வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே! - 35: வானளாவிய இணைய தளம்!

1963இல் வெளியான "ரத்த திலகம்' படத்தில் சிவாஜி கணேசன் கல்லூரி மாணவனாக துடிப்போடு பாடுவார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:20 am

ஆர். நட​ராஜ்

பசுமை நிறைந்த நினைவுகளே 
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே 
பறந்து செல்கின்றோம்!

1963இல் வெளியான "ரத்த திலகம்' படத்தில் சிவாஜி கணேசன் கல்லூரி மாணவனாக துடிப்போடு பாடுவார். கல்லூரியிலிருந்து விடைபெறும் கடைசி நாள் விழாவில் ஆடல், பாடல் காட்சி! எல்லாக் கல்லூரிகளிலும் பட்டப் படிப்பு நிறைவேறும் நிகழ்ச்சியில் இந்த  பாடல் தவறாமல் ஒலிக்கும். 

பறவைகள் போலத்தான் இப்போது இளைஞர்கள்  வேலை தேடி அங்கும் இங்கும் அலைய வேண்டியிருக்கிறது. பறவைகள் திட்டமிட்டு ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணிக்கின்றன. கடவுள் சிருஷ்டியில் பறவை இனத்தின் ஒற்றுமை, ஒழுக்கம், இயற்கையோடு ஒன்றி வாழும் பாங்கு, கூடு கட்டுவது, இன சேர்க்கை, குஞ்சு பொரிப்பது எல்லாமே திட்டமிட்டு நடப்பது ஆச்சரியத்திற்குரியது.

"காட்விட்' என்ற பறவை, அலாஸ்காவிலிருந்து நியூசிலாந்து வரை மொத்தம் சுமார் 12000 கி.மீட்டர் தூரத்தை பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து பறந்து உலக ரெகார்ட் படைத்திருக்கிறது! என்ன ஒரு வைராக்யம்! அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு மீண்டும் திரும்பும் பயணம். திரும்புகையில் சில வாரங்கள் சைனாவில் தங்கிவிட்டு அலாஸ்கா வந்தடையும். 

சிலர் இவ்வாறு பயனுள்ள வகையில் இடம் மாறுகிறார்கள்; சாதனை படைக்கிறார்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் முயற்சி செய்து," மெய்வருத்தம் கூலி தரும்' என்று சந்தோஷமாக வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்து, நல்ல உணர்வுடன் பயணிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

காட்விட் பறவை காற்று வீசும் திசையைக் கணித்து அப்படியே அதன் வேகத்தில் மிதந்து செல்வதால், அதனால் குறைந்த நாட்களில் அதிக தூரம் கடக்க முடிகிறது. அது போல் இளைஞர்களும் தற்போது எந்த மாதிரி வேலைகளுக்குத் தேவை இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தெரிவு செய்து,   தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

2020 இலிருந்து கரோனா தொற்று பரவியதில் தொழில்கள் முடங்கின. பலருக்கு வேலை போனது. பொருளாதாரச் சரிவு என்று தொடர் பிரச்னைகள் உலகை உலுக்கின. பொருளாதாரச் சரிவை சரி செய்ய பணப்புழக்கத்தை அமெரிக்கா அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட  வருமானத்துக்கு குறைவாக வாங்கியவர்களின் வேலையில்லா நிலையை ஈடுகட்ட அரசு மானியமாக பணம் வழங்கியது. அது வீடு தேடி வந்தது. அதற்கு அதிகமாக டாலர் நோட்டுகள் அச்சிட வேண்டியிருந்தது. வங்கிகளும் பெரிய நிறுவனங்கள் தங்கள் மூலதனச் செலவைப் பெருக்குவதற்கு பணவுதவி அளித்தது. இதைத்  தொடர்ந்து நிறுவனங்களின் சொத்துகளின் மதிப்பு கூடியது. 

கஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் தங்கள் கடன் சுமையைக் குறைத்து இயல்பு நிலைக்குத் திரும்பின. பல நிறுவனங்கள் சொத்து மதிப்புக் கூட்டலை வைத்து தொழில் விரிவாக்கத்திற்கு முதலீடு செய்ததில் வேலைவாய்ப்பு அதிகரித்தது.

மக்கள் வேலை செய்து சம்பாதித்தால் அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.  அதனால் உற்பத்தி பெருகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த சுழற்சி, பொருளாதாரத்தை நிலை நிறுத்தும். இந்த நல்ல சூழலை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உபாயம் பல உண்டு.

இப்போது கரோனா பிரச்னையால் வீட்டிலிருந்து  பணி செய்ய வேண்டிய  கட்டாயம் வந்துள்ளது. 

முன்பெல்லாம் சில தவிர்க்க முடியாத நேர்வுகளில் வீட்டிலிருந்து பணி செய்ய சிலருக்குத்தான் நிறுவனங்கள் அனுமதி அளித்தன. ஆனால் கரோனா தொற்றால் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே பணி செய்யவேண்டும் என்ற நிர்பந்தம்! இது நன்மையா அல்லது பாதிப்பா என்பது கேள்விக்குரியது.

எல்லாப் பணிகளையும் வீட்டிலிருந்தே செய்ய முடியாது. கனரகத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள்  பட்டறைக்குச் சென்றுதான் பணியாற்ற  முடியும். ஐடி நிறுவனங்களுக்கு இந்தப் பிரச்னையில்லை. இணையதளம் மூலம் பணிகளைச் செய்து முடிக்கலாம். இதனால் ஐடி நிறுவனங்களுக்கும் ஆதாயம். அலுவலகக் கட்டமைப்பு, அதற்கான வாடகை, இத்தியாதி செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். இதையே நிரந்தரமாக நடைமுறைப்படுத்தவும் பல நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பணியாளர்களுக்கும் நன்மை, நிறுவனத்திற்கும் வருவாய். செலவு குறையும், லாபம் ஈட்டல் அதிகரிக்கும். கரோனா தொற்றால் எதிர்பாராது வந்த பயன்!

இப்போது இ காமர்ஸ், இணையதள வர்த்தகம் இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் அதிகமாக ஐடி நிறுவனங்களுக்கு தங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்பாடுகளை விரிவாக்கவும், பல்வகைப்படுத்தவும் அரிய வாய்ப்பு வந்துள்ளது. அதற்கு கணினி மென்பொருளில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி தொழில் நுட்பத்தை நம்பியிருக்கும் பல நிறுவனங்களில் தேவையான அளவிற்கு வேலைக்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. படித்துவிட்டு வேலை கிடைக்காது தவிப்பவர்கள் ஒருபுறம், அதே சமயம் மறுபுறம் தகுந்த பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு பற்றாக்குறை என்ற நிலை உள்ளது. இதற்கு ஒரே தீர்வு இளைஞர்கள் நிறுவனங்களது தேவைகளைப் புரிந்து கொண்டு தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். 

"க்ளவ்ட்' கம்ப்யூட்டிங் என்ற தொழில் நுட்பம் ஐ டி உலகில் மிக பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எந்த ஒரு நிறுவனமும் தங்கள் விரிவாக்கத்திற்கு தேவையான சர்வர், ஹார்ட் டிஸ்க், மென்பொருள் வாங்க வேண்டியதில்லை. அவற்றை க்ளவ்ட் மூலம் இணைந்து உபயோகித்துக் கொள்ளலாம். 1900  களில் தொழிற்சாலைக்கு மின்சாரம் தேவை என்றால் அவர்களே மின்சாரம் தயாரிக்கும் தளத்தை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்து தன் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. பிறகு தான் பொதுவாக மின்சாரம் தயாரிக்கும் தளங்கள் அமைக்கப்பட்டு, தேவையான மின்சாரம் வாங்கிக்  கொள்ளலாம் என்பது ஏற்பட்டு தொழிற்சாலைகளின் கட்டமைப்பு செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. அதுபோல் தான் க்ளவ்ட் கம்ப்யூட்டிங்கும். தங்களுக்குத் தேவையான தரவு சேமிப்பு, ஹார்ட் டிஸ்க், சர்வர்ஸ் தகவல் சேமிப்புக் கிடங்கில் இருக்கும். இம்மாதிரியான சேமிப்புக் கிடங்கு பல நாடுகளில் இருக்கும். பாதுகாப்பாக பேணப்படும். எப்போது வேண்டுமானாலும் எந்த நாட்டிலிருந்தும் உபயோகதாரர் அணுகலாம். 

இயற்கை சீற்றத்தில் அதிக மழை, இடி, மின்னல் சமீப வருடங்களாக அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பல கட்டடங்களில் மழை நீர் சூழ்ந்து அலுவலக உபகரணங்கள் பாழடைகின்றன. மின்சார அழுத்தம் அதிகம் வேறுபடும் காரணத்தால் கம்ப்யூட்டர், சர்வர் பாழடைகின்றது. ஹார்ட் டிஸ்க் செயலிழந்து நிறுவனத்தின் முக்கியமான தரவுகள் சிதிலமடைய வாய்ப்புள்ளது. க்ளவ்ட் கம்ப்யூட்டிங்கில் இந்த பிரச்னை இல்லை. கம்பெனியின் எல்லாத் தகவல்களும் தகவல் கிடங்கில் பாதுகாப்பாக இருக்கும். 

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலிடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம், இம்மாதிரியான டேட்டா மையங்களை நடத்தி க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதி அளிக்கும் வர்த்தகத்தில் 32% தன் வசம் வைத்துள்ளது. அடுத்து அசூர் நிறுவனம் 20% , கூகுள் 9% . தேவைக்கேற்றவாறு மின்சாரம் உபயோகிப்பது போல் கம்ப்யூட்டிங் தேவையும் மாறுபடும். அதற்கேற்றவாறு க்ளவ்ட் மையத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம். செலவு மிச்சம். பராமரிப்புத் தொந்தரவு இல்லை. அமேசான் நிறுவனம் உலகில் பல நாடுகளில் இம்மாதிரியான டேட்டா கிடங்குகளை 248 இடங்களில்  வைத்துள்ளது. அமேசான் வெப் சேவைகள் (ஏடபிள்யூஎஸ்) வாடிக்கையாளர்  நிறுவனங்களின் தகவல்களைக் குறைந்த செலவில் பாதுகாப்பாக பராமரிக்கிறது.

இணையதள சேவைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு பட்டப்படிப்பு அவசியமில்லை. குறிப்பிட்ட மென்பொருள் பற்றிய பரிச்சயம், கம்ப்யூட்டர் கோடிங்க் செய்வதில் ஓரளவு பயிற்சி இருந்தால் போதும். இணையதளத்தில் இத்தகைய படிப்பிற்கு பல ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த செலவில் நடத்தப்படுகின்றன. அந்த பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழும் அளிக்கிறார்கள்.

வேலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும், பதவி உயர்விற்கும் பல உயர் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வீட்டிலிருந்தவாறு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். பல பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. 

அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற  எம்ஐடி, ஜார்ஜியா டெக் போன்ற பல்கலைக்கழகங்கள் இணையதள கல்வி வசதியை அளிக்கின்றன. கடந்த மூன்று வருடங்களில் உலகில் சுமார் இரண்டரை கோடி மக்கள் இத்தகைய ஆன்லைன் வகுப்புகளில் அறிவை விருத்தி செய்ய இணைந்திருக்கிறார்கள். பல ஆன்லைன் வகுப்புகள் கட்டணம் இல்லாதவை. தேவையான, தனக்குப் பிடித்த கல்வியைப் பெறலாம். பாடத்திட்ட கட்டுப்பாடுகள் இல்லை. இணையதளம் தரும் அரிய வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்.

உலக வர்த்தக பங்குச் சந்தையை நன்றாக ஆராய்ந்து நாட்டுக்கு நாடு ஒரே பங்கின்  விலையில் வித்தியாசம் இருப்பதைக் கணக்கில் வைத்து குறைவான அமெரிக்கச் சந்தையில் பங்கை வாங்குவது, லாபமாக இருக்கும் ஜப்பான் சந்தையில் விற்பது என்பதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து அமெரிக்க இளைஞர் சாம் பாங்க்மேன் ப்ரீட்  கோடிஸ்வரராகிவிட்டார்! பணக்காரனாக ஆக வேண்டும் என்பது தனது கனவு என்றும் அதற்குக் காரணம் அந்த பணத்தை வைத்து தானம் செய்வது, பொது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது போன்றவற்றில், சம்பாதித்த பணத்தை சமுதாயத்திற்கு திரும்ப அளிப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளார். எஃப் டி எக்ஸ் என்ற டிஜிட்டல் செலவாணி வர்த்தக மையத்தை உருவாக்கியுள்ளார். இந்த தளத்தில் "க்ரிப்டோ கரன்சி' உட்பட பல டிஜிட்டல் சொத்துகளைப் பரிமாற்றம் செய்யலாம். இவரது கம்பெனியின் சொத்து நாற்பது பில்லியன் டாலர், சாம் வயது முப்பது  தான்! மிகவும் எளிமையாக வாழ்கிறார். விலை குறைந்த ஒரு கார் சாதாரண வீட்டில் வசிக்கிறார். இதுவரை 500 மில்லியன் டாலர் தானமாக அளித்துள்ளார். பணம் நல்லவர்களிடம் சேர்ந்தால் உலகுக்கு நல்லது என்பது இவரது  பண்பு ஒரு எடுத்துக்காட்டு.

மென்பொருள் மூலம் இன்னொரு சாதனை 3 டி ப்ரிண்டர் வழியே கட்டுமான வேலைகளை எளிமையாக்குவதற்கான முயற்சி. மூன்று ஐஐடி சென்னை பொறியாளர்கள்ஆதித்யா, பரிவர்த்தன், வித்யா சங்கர், 3 டி பிரிண்டர் தொழில் நுட்பத்தைக் கையாண்டு சிமெண்ட் மண் கலவையை அளவோடு போட்டு வலுவான கட்டடம் கட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இருபத்தியொரு நாட்களில் 2000 சதுர அடி வீடு ஒன்றைக் கட்டி முடித்துள்ளார்கள். இதற்கான செலவு வெறும் ரூ. 5 லட்சம் மட்டுமே என்பது ஆச்சரியமூட்டும் சாதனை! வேறு எந்த விதத்திலும் கட்டுமான பொருள் சேதாரம் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்குப் பாதிப்பு கிடையாது என்பது கூடுதல் நன்மை.

உலகில் அடுத்த பத்து வருடங்களில் மூன்று பில்லியன் வீடுகள் தேவைப்படும். இந்தியாவில் மட்டும் தற்போது 6.3 கோடி நகர் மற்றும் கிராமப்புறத்தில் வாழும் மக்களுக்கு சரியான வீடுகள் இல்லை. விரைவாக அவர்களுக்கு  வீடு கட்டுவதற்கு இம்மாதிரியான  நூதன தொழில் நுட்பம் அவசியம்.

இணையதள தொழில் நுட்பம் அழைக்கிறது. இணையுங்கள் இளைஞர்களே!
சென்ற வாரக் கேள்விக்கு பதில்: இந்திய அரசமை சாசனத்திற்கு ஒப்புதல் அளித்த நாள் நவம்பர் 26. "சம்விதான் திவஸ்' அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வாரக் கேள்வி: அமேசான் நிறுவனத்தின் தலைமையிடம் எது?

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.