/

சினி மினி...

உலக அளவில் பிரபலமான இந்தியர்களின் பட்டியலில் பிரதானமான இடத்தை பிடித்துள்ளவர் ஐஸ்வர்யாராய். இதனால் மத்திய அரசின் விழாக்கள்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:25 pm

ஜி. அசோக்

Story image


உலக அளவில் பிரபலமான இந்தியர்களின் பட்டியலில் பிரதானமான இடத்தை பிடித்துள்ளவர் ஐஸ்வர்யாராய். இதனால் மத்திய அரசின் விழாக்கள், நாட்டின் பெருமையைப் போற்றும் விழாக்களுக்கு அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவது வழக்கம். இந்த முறை அந்த அழைப்பை ஏற்று 67-ஆவது குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார். இதே விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டேவும் டெல்லி வந்திருந்தார். அவருக்கு மத்திய அரசு சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பிரான்ஸ் அதிபர் சார்பில் ஒரு சில இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாலிவுட் நட்சத்திரங்களில் ஐஸ்வர்யாராய்க்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கான பிரெஞ்ச் தூதர் பிரான்காய்ஸ் ரிச்செர் இந்த அழைப்பை விடுத்திருந்தார். ஐஸ்வர்யாராய் தற்போது கரண் ஜோஹர் இயக்கும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்து சிறிது நேரம் ஓய்வு கேட்டு விட்டு அவர் பிரான்ஸ் அதிபரின் விருந்தில் பங்கேற்றதுடன் தில்லியில் நடந்த குடியரசு தின விழாவிலும் கலந்து கொண்டார்.

Story image

"பீட்சா', "அரண்மனை' மற்றும் "காஞ்சனா' படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் தொடர் வெற்றிகளையடுத்து அமானுஷ்யம் கலந்த த்ரில்லர் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகின்றன. ஆரம்ப காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களே இது மாதிரியான படங்களில் நடிப்பார்கள். இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டு முன்னணி நடிகர், நடிகைகளே பேய் படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த வரிசையில் பரத், நமீதா, இனியா, மனிஷா யாதவ் என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் படமாக உருவாகிறது "பொட்டு'. இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வி.சி.வடிவுடையான் கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார். உடல் எடையை குறைத்து இப்படத்துக்காக வித்தியாச வேடம் ஏற்றுள்ளார் நமீதா. இது குறித்து நமீதா கூறுகையில், ""2010-ஆம் ஆண்டுக்குப் பின் கடந்த 5 ஆண்டுகளாக நடிக்கவில்லை. பெரும்பாலும் கிளாமர் வேடங்களில்தான் வந்தேன். அதை தவிர்க்க முடியவில்லை. இனி அப்படி நடிக்கக் கூடாது என்ற முடிவில்தான் சில வாய்ப்புகளை தட்டிக் கழித்தேன். இப்போது நல்லதொரு வாய்ப்பாக "பொட்டு' வந்துள்ளது. இனி வரும் காலங்களில் அழுத்தமான வேடங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். பொட்டு படத்தில் வில்லி வேடம் ஏற்கிறேன். ஒரு சில காட்சிகளில் அகோரியாக நடிக்கிறேன்'' என்றார் நமீதா.

Story image

தங்களது தொழில் சார்ந்து ஏற்படும் அனுபவங்களைச் சிலர் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். கற்பனை இல்லாமல் நிஜமாகவே உணரப்படும் சில விஷயங்கள் ரசிகர்களையும் கவர்ந்து விடுகின்றன. இந்த வகையில் நிஜத்தில் மருத்துவராக பணிபுரியும் பரத் விஜய் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களைத் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ஆறாம் அறிவு. நிஜ வாழ்க்கையில் தான் சந்தித்த வித்தியாச குணாதிசயங்கள் கொண்ட ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி நண்பர்களின் உதவியுடன் காதலனை கரம் பிடிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவளது நட்பு வட்டத்தில் திடீரென நிகழ்ந்து விடும் ஒரு மரணம் அவளின் நடவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டு வருகிறது. யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் கொடூரமாக நடந்து கொள்கிறாள். மூர்க்கத்தனமாக தாக்குகிறாள். இதன் பின்னணியை அவளது கணவன் ஆராயும் போது, அவளை ஒரு சக்தி ஆட்டிப் படைப்பது தெரிய வருகிறது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஏற்படும் விளைவுகள்தான் கதை. சஹானா, சுரேகா, லாலித்யா, வினோத் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

Story image

பல வருடங்களுக்கு முன் வெளிவந்து குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்ற படங்கள் மீண்டும் அதே பெயரில் வெளிவருவது அதிகரித்து வருகிறது. ரஜினியின் "பில்லா', "முரட்டுக்காளை', ஜெமினி கணேசன் நடித்த "நான் அவன் இல்லை' உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணம். இந்தப் பட்டியலில் தற்போது இணைந்துள்ள படம் விசுவின் "மணல் கயிறு'. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இப்படம் தற்போது மணல் கயிறு 2 என்ற பெயரில் உருவாகிறது. குடும்ப பின்னணியை கொண்ட இப்படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருந்தது. திருமண தரகராக விசுவும், 8 நிபந்தனைகள் போட்டு திருமணம் செய்பவராக எஸ்.வி.சேகரும், முக்கிய கதாபாத்திரத்தில் குரியகோஸ் ரங்காவும் நடித்த இப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. மீண்டும் அந்த மூவரும் அதே கதாபாத்திரங்களில் நடிக்க மீண்டும் உருவாக இருக்கிறது.  இப்படம். எஸ்.வி.சேகரின் மகனாக அஸ்வின் சேகரும், குரியகோஸ் ரங்காவின் மகளாக பூர்ணாவும் நடிக்கின்றனர். லொள்ளு சபா சாமிநாதன், சாம்ஸ், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விசுவின் மூலக்கதைக்கு தற்போது திரைக்கதை எழுதுகிறார் எஸ்.வி.சேகர். மதன்குமார்  இயக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Story image

பொதுவாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னணியில் இருக்கும் நடிகைகளின் பட்டியலில் இருந்துதான் தேர்வு செய்யப்படும். இந்த நிலைமாறி தற்போது வழக்கமான ஹீரோயின்களுக்குப் போட்டியாக சிலர் களத்தில் குதித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, பார்வதி உள்ளிட்டோரின் வரவால்  ஹீரோயின்களுக்கான பஞ்சம் தீர்ந்து எந்த ஹீரோயினைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் இயக்குநர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்துடன் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஹீரோயின்களைத் தேர்வு செய்யும் நிலையும் உருவாகி உள்ளது. போட்டி நிலவுவதால் வழக்கமான சம்பளத்திலிருந்து இறங்கி வரவும் முன்னணி நட்சத்திரங்கள் தயக்கம் காட்டுவதில்லை. குறிப்பாக சமந்தா நடிக்க வேண்டிய ஒரு படத்தில் அவரின் சம்பளம் பட்ஜெட்டுக்கு செட் ஆகாததால் ஸ்ரீதிவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதைப் போல் விஜய் நடிக்கும் 60-ஆவது படத்தில் அவருக்கு ஜோடி யார் என்ற கேள்வி பிரதானமாக உள்ளது. பல முன்னணி முகங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

Story image

சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களுக்கு எப்போதும் குறிப்பிடத்தகுந்த வரவேற்பு உண்டு. சென்னையின் வெவ்வேறு விதமான முகங்களை காட்டுவதால்  படத்துக்குப் படம் வித்தியாசமான களங்கள் அமைந்து விடுவதுண்டு. "அட்டக்கத்தி', "மெட்ராஸ்' உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். இந்த வகையில் வட சென்னையைக் களமாக கொண்டு உருவாகும் புதிய படம் "அட்டி'. "வானவராயன் வல்லவராயன்' படத்தையடுத்து இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மா.கா.பா.ஆனந்த். அவருக்கு ஜோடியாக அஷ்மிதா நடிக்கிறார். ராம்கி, நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். இயக்குநர் சுராஜின் உதவியாளர் விஜயபாஸ்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். சென்னையின்  காசிமேடு, ராயபுரம், ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் எதார்த்தமான வாழ்க்கையையும், அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் நகைச்சுவையுடன் விவரிக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மனம் போன போக்கில் கடற்கரையில் கானா பாடல்களைப் பாடி திரியும் கதாநாயகன், தனக்கு நேரும் சம்பவங்களை தன் நண்பர்களின் துணையுடன் எப்படி கையாளுகிறார் என்பதே திரைக்கதை. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.