/

நந்தினி டீச்சர் நல்ல அடையாளம்!மனம் திறக்கிறார் : சுஜா வாரூணி

சுஜா வாரூணி... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் வலம் வந்துக் கொண்டிருப்பவர். கவர்ச்சி, காமெடி, குணச்சித்திரம் என எந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வருகிற முகம். ஹாட் வெயிலில் செம கூலாகப் பேசுகிறார் சுஜா...

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:27 pm

ஜி. அசோக்

சுஜா வாரூணி... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாக்களில் வலம் வந்துக் கொண்டிருப்பவர். கவர்ச்சி, காமெடி, குணச்சித்திரம் என எந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வருகிற முகம். ஹாட் வெயிலில் செம கூலாகப் பேசுகிறார் சுஜா...

சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது...?

இதுவரைக்கும் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருக்கிறது. இதே திட்டமிடல்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 5 படங்கள் கைவசம் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த "பென்சில்' படத்தில் பார்த்திருப்பீர்கள். நந்தினி டீச்சர் வேடம். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியான பாதை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ரொம்பவே சீரியஸôன கேரக்டர் அது. இனி என்னைத் தேடி கதை சொல்ல வருகிற இயக்குநர்களுக்கு அந்த நந்தினி டீச்சர் கேரக்டர் நல்லதொரு அடையாளம். ஒரு பாட்டு, அதிகபட்சம் இரண்டு காட்சிகள் என வந்து விட்டு போன நான், இதுவரைக்கும் நடிக்காத ரோல் இது. இது மாதிரியான வேடங்கள்தான் இனி என் சினிமா. அதற்குத்தான் என்னை நான் தயார்ப்படுத்தி வருகிறேன். 

Story image

கவர்ச்சி நடிகைகள் நிறையப் பேர் குறுகிய காலத்திலேயே காணாமல் போய் விடுகிறார்கள்... அதற்காகத்தான் இந்த திடீர் முடிவா...?

இல்லை, ஒரு சின்ன மாற்றம்தான். தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாகத்தான் அறிமுகமானேன். கால ஓட்டத்தில் வெவ்வேறு மாதிரியான வேடங்கள் கைக்கு வந்து சேர்ந்தன. நடிப்பதுதான் நம் வேலை என்றாகி விட்டதால், எதையும் விட்டு விட மனதில்லை. ஆனால் அதையும் தாண்டி, ஒரு நடிகையாக உள்ளுக்குள் எரிச்சல் இருக்கும். ஒரே மாதிரியாக எத்தனை வருடங்கள்தான் நடிப்பது என்று. ஆனால், அதை ஒரே நாளில் என்னால் மாற்றி விட முடியவில்லை. நிறைய ஆண்டுகள் ஆனது. இப்போதுதான் நந்தினி டீச்சர் மாதிரியான வேடம் வந்திருக்கிறது. இதை வைத்து இன்னும் நிறைய பயணிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை நான் கவர்ச்சி நடிகை கிடையாது. அதைத் தாண்டி சில நல்ல கேரக்டர்களும் என் கேரியரில் இருக்கின்றன. "மிளகா' படம் அதற்கு உதாரணம். வாய்ப்பும் வருமானமும் கிடைக்கும் போதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது மட்டுமே இங்கே நிற்காது. நடிகையாக சில இடங்களில் நல்ல பெயரையும் எடுக்க வேண்டும். அதனால்தான் இந்த முடிவு.

இருந்தாலும், நிறைய படங்களில் சிறப்பு தோற்றங்கள் மாதிரிதான் வந்து விட்டு போகிறீர்கள்....?

நடிகை என்பதை தாண்டி, ஒரு பெண்ணாக எனக்கான அன்றாடத் தேவைகள் இருக்கின்றன. நல்ல வேடம் வந்தால்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் என் தேவைகளை எப்படி சமாளிப்பது. எனக்கும் அம்மா, தங்கை என குடும்பம் இருக்கிறது. அவர்களுக்கு நான்தான் எல்லாம். இப்போது நான் எடுத்திருக்கும் முடிவு காசு, பணத்தையெல்லாம் தாண்டியது. இருந்தாலும் அன்றாட தேவைகளுக்கு நான் சினிமாவை மட்டும்தான் நம்பியிருக்கிறேன்.

 நீங்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லையென்று எப்போதாவது வருத்தம் அடைந்து இருக்கிறீர்களா...?

"வா டீல்' படம். அருண் விஜய், கார்த்திகா நடித்தது. அந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரில் நடித்திருக்கிறேன்.  அந்தப் படத்தை ரொம்பவே நம்பியிருந்தேன். இந்நேரம் ரிலீஸôகியிருந்தால் சுஜாவால் இப்படி ஒரு கேரக்டரும் செய்ய முடியும் என நிரூபித்திருப்பேன். என்னை கிளாமர் நடிகையாக பார்த்தார்கள். அப்புறம் காமெடி கேரக்டர்களில் கலக்கி வந்தேன். இந்தப் படம் வந்திருந்தால் குணச்சித்திர நடிகையாகவும் அடையாளம் கிடைத்திருக்கும். அந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன்.

கல்யாணம் எப்போது...?

நிச்சயமாக கல்யாணம் செய்து கொள்வேன். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். சில பொறுப்புகள் உள்ளன. குடும்பம் சார்ந்தும், சினிமா சார்ந்தும் அதில் கொஞ்சம் திருப்தி கிடைத்து விட்டால், அதன்பின் கல்யாணம்தான். நான் என் கல்யாண வாழ்க்கையை ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறேன். நான் சந்தோஷமாக வாழப் போகிற தருணங்கள் அதில் இருப்பதாக நம்புகிறேன்.

சுஜாவுக்கு சினிமா தாண்டி என்ன ஆசை...?

சினிமாதான். நான் சினிமாவுக்கு விரும்பி வரவில்லை. தானாகவே நடந்தது. என் நினைப்பும், நோக்கமும் வேறு மாதிரியானவை. ஆனால் சினிமாவுக்கு வந்ததால் அது மாறி விட்டது. ஆனாலும், சினிமாவை நேசிக்கிறேன். சினிமாவுக்கு வந்தது குறித்து ஒரு நாளும் வருந்தியதில்லை. எனக்கு எல்லாம் கொடுத்தது சினிமா. அந்த சினிமாவில் பெயர் சொல்லும் படி பத்து படங்களாவது நடித்து விட வேண்டும். இதுதான் ஆசை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.