கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 40: காக்கியின் நிறம்
"ஜனநாயக சமுதாயத்திற்கு காவல்துறை ஒரு விதத்தில் மிகப் பெரிய பாதுகாப்பாகவும் மற்றும் துணையாகவும் திகழ்கிறது.


"ஜனநாயக சமுதாயத்திற்கு காவல்துறை ஒரு விதத்தில் மிகப் பெரிய பாதுகாப்பாகவும் மற்றும் துணையாகவும் திகழ்கிறது. அதே சமயத்தில் சில தருணங்களில் ஜனநாயகக் கட்டமைப்பை அச்சுறுத்துவதாகவும் வடிவம் எடுக்கிறது' என்கிறார் எம்ஐடி பல்கலைக்கழக பேராசிரியர் காரி மார்கஸ். "காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்து தன்னிச்சையாகச் செயல்படக் கூடாது, சட்டத்தை மீறக் கூடாது, ஆளும் வர்க்கத்தின் குறிக்கீடுகளுக்குப் பணிந்து துணை போகக் கூடாது' என்கிறார்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விசேஷ சட்டங்கள் சமுதாயப் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. நிதானமாகவும் கவனத்துடன் தனது சமுதாயக் கடமைகளை புறக்கணிக்காது அமலாக்கம் செய்ய வேண்டும்.
உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, அதில் காவல்துறையின் செயல்திறன் முக்கிய பிரச்னையாக மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக் கொள்ளையர்கள், போக்கிரிகள், சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ள பகுதிகளில் காவல்துறை தயங்காமல் என்கவுண்டர் நடத்தி அவர்கள் கொட்டத்தை நிரந்தரமாக அடக்கியது, மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. ஜாதி மற்றும் அரசியல்ரீதியாக முன்பு குறுக்கீடுகள் இருந்ததால் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருந்தது . இப்போது அது இல்லாததால் காவல்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் 8742 எதிர்மறைதாக்கு தல்களை கடுங்குற்றவாளிகள் மீது நடத்தி அதில் 146 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் 13 காவல்துறையினர் உயிர் இழந்திருக்கிறார்கள், 1157 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
முக்கியமாக இந்த நடவடிக்கை மூலம் 18,225 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், காயமுற்றவர் 3302 குற்றவாளிகள். காவல்துறை துப்பாக்கியைப் பிரயோகிக்கையில் இடுப்புக்கு கீழேதான் சுட வேண்டும். குறைந்தபட்ச நடவடிக்கையில் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். முக்கால்வாசி குற்றவாளிகளுக்கு காலில் தான் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கடுமையான நடவடிக்கை பெருவாரியான மக்களால் வரவேற்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் மனித உரிமை ஆர்வலர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதுவும் இடதுசாரி சிந்தனையார்கள், கல்வியாளர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
உலகில் உள்ள எல்லா காவல்துறைகளும் அவர்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிலும் சமீப காலமாக இத்தகைய ஓர வஞ்சனை காவல்துறையின் மீது வந்துள்ளது.
"செஞ்சோற்று கடன் தீர்க்க வீண் பழி சுமந்தாயடா கர்ணா... வஞ்சகன் கண்ணனடா' என்ற பாடல் காவல்துறையின் நிலமையை விளக்கும். இதில் வஞ்சகர்கள், சூழ்ச்சி செய்யும் அரசியல்வாதிகள். அவர்கள் வலையில் விழும் சில வஞ்சக காவல்துறையினரால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
மக்களிடம் நற்பெயரெடுத்த மும்பாய் போலீஸ் இப்போது பிரச்னையில் சிக்கியுள்ளது. மேனாள் மும்பாய் நகர் கமிஷனர் பரம்பீர் சிங்க் பகிரங்கமாக உள்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். அவரை வஞ்சிக்கும் வகையில் மகாராஷ்டிரா அரசு கமிஷனர் மீது பல கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது.
மத்திய அமலாக்கப் பிரிவு உள்துறை அமைச்சரைக் கைது செய்துள்ளது.
1987 - ஆம் வருடம் மும்பாய் காவல் சட்டத்தின் நான்காவது பிரிவு மாற்றி அமைக்கப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாடு மேற்பார்வை மற்றும் வழிநடத்தல் காவல்துறைத் தலைவரிடமிருந்து அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே காவல் பணியாளர்களை மாற்றுவது, முக்கியமான பணியிடங்களில் அமர்த்துவது அரசியல்வாதிகள் கையில். "ஆமாம் சாமி' போடும் அதிகாரிகள், ஊழலில் ஒத்துழைக்கும் களப்பணியாளர்கள் பிடியில் சிக்கி, மும்பாய் போலீசின் மரியாதை, கட்டிக் காத்த செல்வாக்கு ஆகியவை படிப்படியாக கரைந்து இந்த அளவிற்கு தாழ்ந்ததில்லை என்கிறார் ஓய்வுபெற்ற மும்பாய் கமிஷனர் ரெபைரோ.
ஒவ்வொருமுறையும் இம்மாதிரி பிரச்னைகள் ஏற்படுகையில் காவல்துறை சீர்திருத்தம் அவசியம் என்று எல்லாராலும் உணரப்படுகிறது. 1977- இல் அமைக்கப்பட்ட தர்மவீரா போலிஸ் கமிஷனின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை. 2006 - இல் உச்சநீதிமன்றம் மேனாள் டிஜிபி பிரகாஷ் சிங் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கொடுத்த தீர்ப்பினை பல மாநிலங்கள் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை.
இவற்றைக் கருத்தில் கொண்டு , பாராளுமன்ற உறுப்பினர் குழு உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை கூராய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் பிரதானமாக முன்பு காவல்துறை சீர்திருத்தங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் எவ்வாறு காவல் செயல் திறனை மேம்படுத்துவது என்பது குறித்து பாராளுமன்றத்தில் பிப்ரவரி 10 -ஆம் தேதி 2022 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் காவல்துறை கட்டமைப்பின் தப்போதைய நிலை , காவல்துறைப் பணியாளர்கள் காலி இடங்கள், காவல் பயிற்சி, காவல்துறை நவீனமயமாக்கல், காவல்துறை சீர்த்திருத்த நடவடிக்கை மற்றும் வருங்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இவை எல்லாம் இந்த அறிக்கையில் ஆராயப்பட்டது.
1861-இல் இயற்றப்பட்ட இந்திய காவல் சட்டம், அடிப்படையில் எல்லா காவல்துறைகளும் சுதந்திரம் அடைந்த பிறகும் இயங்கி வந்தன. இந்த சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்பது தரம் வீரா கமிஷனின் முக்கிய பரிந்துரை. அதன் அடிப்படையில் மத்திய அரசு 2005- ஆம் வருடம் மூத்த வழக்குரைஞர் சோலி சோரப்ஜி தலைமையில் கமிட்டி அமைத்து "மாதிரி காவல் சட்டம்' வடிவமைத்து எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் மாநில அளவில் பாதுகாப்பு கமிஷன் உள்துறை அமைச்சர் தலைமையிலும், எதிர்கட்சித் தலைவர், சமுதாய நல்லெண்ணம் படைத்தவர்கள் அங்கத்தினர்களாக காவல்துறையின் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்பது முக்கியமான உட்பிரிவு. மேலும் காவல்துறையில் பணி மாற்றம் முக்கிய பணிகளில் பணியமர்த்தல் இதனைக் கவனிக்க காவல் நிர்வாக வாரியம் அமைத்தல், காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பிரிவுகள் ஏற்படுத்தல், காவல்துறை மேம்பாட்டிற்காக போர்த்திறம் வாய்ந்த தொடர் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பது மாதிரி சட்டத்தில் உள்ளது.
மாதிரி காவல் சட்டம் அடிப்படையில் தமிழ்நாடு உட்பட பதினேழு மாநிலங்கள் தாம் புதிய காவல் சட்டத்தை நிறைவேற்றியது. மீதம் 11 மாநிலங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்களோடு அன்றாடம் தொடர்பில் இருப்பது காவல் நிலையங்கள், அதன் மூலம் தான் காவல் சேவைகளைப் பெற முடியும். குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பது காவலர்களின் தலையாய கடமை. பாதிக்கப்பட்டவர், பாதுகாப்பு வேண்டுபவர் பயமின்றி காவல்நிலையத்தை அணுக நல்ல சூழலை உருவாக்க வேண்டும்.
காவல்நிலைய செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா அளவில் 16,671 காவல் நிலையங்களில் சிறந்தவற்றைத் தெரிவு செய்து பாராட்டும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. முதல் வருடமே சென்னை அண்ணா நகர், கோயம்புத்தூர் ஆர் எஸ் புரம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக காவல்துறைக்கு பெருமை.
குற்றத்தடுப்பு பணி, புலனாய்வில் முக்கிய பங்கு கொள்பவர் காவலர், உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர். இவர்கள் தான் காவல்துறையில் 90% இருக்கின்றனர்.
மத்திய அரசு. மேனாள் டிஜிபி மூஷாஹரி தலைமையில், காவல்துறை மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தர்ம வீரா கமிஷன்(1977), ரெபைய்ரோ கமிட்டி(1998) பத்மநாபைய்யா கமிட்டி(2000), நீதியரசர் மலிமத் கமிட்டி( 2000), சோலி சோராப்ஜி கமிட்டி( 2005) ஆகியவை கொடுத்த பரிந்துரைகளை எந்த அளவிற்கு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியிருக்கின்றன என்பதை ஆராய்ந்து மாநிலங்களோடு தொடர்பு கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்ததில் ஓரளவு சீர்திருத்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
காவலர்கள் தேர்வில் வயது 17 -வயதிலிருந்து 23 வயதாக இருக்க வேண்டும், + 2 பாஸ் கல்வித் தகுதி என்ற பரிந்துரை முக்கியமானது. கல்வி அறிவு, பணியில் பணிவு, கண்ணியம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு, அதே வேளையில் இளம் வயதினர் துடிப்போடு பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை. அதே போல் எஸ்ஐ பணிக்கு பட்டப்படிப்பு . தமிழக காவல்துறையில் காவலருக்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு பாஸ். ஆனால் வயது உச்ச வரம்பு இடஒதுக்கீடு அடிப்படையில் வயது 35 வரை வைக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் 24 வயது உச்ச வரம்பு இருந்தால் தான் சரியாக இருக்கும். பல மாநிலங்கள் 24 வயது என்ற உச்ச வரம்பை ஏற்றுக் கொண்டுள்ளன, தமிழ்நாடு போல் சில மாநிலங்களைத் தவிர!
தொழில்நுட்ப வளர்ச்சி, க்ரைம் சிண்டிகேட்டுகளின் ஊடுருவல், பொருளாதாரக் குற்றங்கள், சைபர் குற்றங்களின் பரிமாண வளர்ச்சி காரணமாக பொது அமைதி பாதுகாப்பில் காவல் பணிகள் நவீன முறையில் அமைய வேண்டும். அதற்கு தொடர் பயிற்சி அவசியம்.
சைபர் க்ரைம் , நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு , ரோபோடிக்ஸ், பொருளாதார குற்றப்புலனாய்வு, டிஜிட்டல் பண வர்த்தக மோசடிகள், வங்கிகளில் ஆன் லைன் பணப் பறிப்பு , நில அபகரிப்பு , பாலியல் கொடுமைகள் என பல்வேறு குற்றங்களைக் கையாள தனிப் பிரிவுகள் காவல் துறையில் ஏற்படுத்தப்பட்டு பணியாளர்களுக்கு விசேஷப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது.
காவல்துறை நவீனமயமாக்கலில் தமிழக காவல்துறை முன்னோடியாக விளங்குகிறது.
மத்திய அரசு 60% அதற்கு இணையாக மாநில அரசு 40% நிதி ஒதுக்கி நவீனமயமாக்கல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். முழுமையாக நிறைவேற்றும் மாநிலங்களுக்கு பத்து சதவிகிதம் ஊக்கத்தொகை தமிழக காவல்துறை பெறுகிறது .
கணினி , வாகனங்கள், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை இவற்றிற்கு சில உபகரணங்கள் வாங்குவது நவீனமயமாக்கல் என்ற மாயையை உண்டு பண்ணும். ஆனால் திட்டமிட்டு மக்களுக்கு பயனளிப்பு சென்றடையும் வகையில், நவீன யுக்திகளைக் கையாள வேண்டும். இதற்கு காவல்நிலையங்கள் அருகில் உள்ள பல்கலைக்கழகம் கல்லூரிகளோடு இணைக்கப்பட்டு தொடர் அறிவாற்றல் பெற வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, பாதுகாப்பில் உள்ள பல்வேறு பிரச்னைகளை ஆராய்வதற்கும் நவீனச் செயல்பாடுகள் பற்றி பாதுகாப்பு ஆர்வலர்களும், காவல்துறையினரும் அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்கும் நல்லதொரு தளம் அமைக்கப்பட்டு பயனுள்ளதாக இருக்கிறது.
தமிழக அரசு, போலீஸ் கமிஷன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
கமிஷனின் தலையாயப் பொறுப்பு எவ்வாறு மக்கள் பயமின்றி காவல்துறையை அணுகலாம் என்பதை நடைமுறைப்படுத்த வழிகளை வகுக்க வேண்டும். காவல்
நிலையங்களில் கேமரா பொருத்தி, மேலதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், காவல்நிலைய கொடுமை நிகழ்வுகளை ஒழிக்க முடியும்.
இளைஞர்கள் நிறைந்த நாடு நம் நாடு. இளைய தலைமுறை அதிக அளவில் காவல்நிலையங்களோடு ஒன்றிப் பழக நடவடிக்கை தேவை. பள்ளிகளில் கல்லூரிகளில் "போலீஸ் கேடட் படை' கேரளாவில் இயங்குவது போல் இங்கும் அமைக்கப்பட வேண்டும்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். 1859 - இல் உருவாக்கப்பட்ட தமிழகக் காவல்துறை என்ற கூட்டுக் குடும்பம் மக்கள் பணியில் "துளங்காது தூக்கம் கடிந்து' காக்கியின் நிறம் பழுதடையாது கடமையுணர்வோடு பயணிக்க வேண்டும்.
சென்ற வாரக் கேள்விக்கு பதில்: ஒலிம்பிக் விளையாட்டு அரசியல் சாராது இயங்கவேண்டும் என்பதால் நடுநிலை நாடு ஸ்விட்சர்லாந் லாசேனில் ஐ ஓ சி யின் தலைமையிடம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த வாரக் கேள்வி: தமிழ்நாடு காவல் சட்டம் எந்த வருடம் நிறைவேற்றப்பட்டது?
கட்டுரையாளர்:
மேனாள் காவல்துறைத்தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...