வளர்ச்சி முக்கியமில்லை திருப்திதான் முக்கியம்!
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, அடுத்தடுத்த படங்கள் நல்ல அடையாளம் கொடுக்க, "காக்கா முட்டை'... அழகான அடையாளம். குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் "ஹலோ நான்


ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, அடுத்தடுத்த படங்கள் நல்ல அடையாளம் கொடுக்க, "காக்கா முட்டை'... அழகான அடையாளம். குஷ்பூவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் "ஹலோ நான் பேய் பேசுறேன்', "என்றென்றும் புன்னகை' அஹமது இயக்கும் புதிய படம், "ஈரம்' அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக "ஆறாது சினம்' என ஐஸ்வர்யா இப்போது செம பிஸி...

"காக்கா முட்டை' மாதிரி கனம் பொருந்திய கதைகளை மட்டுமே தேடுறீங்க போல...?
இது எனக்கு தங்கமான தருணம். "காக்கா முட்டை' படம் அமைத்து கொடுத்த பாதை எனக்கு நல்ல வெளிச்சம். ஹீரோவோ, ஹீரோயினோ அறிமுகப் படத்திலிருந்து பத்து படங்களைத் தாண்டுவதற்குள் ஏதாவது செய்து ரசிகர்களை ஈர்க்க வேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன். அதில் நல்ல சினிமாவுக்கான பொறுப்பு இருந்தது என் அதிர்ஷ்டம். அதை விட அது எல்லாரையும் சென்று சேர்ந்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய பேர் என்னை மாதிரி நடித்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் கடை கோடி ரசிகர்கள் வரைப் போய் சேர்ந்ததா என்பது கேள்விதான். நல்ல சினிமாவுக்கான கனவுகள் நிறைய இருக்கிறது. அதற்கான பொறுப்புதான் ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு நிதானம் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக எல்லோர் மாதிரியும் என்னால் நடிக்க முடியாது. நாளைக்கே எனக்கு குழந்தை பிறந்தால், நான் நடித்த படங்களைப் பார்த்து விட்டு, ""ஏம்மா இந்த மாதிரி படங்களில் நடிச்சே?'' என்று கேட்டு விடக் கூடாது. "காக்கா முட்டை' படம் என் கேரியர் மீது எனக்கே இல்லாத அக்கறையை இங்கே பல இயக்குநர்களுக்கு காண்பித்திருப்பது சந்தோஷம்.
"காக்கா முட்டை' அம்மாவுக்கு வந்த கமென்ட்ஸ்....?
பாலா சார் இந்த பொண்ணு ஒரு பேரழகி என்று பாராட்டியிருந்தார். பாரதிராஜா சார் எங்கோ என்னை பற்றி நான்கு நல்ல வார்த்தைகள் பேசியிருக்கிறார். இன்னும் முகம் தெரியாத பாராட்டுக்கள் நிறைய. எல்லாவற்றுக்கும் என் நன்றிகள். என் நண்பர்கள் இதற்கு முன்பு நான் நடித்த படங்களைப் பார்த்து விட்டு, "நீ நல்லா நடிச்சிருக்கே' என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், "காக்கா முட்டை' பார்த்து விட்டு, "உன்னால இதெல்லாம் முடியுமா' என்று கேட்டார்கள். தேங்க்ஸ் டு இயக்குநர் மணிகண்டன். ஒரு படம் நடித்து முடித்த பின்னர், அதில் வரும் கேரக்டர் பற்றி பாசிட்டிவ், நெகட்டிவ் என்று ரெண்டு விதமாகவும் கமெண்ட்ஸ் வரும். ஆனால், "காக்கா முட்டை'க்காக வந்த கமெண்ட்ஸ் எல்லாம் பாசிட்டிவ். அதனால் நான் நடித்த இடத்தில் யார் நடித்தாலும் நன்றாகத்தான் இருக்கும். அந்த இடத்தில் நான் இருந்ததுதான் என் கொடுப்பினை.
நீங்கள் இவ்வளவு பிடிவாதமாக இருந்தால் அஜித், விஜய், விக்ரம், சூர்யா என மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதே...?
படப்பிடிப்புக்கு முன் ஒரு படத்துக்கு அடையாளம் தேவையில்லை என்பது என் கருத்து. படம் வெளிவந்த பின்னர் அது எந்த மாதிரிப் படம் என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் போது வளரலாம். ஆனால், வளர்ச்சி மட்டுமே இங்கே முக்கியம் இல்லை. திருப்திதான் முக்கியம்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தவற விட்டு விட்டோமே என வருந்தியது உண்டா?
அப்படி எதுவும் இல்லை. "காக்கா முட்டை' அம்மா வேடத்தைத் தவற விடாமல் இருந்தேனே... அதில்தான் சந்தோஷம். நீங்களே மனசைத் தொட்டுச் சொல்லுங்க... ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கிற மாதிரி இப்ப எத்தனை படம் வருது? தமிழ் சினிமா இன்னும் ஹீரோக்களின் சினிமாவாகத்தான் இருக்கிறது.
அப்படி எந்த ஹீரோவைப் பார்த்துப் பொறாமைப்படுறீங்க?
தனுஷ். நான் அவரின் பயங்கரமான ரசிகை. எல்லா படங்களுக்கும் முதல் ஆளா டிக்கெட் எடுக்கும் ரசிகை. இப்போது "காக்கா முட்டை' தயாரிப்பாளராக அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் நான் உங்கள் ரசிகை என்று எந்த இடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவரை ரொம்பப் பிடிக்கும். ஓர் சாமான்யனைப் போலத்தான் தெரிவார். மிகச் சாதாரணமான ஒரு ஆளு. ஆனால் திரையில் பார்த்தால் அத்தனை ஆச்சரியம். ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காட்டி அசத்திட்டே இருக்கார். தனுஷ் கூட நடிக்க ஆசை. ஆனால், அதில் ஒரு சின்னத் தயக்கம். அவர் படம் என்றால், ஹீரோ, ஹீரோயின் எல்லாமே அவர்தான். யாருக்குமே எந்த வாய்ப்பையும் கொடுக்க மாட்டாரே! (கலகலவெனச் சிரிக்கிறார்) ஒரு நல்ல கதை வந்தால் வந்தால், அவர்கூட நடிப்பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...