண்டும் கருத்தரித்தாள்.

பத்துமாதம் செல்லப் பகற்போதில் ஓர்நாள்,

பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,

சித்தமெல்லாம் மூத்தபெண்

சுரநோயை எண்ணித்

திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து

முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல

முகூர்த்தத்தில் என்மனைவி

பிள்ளை பெற்றாள் என்றாள்!

தொத்துநோய், ஏழ்மை, பணக்காரர்களின்

தொல்லை

தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ

பிள்ளை!

'பிள்ளையோ பிள்ளை' என்று வீதிக்குக் கொண்டுவந்து அதைக் கூவி விற்காத குறை தான்.

குடும்பத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து தடுப்பு முறைகள் குறித்து - எதுவும் அறியாத காலம்; நினைத்துக்கூடப் பார்க்காத காலம்; யாரேனும் அது குறித்துக் கூறினும் ஏற்காத காலம்; 'கடவுள் கொடுப்பது பிள்ளை, அதைத் தடுப்பது பாவம்' என்ற நம்பிக்கை அவர்களின் கண்களை மூடியிருந்த காலம். எனவே, எதுவும் மக்களிடம் எடுத்துச் சொல்லமுடியாத

நிலையில்,

கஞ்சி பறித்தார்- எழுங்

காதல் பறித்தார்- கெட்ட

வஞ்சகம்சேர் சின்ன மானிட சாதிக்கு

வாய்த்த நிலை இதுவோ?

(பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி)

என்று வருந்தும் கவிஞர் அதற்கொரு தீர்வும் காண்கிறார்.

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்

கதவொன்று கண்டறிவோம்.

இதிலென்ன குற்றம்?

என்பது அவர் மக்கள் முன்வைக்கும் கேள்வி.

இத்துடன் நிற்காமல் மேலும் வினாக்கள் தொடர்கின்றன. கணக்கின்றிப் பிள்ளை பெறுவதால் பெறும் தவிப்பையும் சாவையும் தவிர்க்கலாமே! எனவே,

சாதலுக்கே பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?

சந்தான முறை நன்று; தவிர்க்கும் முறை தீதோ?

என்றும் வினவுகிறார் கவிஞர். இந்தச் சமூகம் இதற்கு என்ன பதில் சொல்லக்கூடும்? எனினும், குடும்பக் கட்டுப்பாடு குறித்த சிந்தனை அறவே இல்லாதிருந்த காலத்தில் அதை வலியுறுத்தி, மக்கள் வாழ்வில் விளையும் நன்மைக்கு வித்திட்டார் பாவேந்தர். அநேகமாகக் குடும்பக் கட்டுப்பாடு குறித்து இந்திய மொழிகளில் தோன்றிய முதல் கவிதையாகவும் இது இருக்கக் கூடும்.

இந்தக் கவிதை பிறந்த இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், 1950-களின் பிற்பாதியில் 'குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள்' என்ற கொள்கை அரசால் முன்னிறுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான்,

முத்தமிழ்போல் முக்கனிபோல்

அணிலின் கோணல்

முதுகில் உள்ள கோடுகள் போல்

மூன்றே போதும்

என்று கவிஞர் சுரதா போன்றவர்களும் கவிதை எழுதினார்கள்.

காலப்போக்கில் 'மூன்று குழந்தைக்குப் பதிலாக, மூன்று இரண்டாகி, அதன்பின்னர் ஒன்றே போதும்' என்ற நிலையும் உருவானதை நாம் அறிவோம்.

இன்றைக்குக் குடும்பக் கட்டுப்பாட்டின் தேவையை ஒவ்வொரு தம்பதியரும் உணர்ந்து தம் வாழ்வில் தவறாமல்

கடைப்பிடிக்கிறார்கள்.

ஆதலின், பிரசாரத்துக்கு வேலையே இல்லை. எனினும், ஒரு காலத்திய வரலாற்றுப் பதிவுகளாகப் பாவேந்தர் போன்றோரின் பாடல்கள் திகழ்கின்றன; இலக்கியம், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் அல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.