ஒரு ஹீரோ! மூன்று ஹீரோயின்கள்!!
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் மலையாளப் படங்கள் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை குறி வைப்பது போல், கமர்ஷியலுக்கு முக்கியத்துவம்


கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் மலையாளப் படங்கள் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை குறி வைப்பது போல், கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் தெலுங்கு படங்களும் தமிழுக்கு வருவது அதிகரித்துள்ளது. மகேஷ்பாபு நடித்த "செல்வந்தன்', "புருஸ்லீ -2' ஆகிய படங்கள் தமிழில் வெளியாகி குறிப்பிடத்தகுந்த வசூலைப் பெற்றது. தமிழில் நேரடி படங்களில் நடிக்க தெலுங்கு நடிகர்களின் பரிசோதனை முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரவிதேஜாவும் தமிழுக்கு வருகிறார். மகேஷ்பாபுவைத் தொடர்ந்து "எவன்டா' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் ரவிதேஜா. "பழுப்பு' என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படம் இது. "செல்வந்தன்', "புருஸ்லீ - 2' படங்களை தயாரித்து வெளியிட்ட பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தமிழில் வெளியிடுகிறது. ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லெட்சுமி மூவரும் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தம், ஆதித்யாமேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்றுள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில் கோபிசந்த் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். வசனங்கள் எழுதுவதுடன் தமிழ் உருவாக்க பொறுப்பை ஏ.ஆர்.கே.ராஜராஜா ஏற்றுள்ளார். இம்மாதம் 12-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.
திருமணம் தடையில்லை!

சின்னத்திரையில் முன்னனி தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் நிஷா. அவ்வப்போது பெரிய திரையில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்து கொண்டார். ""திருமணத்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது குறித்து உங்கள் கணவர் என்ன கூறினார்'' என்று நட்பு வட்டம் கேட்க,
""சிலருக்கு வேண்டுமானால் திருமணம் ஒரு தடையாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இப்போதுதான் நடிப்பு, தொகுப்பாளினி என்ற பயணம் சூடுபிடித்துள்ளது. இதற்கு காரணம் என் கணவர்தான். அவர் எனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது. மேலும் நானும், எனது கணவரும் இணைந்து சமீபத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
விருது பட்டியலில் ஏமாற்றம்!

2015-ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலில் "பிரேமம்' படத்துக்கு ஒரு விருது கூட இல்லாதது
ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகராக துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக பார்வதி தேர்வாகியுள்ளார். "சார்லி' படம் 8 விருதுகளைத் தட்டிச் சென்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை ஜோமோன் டி ஜான்ச் பெற்றார். சிறந்த கலை இயக்கத்துக்காக ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன் தேர்வாகியுள்ளார். சிறந்த ஒலிப்பதிவு விருதை ராஜகிருஷ்ணன் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் தகுதியானவர்களுக்கு சென்று சேர, அண்மையில் வெளியாகி கேரளத் திரையுலகில் வசூல் ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் ரசிகர்களின் கவனம் பெற்று பல்வேறு சாதனைகளை முறியடித்த "பிரேமம்' படத்துக்கு ஒரு விருது கூட இல்லை. இது மலையாள ரசிகர்களைத் தாண்டி தமிழ் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதுவரை தமிழில் வெளியான மலையாள படங்களில் எந்த படமும் பெறாத இடத்தை "பிரேமம்' பெற்றிருந்ததே இதற்கு காரணம். கேரளத்தின் பல விதமான விருது மேடைகளிலும் "பிரேமம்' படத்துக்கு இடம் இல்லை. இது குறித்து மலையாள ரசிகர்கள் தங்களின் இணைய தள பக்கங்களில் பல்வேறு கருத்துக்களை கூறி பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.
பிரசாரத்துக்கு வருகிறார் நயன்தாரா!

தமிழக சட்டபேரவை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக் காட்சிகளுக்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழ் திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுடன் அண்மையில் நடந்த சந்திப்பின் போதும் இதை வலியுறுத்தியிருந்தார். இதனை ஏற்று நட்சத்திரங்கள் பலரும் விழிப்புணர்வு தொடர்பான படக் காட்சிகளில் நடிக்கும் ஆர்வத்தை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் முதல் பகுதியாக நயன்தாரா நடித்துள்ள விழிப்புணர்வு படம் விரைவில் வெளியாகிறது. ரஜினிகாந்த்திடம் விழிப்புணர்வு படத்தில் நடிக்க தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நடித்த காட்சிகள் ஏற்கெனவே படமாகி விட்டன. கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடித்த வீடியோவும் விரைவில் வெளியாகவுள்ளது. தமன்னா, கீர்த்தி சுரேஷ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய், விஷால், நாசர் உள்ளிட்டோரும் இந்த விழிப்புணர்வுக்காக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வீடியோக்கள் திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் திரையிடப்படவுள்ளன. படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நட்சத்திரங்கள் தங்களின் குரலை பதிவு செய்து தரலாம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குரல் பதிவு பண்பலை ரேடியோக்கள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
மேக்கப் இல்லாத நடிப்பு!

இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட பாரதி கிருஷ்ணகுமார் திரையுலகம் காண்கிறார். இயக்குநர் பாரதிராஜாவிடம் பணியாற்றிய அனுபவத்துடன் "ராமையா குடிசை' உள்ளிட்ட ஆவணப் படங்கள் இயக்கி வரவேற்பு பெற்ற பாரதி கிருஷ்ண
குமார் "என்று தணியும்' படத்தை எழுதி இயக்குகிறார். யுவன் மயில்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், சாந்தனா, ஜீவிதா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர். மதம், சாதி உள்ளிட்ட தீண்டாமைகளால் நடந்தேறும் ஆணவக் கொலைகளுக்கு எதிரான படமாக இது உருவாகிறது. படம் குறித்து பாரதி கிருஷ்ணகுமார்... ""சாதி, மத வெறிகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்கு எதிரான குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சாதிய கொலைகள் காதலுக்காகவும் இன்னப் பிற விஷயங்களுக்காகவும் நடந்து வருகின்றன. அதிகாரம் மிக்கவன் அதிகாரமற்ற எளியவனை தாக்குவது வன்முறையென்றால், அதிகாரமற்ற எளியவன் அதிகாரமிக்கவனை திருப்பி அடிப்பதும் வன்முறைதான். இரண்டுமே வன்முறை என்றாலும், இரண்டும் ஒரே மாதிரியானவை அல்ல. வெவ்வேறு வடிவங்கள் கொண்டவை. இதன் பின்னணியில் இருக்கும் சங்கிலித் தொடர் சம்பவங்கள்தான் கதை. மேக்கப் இல்லாமல் நடிகர்கள் நடித்திருப்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. வரும் 18-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது'' என்றார்.
இமேஜை மாற்ற நினைக்கும் த்ரிஷா!

பட வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக இதுவரை இல்லாத அளவில் படு கவர்ச்சியாக நடிக்கும் முடிவை த்ரிஷா சமீப காலமாக எடுத்திருந்தார். இதையடுத்து அடுத்தடுத்து வரும் பட வாய்ப்புகளும் கவர்ச்சி அம்சங்களுடனேயே வருகின்றன. பொதுவாக நடிகைகள் அறிமுக காலக் கட்டங்களில் படு கவர்ச்சியாக நடித்து அடுத்தடுத்து ஆக்ஷன், கேரக்டர் என மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு மாறுவது வழக்கம். ஆனால், த்ரிஷாவுக்கு வரும் வாய்ப்புகளில் பெரும்பாலும் கவர்ச்சிக்கரமாகவே அமைகிறது. கவர்ச்சியைத் தவிர்க்க முயற்சித்தும் அதில் தோல்வியே அவருக்கு மிஞ்சுகிறது. இது அவருக்கு தர்ம சங்கடத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவர் 60-களில் நடித்த காஞ்சனா, வாணிஸ்ரீ போன்று புதிய படத்திற்காக உடைகள் அணிந்து கவர்ச்சி இமேஜை மாற்ற முயன்று வருகிறார். "நாயகி' என்ற படத்தில் இருவித தோற்றத்தில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்தில் முழுவதுமே கழுத்து முதல் கால் வரை மூடிய காஸ்ட்யூம் அணிகிறார். அத்துடன் அந்த காலத்து ஹீரோயின் போல் தலையில் பெரிய கொண்டை அணிந்தும் நடிக்கிறார். இதையடுத்து நடிக்கும் "கொடி' படத்துக்காக வில்லி வேடம் ஏற்கிறார்.
திருமண ரகசியம்!

அறிமுகமான வேகத்திலேயே மலையாள நடிகர் பஹத் பாசிலை காதல் மணம் புரிந்து திரையுலகில் இருந்து விலகினார் நஸ்ரியா நசீம். திருமண வயதை கடந்தும் திருமணத்தைப் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோயின்களுக்கு மத்தியில், 19 வயதிலேயே திடீர் திருமணம் செய்து கொண்ட நஸ்ரியாவின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 19 வயதில் திருமணம் என்பது சர்ச்சையான போதும், அது குறித்து யாரும் வாய் திறக்கமால் மௌனம் காத்தனர். தனது மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்ட ரகசியத்தை தற்போது நஸ்ரியா வெளிப்படுத்தி உள்ளார். 25 வயதில் திருமணம் செய்து கொள்ள எண்ணி இருந்த நஸ்ரியா, திடீரென பஹத் பாசிலுடன் காதல் வயப்பட்டார். பஹத்துக்கு அவரது வீட்டில் விரைவில் திருமணம் முடிக்க எண்ணினர். இதையறிந்த நஸ்ரியா பஹத்தை இழக்க விரும்பாமல் நடிப்புக்கு முழுக்கு போட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். பஹத்துடனான காதலை இழந்திருந்தால், தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் கூட இருந்திருக்கலாம். ஆனால், பஹத் மாதிரியான ஒரு நல்ல மனிதர் கணவராக கிடைத்திருக்க மாட்டார் என்றும் நஸ்ரியா கூறியிருக்கிறார். இதை சமீபத்தில் மலையாள இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...