மூன்று மொழிகளில் தெறி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் சமீபமாக மலையாளம் மற்றும் தெலுங்கில் நேரடி பதிப்பாக வெளிவருகிறது.



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் சமீபமாக மலையாளம் மற்றும் தெலுங்கில் நேரடி பதிப்பாக வெளிவருகிறது. ரஜினி, கமல் ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து இளம் நடிகர்களின் படங்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக விஜய், விக்ரம், சூர்யா ஆகியோரின் படங்களுக்காக எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது விஜய்யின் "தெறி' மலையாளம், தெலுங்கில் வெளியாகவுள்ளது. தமிழில் வெளியாகவுள்ள ஏப்ரல் 14-ஆம் தேதியே அங்கும் இப்படம் வெளியாகிறது. விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, பிரபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகின. தெலுங்கில் வெளியாகும் படத்துக்கு "போலீஸ் ஓஹ்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மொழிக்கான டப்பிங் பதிவு ஏவி.எம். கார்டனில் பல வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "துப்பாக்கி' படத்தின் தெலுங்கு பதிப்புக்கு விஜய்க்கு குரல் கொடுத்த வாசு இப்படத்துக்கும் குரல் கொடுக்கிறார். அதே போல் மலையாளப் பதிப்புக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. "தெறி' என்பது மலையாளத்தில் கெட்ட பொருள் தரும் வார்த்தையாக இருந்து வருகிறது. அதனால் அங்கே எந்த வார்த்தையை தலைப்பாக பயன்படுத்தலாம் என படக்குழு ஆலோசித்து வருகிறது.
9 ஆண்டுகளுக்குப் பின்...

ஜீவா - நயன்தாரா ஜோடி 9 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து நடிக்கும் படம் "திருநாள்.' பி.எஸ்.ராம்நாத் எழுதி இயக்கி வருகிறார். கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.செந்தில்குமார் தயாரிக்கிறார். வழக்கமாக படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத நயன்தாரா, இப்படத்தின் புரமோஷன்களில் கலந்து கொள்வதாக தெரிவித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் நயன்தாரா இதில் கலந்து கொள்ள முடியவில்லை. கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் அரசியல் சூழல் இளம் தலைமுறையினரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறது என்பது திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனநாதனின் "ஈ' படத்தில் ஜீவா - நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படமாக இது உருவாகியுள்ளது. ஜீவாவே நயன்தாராவிடம் பேசி கால்ஷீட் பெற்று தந்துள்ளார்.
தமிழில் சனா!

நீண்ட இடைவெளிக்குப் பின் கதையின் பிரதான கதாபாத்திரம் ஏற்று கவுண்டமணி நடித்த படம் "49 ஓ.' நகைச்சுவை கதாபாத்திரங்கள் பல தேடி வந்த போதும், தனக்கு முக்கியத்துவமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார். இதையடுத்து கவுண்டமணி நடிக்கும் படம் "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.' அரசியல் பின்னணியைக் கொண்ட இப்படம் சமூகத்தில் நிலவி வரும் சமகால பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் கதையாம். தொழிலதிபராக வலம் வரும் கவுண்டமணி சமூக வலைதளங்கள் மூலம் காதல் ஜோடிகளுக்கு உதவி செய்து வருகிறார். அரசியல், ஜாதீயம், கடவுள் பக்தி என பல விதங்களில் ஏமாற்றப்பட்டு வரும் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதத்தில் கவுண்டமணியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தனக்கு நேரும் விபரீதங்களை எப்படி அவர் கடக்கிறார் என்பதே கதை. சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். கண்ணன் ஒளிப்பதிவில் எஸ்.என். அருணகிரி இசையமைக்கிறார். கவுண்டமணிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார். இப்படத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ""கோடம்பாக்கம் மறு பேரு கோலிவுட்டுடா...'' எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார் தேவா. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
சந்தானம் ஜோடியாக மும்பை மாடல்!

சமீபமாக முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களை ஏற்காமல், முழுக்க முழுக்க தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடித்து வருகிறார் சந்தானம். "கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கும் படத்துக்கு "தில்லுக்கு துட்டு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றின் வடிவத்திலும் பேய்கள் உலா வரும் கிராமப் பின்னணியைக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. சந்தானத்துக்கு ஜோடியாக பலர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், மும்பை மாடல் அழகி சுனாயா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நகைக்கடை விளம்பர படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர் சுனாயா. கௌரவ் சுக்லா, ஆனந்த்ராஜ், கருணாஸ், ராஜேந்திரன், சுஜாதா, "லொள்ளு சபா' மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். சிறிது இடைவெளிக்குப் பின் சீர்காழி சிவசிதம்பரம் இப்படத்துக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார். "லொள்ளுசபா' தொடரின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
மீண்டும் ஒரு பெண் இயக்குநர்!

பெண் இயக்குநர் வரிசையில் அடுத்து கவனம் ஈர்க்க வருகிறார் உஷா கிருஷ்ணன். இயக்குநர் சுசீந்திரனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய இவர், "ராஜா மந்திரி' படத்தின் மூலம் திரையுலகம் காண்கிறார். எட்செட்ரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் பிஜி மீடியா நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. "மெட்ராஸ்' கலையரசன், காளி வெங்கட், ஷாலின் úஸôயா, வைஷாலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர்... ""அண்ணன் தம்பி உறவு ஒரு பக்கமும், அவர்களுக்குள் உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. தமிழ் சமூக வாழ்க்கையில் குடும்ப உறவுகள் அதி முக்கியமானது. அதிலும், அண்ணன் - தம்பி உறவு என்பது முக்கியமான உறவாகும். மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம் இயங்கினாலும், சந்தர்ப்பங்களால் விட்டுக் கொடுக்காத உறவு அண்ணன் - தம்பி உறவு. அந்த உறவுகளுக்கிடையில் நடக்கும் பாசம், பொருளாதாரம், காதல் உள்ளிட்ட அனைத்துப் பக்கங்களையும் எடுத்து வைக்கும் படமாக இது வந்துள்ளது. கும்பகோணம், மன்னார்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஏப்ரலில் படம் வெளியாகிறது'' என்றார் உஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...