நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கரோனா... வேலையின்மை... புதிய தீர்வு!

உலக அளவில் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கரோனா பெருந்தொற்று புரட்டிப்போட்டுள்ளது. இதற்கு வேலைவாய்ப்பும் விதிவிலக்கல்ல.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:05 am

ந.முத்துமணி

உலக அளவில் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கரோனா பெருந்தொற்று புரட்டிப்போட்டுள்ளது. இதற்கு வேலைவாய்ப்பும் விதிவிலக்கல்ல. 2020-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் 8.7 சத இளைஞர்கள் வேலையை இழந்துள்ளனர். இடைநிலை வயதினர் 3.7 சதம் மட்டுமே வேலையை இழந்துள்ளனர். இடைநிலை வயதினருடன் ஒப்பிடுகையில் பொருளாதார விளைவுகளால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. பெருந்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் வேலையின்மைப் பிரச்னையை நாம் சரியாகக் கையாளத் தவறிவிட்டால், அது அடுத்த 10 ஆண்டுகளுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்றும்  இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) கவலை தெரிவித்துள்ளது.

ஆழமான பாதிப்பு:

2020-ஆம் ஆண்டில்  உலகப் பொருளாதாரம் அடைந்துள்ள சிதைவு, 2009-ஆம் ஆண்டில் ஏற்பட்டதைவிட மிகவும் மோசமானதாகும். உலக பொருளாதாரத்தில் ஆழமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை உணர தவறக் கூடாது. இதன் தீயவிளைவுகளை உலக நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் சார்ந்த ஆவணங்களைத் திரட்ட தொடங்கிய காலம் தொட்டு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் அதிகபட்சமாக 14.8 சத வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.   

2020-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பெரும்பாலான நாடுகளில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பரவலாக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் உற்பத்திவிகிதம் 2.2 சதம் குறைந்தால், முன்னேறிய பொருளாதாரங்களில் 4.7 சதமாக சரிந்துள்ளது என்று ஐ.எல்.ஓ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கரோனா பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் 25.5 கோடி முழுநேர வேலைக்கு நிகரான வேலைநேரம் காணாமல் போயுள்ளது.  

58 நாடுகளில் எடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் 11.2 சதம் இளைஞர்கள், 13.9 சத இளம்பெண்கள் வேலை இழந்துள்ளனர்.  

தீர்வுதான் என்ன? 

பெருந்தொற்று காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர் என்றாலும், பலபேர் வேலைச்சந்தையில் இருந்தே காணாமல் போய் இருக்கின்றனர். பொதுமுடக்கத்தால் ஒரு தொழிற்சாலை மூடப்பட்டது மட்டுமல்ல, குறிப்பிட்ட தொழில் துறையே முடங்கிவிட்டது. சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் தொழில்கள், பொதுமுடக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டதோடு, பல நாடுகளில் அத்துறைகள் முடங்கியுள்ளன. விளிம்புநிலை வேலையில் ஈடுபட்டிருப்போரின் வருவாய் வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டன. இதுமட்டுமல்லாது, பெரும்பாலான இளைஞர்களின் கல்வி மற்றும் பயிற்சி முழுமையாக முடங்கியதால், அவர்களின் கூடுதல் வருவாய் வாய்ப்பும் நின்றுவிட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு வேலை இழந்த இளைஞர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வேலை இழந்த இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்க ஒரேவிதமான அணுகுமுறை அல்லது தீர்வுகளை முன்வைப்பது சரியான திட்டமாக இருக்காது என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவிக்கிறது.  வேலைவாய்ப்பை உருவாக்க   பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு சில வழிகளைப் பரிந்துரைக்கிறது. அவை என்ன? 

கல்வி மற்றும் பயிற்சி:

திறன்குறைபாடு காரணமாக வேலை இழப்புக்கு ஆளாக நேர்ந்திருந்தால், அந்த குறையைப் போக்க கல்வி மற்றும் பயிற்சியை அளிப்பது  நல்லது. திறன்மேம்பாட்டுக்கு ஊக்கம் அளிப்பது அவசியமாகும்.

மறுவேலை திட்டம்:

வேலையிழந்த இளைஞர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு வேலைவாய்ப்பு முகாம்கள், தொழில்முனைவு திட்டங்களை வகுத்து, அதன் மூலம் மீண்டும் வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள இளைஞர்களை தயார்ப்படுத்தவேண்டும். வேலையில்லாமல் இளைஞர்களை முடக்கிவிடக்கூடாது.

சமூக பாதுகாப்பு திட்டங்கள்:

முறைசாரா வழிமுறைகள் மூலம் பணம் திரட்டும் வாய்ப்புகளை நாடும் இளைஞர்களை முறைசார் பொருளாதாரத்தின் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும். வேலை இழந்த இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் வாயிலாக உதவித் தொகையை வழங்கலாம்.

தொழிலாளர் நலன்காத்தல்:

வேலையிடங்களில் இளைஞர்களின் குரல்கள் ஒலிப்பதற்கான சூழ்நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுகூடி அமைப்பாக திரள்வதற்கும், அதன் மூலம் சலுகைகளைப் பெறுவதற்கும் வாய்ப்பளிக்கவேண்டும். தொழிலாளர் நலனுக்காக அரசு, நிறுவனம், தொழிற்சங்கம், தொழிலாளர்கள் கூட்டாக செயல்படுவதை ஊக்குவிக்க வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.