வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 36: மகான் காந்தி மகான்!

"ஹே ராம்' என்று கடைசி மூச்சிலும் தன்னை தாக்கியவன் மீது விரோதம் பாராட்டாமல் இறைவனிடம் முடிவை விட்டு விட்டு,  மரணத்தை தழுவிய மகான், காந்தி மகான்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:24 am

ஆர். நட​ராஜ்

"ஹே ராம்' என்று கடைசி மூச்சிலும் தன்னை தாக்கியவன் மீது விரோதம் பாராட்டாமல் இறைவனிடம் முடிவை விட்டு விட்டு, மரணத்தை தழுவிய மகான், காந்தி மகான். இது வெறும் உடம்பு வலியால் எழுந்த வார்த்தைகள் அல்ல. தான் விரும்பிய இன ஒற்றுமை , மதச்சார்பின்மை அழிகின்றதே என்ற மன வெதும்பல், இனவெறி, மதத்தை வைத்து மதம் பிடித்தது போல் இந்தியர்கள் பாழாகிறார்களே என்ற ஆதங்கம், வன்முறையில் ஒரு தலைமுறை இரையா
கிறதே என்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் "ஹே ராம்' என்று மகாத்மாவின் கடைசி மூச்சில் வெளியானது.

தீவிரவாதி கோட்சே துப்பாக்கியால் மகாத்மாவைக் கொன்ற தினம் ஜனவரி 30,1948, தியாகிகள் தினமாக நாட்டிற்கு உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

மத அடிப்படையில் பாரத நாட்டைப் பிரிப்பதில் காந்திஜிக்கு உடன்பாடில்லை. ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் இந்துக்கள், இஸ்லாமியர்கள் வாழ வேண்டும் என்று காந்தி விரும்பினார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அவசர அவசரமாக சிரில் ராட்க்ளிஃப் என்பவரை நியமித்து 450 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஒன்பது கோடி மக்கள் இருமருங்கிலும் அடங்கிய இந்திய - பாகிஸ்தான் எல்லையை வகுத்தது. இந்துக்கள், சீக்கியர், ஜைனர்,

இந்தியா பக்கமும், இஸ்லாமியர் இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தானுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட எல்லையைக் கடந்தனர். மதவெறி பற்றிக் கொண்டது, வன்முறை தலை தூக்கியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ரயிலில் பிரயாணம் செய்தவர்கள் ரயில் பெட்டியோடு கொளுத்தப்பட்டனர். பிணங்கள் நிறைந்த ரயில்கள் தாம் வந்தடைந்தன.

இன்னொரு பிரச்னை, ஜம்மு காஷ்மீரில் கிளம்பியது. பாகிஸ்தான் பக்தூன் பழங்குடியினரைத் தூண்டி பாகிஸ்தான் ராணுவமும் கலந்து காஷ்மீரில் ஆக்கிரமிப்பு நடத்தியது. காஷ்மீரை ஆண்ட ராஜா ஹரி சிங் இந்தியாவோடு இணைவதாக அறிவித்த பிறகு, இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் படையெடுப்பை முறியடித்தனர். போர் நிறுத்தம் அறிவித்ததில் பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் சில பகுதிகளை மீட்க முடியவில்லை.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்பது ஒரே குடும்பத்தில் பாகப் பிரிவினை போன்றது. இந்தியா - பாகிஸ்தான் பாகப் பிரிவினை உடன்பாட்டின்படி இந்தியா பாகிஸ்தானுக்கு ரூ. 75 கோடி மதிப்பிட முடியாத சொத்துக்களுக்கான "ஓவல்டி' சொத்துரிமை சட்டப்படி ஈட்டுத்தொகையாகக் கொடுக்க வேண்டும். அதில் முதல் தவணையாக 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் போர் தொடுத்ததை அடுத்து மீதமுள்ள ரூ 55 கோடி "ஓவல்டி' தொகையைக் கொடுக்கக் கூடாது; அந்த பணம் இந்தியாவிற்கு எதிரான போரில் பாகிஸ்தான் செலவிடும் என்ற கருத்து வலுத்தது. ஆனால் மகாத்மா, "சுதந்திர இந்தியா தொடக்கத்திலேயே கடமை தவறக் கூடாது; நிலுவைத் தொகையைக் கொடுக்க வேண்டும்' என்பதை முன் வைத்து ஜனவரி 13, 1948 உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

பாகிஸ்தானிலிருந்து தில்லியைச் சுற்றி தஞ்சம் புகுந்த அகதிகளின் அவல நிலை, கோர நிகழ்வுகள் மத்தியில் அண்ணலின் உண்ணாவிரதம் அதற்கான காரணமும் மக்களிடம் எதிர்மறையான கருத்துகளை உருவாக்கின. ஆனால் காந்திஜி எதிர்ப்பை பொருட்படுத்தாது பிடிவாதமாக உண்ணாவிரதம் தொடர்ந்தார். வேறு வழியின்றி இந்தியா நிலுவைத் தொகையை விசேஷ விமானம் மூலம் திருப்பி அனுப்பிய பிறகு தான் காந்திஜி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மதக்கலவரம், காஷ்மீர் பிரச்னை , பாகிஸ்தானுடன் போர், அகதிகளுக்கு மறு வாழ்வு, இதனூடே அண்ணல் உண்ணாவிரதம், மத தீவிரவாதம் தலை தூக்க காரணங்களாயின. அதன் கோர முடிவாக உண்ணாவிரதத்தை முடித்த சில நாட்களுக்குள் காந்திஜி பயங்கரவாதியின் குண்டுக்கு இரையானார்.

"தனித்துச் செல், தனித்துவத்தோடு செல், "ஏக்த சலோ ரே' என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையைப் பிரபலமாக்கி அடிமையென்று துவண்டிருந்த இந்திய சமுதாயத்தை கிளர்ந்தெழ செய்த மாவீரன் நேதாஜி. 1897 - ஆம் வருடம் ஜனவரி 23 பிறந்த சுபாஷ்சந்திர போஸின் 125 ஜெயந்தியை இந்த வருடம் கொண்டாடுகிறோம்.

1938- ஆம் வருடம் குஜராத் ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி ஆதரித்த பட்டாபி சீத்தாராமைய்யாவை தோற்கடித்து தலைவரானார். அந்த அளவிற்கு நேதாஜிக்கு செல்வாக்கு இருந்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசிலிருந்து விலகி இந்திய தேசியப் படையை நிறுவி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்க வியூகம் வகுத்தார்.
பல இந்திய ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் சுதந்திர வேட்கையால் உந்தப்பட்டு நேதாஜியின் ஐஎன்ஏ- வில் சேர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஜப்பான் ராணுவத்தோடு இணைந்து போர் செய்தனர். ஒருமைப்பாடு, சமத்துவம் இந்த இரண்டும் உயர்வான நோக்கங்கள் என்ற வகையில் அதனை களத்தில் உறுதி செய்தார். அவர் கல்கத்தாவிலிருந்து தப்பியபோது பெஷாவரில் அவருக்கு இருப்பிடம் அளித்தவர் மியா அக்பர் ஷா.
ஐரோப்பாவிலிருந்து நீர் மூழ்கிக் கப்பலில் ஆசியாவிற்குப் பயணித்த போது நேதாஜியோடு இருந்த ஒரே இந்தியர் அபித் ஹசன். ஐஎன்ஏ- வின் முதல் டிவிஷனின் தளபதி முகமது சமான் ஜியானி. வட கிழக்கில் உள்ள
இம்பால் அருகில் முதல் மூவர்ணக் கொடியை ஏற்றியவர் ஐஎன்ஏ பிரிவைச் சேர்ந்த சொளகத் மாலிக். நமது
துரதிர்ஷ்டம், அவர் மர்மமான வகையில் விமான விபத்தால் உயிர் துறந்தார். அப்போது அவரோடு உடன் இருந்தவர் ஹபிபுல் ரெஹ்மான்.
ஐஎன்ஏ- வின் மூன்று இராணுவ அதிகாரிகள் குர்பக்ஸ் சிங் தில்லான் , ஷா நவாஸ் கான், ப்ரேம் குமார் செய்கல் ஆகியோர் 1946 - ஆம் வருடம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது, கொலை, தேசத்துரோகம் ஆகிய குற்றங்களைச் சொல்லி நீதிமன்ற விசாரணையை தில்லி செங்கோட்டை வளாகத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியது. செங்கோட்டை விசாரணைக்கு இந்திய மக்களின் எதிர்ப்பு வலுத்தது. விசாரணை முடிவில் நாடு கடத்தல் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் அரசு, மக்கள் எதிர்ப்புணர்வைக் கண்டு நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய நாட்டு விடுதலைக்கு எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள்! நேதாஜியின் 125 ஜெயந்தியை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஒன்றாக அவரது சிலையை தில்லி முக்கியமான பகுதியான இந்தியா கேட் வளாகத்தில் பாரத பிரதமர் திறந்து வைத்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அபிமான மக்கள் தலைவர் போஸ், தியாகிகளின் தளபதி!
ஷஹீத் பகத் சிங் பஞ்சாபியர்களுக்கே உரித்தான வீரமும் நெஞ்சில் உரமும் உடையவர். சுதந்திரப் போராட்டத்திற்காகத் தங்களை அர்ப்பணித்த குடும்பத்தில் பிறந்த பகத் சிங், சிறு வயதிலேயே பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் வழிகாட்டுதலில் முழுமையாகப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். மார்க்ஸிஸ்ட் சித்தாந்தம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. 1919- ஆம் வருடம் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்த இடத்தை பன்னிரண்டே வயது நிரம்பிய பகத் சிங் பார்த்து மனம் வெதும்பினார். ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1921 - இல் "இளைய புரட்சி' இயக்கத்தில் தன்னை இணத்துக் கொண்டு தாக்குதல் நடத்தி புரட்சி மூலமாகத் தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.
1928 - இல் லாகூரில் சைமன் கமிஷனுக்கு எதிராக அமைதி போராட்டம் நடத்திய லஜபதி ராய் தலைமையிலான பேரணியின்போது, காவல்துறையினர் கடுமையான லத்தி தாக்குதல் நடத்தினர். அதில் காயமுற்ற லஜபதி ராய் சிகிச்சை பலனின்றி இறந்தது லாகூரில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. 1928, டிசம்பர் பகத்சிங் தனது இயக்கத்தைச் சேர்ந்த சிவராம் தாக்கூர், சுகதேவ் உதவியோடு, லஜபதி ராய் மீது தாக்குதலுக்குக் காரணமாக இருந்த இரு காவல் அதிகாரிகளை சுட்டு வீழ்த்தினார். சில மாதங்களுக்குப்பிறகு ஏப்ரல் 1929- இல் தில்லி மத்திய சட்டமன்றத்தில் காலி இருக்கையில் குறைந்த சக்தி வெடி குண்டு வைத்து புரட்சிகர வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீசி அரசுக்கு எதிராக கோஷமிட்டு
சரணடைந்தார். கைது செய்யப்பட்டு இந்த வழக்கோடு, காவலதிகாரிகள் கொலை வழக்கையும் விசாரித்த நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
சிறைச்சாலையில் விடுதலைப் போராட்ட கைதிகளுக்கு கண்ணியமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். கருணை மனு கொடுத்தால் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம் என்பதை மறுத்து நாட்டுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார். ரஷ்ய நாட்டு புரட்சியாளர் லெனின் எழுதிய புத்தகத்தை கடைசி நாள் வரை படித்தார். இறப்பதற்கு முன் சிறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் தூய்மைப் பணியாளர் கையால் தயாரித்த உணவை கடைசி உணவாக உட்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றி 1931 மார்ச் 23 - ஆம் நாள், அமைதியாக மரணத்தை தழுவினார், இருபத்து மூன்றே வயதான பகத் சிங்! நாட்டின் மிக சிறந்த சமூக நீதி மேவிய சுதந்திர போராட்ட தியாகியாக போற்றப்படுகிறார்.

1857 - இல் வெடித்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுத்த முதல் பெண் ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் என்று இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுத்த வீர மங்கை சிவகங்கை ராணி வேலு நாச்சியார் என்பதை நமது இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இராமநாதபுர சமஸ்தான சேதுபதி ராஜாவின் செல்ல மகள் நாச்சியார் வாள் வீச்சு, சிலம்பம், களரி, குதிரையேற்றம் கற்றறிந்தது மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச், உருது ஆகிய ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றார். சிவங்கை அரசர் வடுகநாத தேவரை தனது 16- ஆவது வயதில் மணமுடித்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினருடன் 1772- இல் நடந்த போரில் தேவர் உயிரிழந்தார். வேலு நாச்சியார் தப்பித்து மறைமுகமாக ஆட்சியைக் கைப்பற்ற வியூகம் வகுத்தார். ஹைதர் அலியைச் சந்தித்து தனது உருது புலமையை வைத்து வாதிட்டு அவரது ஒத்துழைப்பைப் பெற்றார். எட்டு வருடங்கள் திட்டமிட்டு திப்பு சுல்தானின் 5000 வீரர்கள், மருது சகோதரர்கள், தலித் படை தளபதிகள், சிவகங்கை பிரதானி தாண்டவராயன் பிள்ளை உதவியோடு பிரிட்டிஷ் படையை வென்றார். நாச்சியாரின் படைத் தளபதி குயிலி, பிரிட்டிஷ் படையின் ஆயுதக் கிடங்கை ரகசியமாகக் கண்காணித்து தற்கொலை தாக்குதல் நடத்தியது போரில் திருப்பு முனையாக வெற்றியைக் கொடுத்தது. வீரமங்கை வேலு நாச்சியார் 1780 - இலிருந்து பத்து ஆண்டுகள் சிவகங்கை ராணியாக கோலோச்சினார். ஆங்கிலேயருக்கு எதிராக முதலில் போர் தொடுத்து வெற்றி பெற்ற ஒரே ராணி வீரமங்கை வேலு நாச்சியார்.
தியாகிகள் இறப்பால் அல்ல, அவர்கள் போராடிய உயர்வான நோக்கத்தால் தியாகிகள் ஆகிறார்கள். தியாகிகளால் தான் சரித்திரம் படைக்கப்படுகிறது! தியாகிகளுக்கு தலையே நீ வணங்கு!

சென்ற வாரக் கேள்விக்கு பதில்;
அமேசான் நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவில் வாஷிங்டன் சியாட்டல். 1994 - ஆம் வருடம் ஜெஃப் பிசோஸ் என்பவரால் நிறுவப்பட்டது
இந்த வாரக் கேள்வி: வேலு நாச்சியார் மணி மண்டபம் எப்போது யாரால் நிறுவப்பட்டது?

(விடை அடுத்த வாரம்)

கட்டுரையாளர்: மேனாள் காவல்துறைத்தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.