ஊரகச் சுற்றுலா... வேலைவாய்ப்புகள்!
பன்முக மொழி, கலை, கலாசாரம் கொண்ட இந்தியாவில் சுற்றுலாத் தொழில் அல்லது விருந்தோம்பல் தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கரோனா பெருந்தொற்று சுற்றுலா வாய்ப்புகளை முடக்கியுள்ளது.


பன்முக மொழி, கலை, கலாசாரம் கொண்ட இந்தியாவில் சுற்றுலாத் தொழில் அல்லது விருந்தோம்பல் தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கரோனா பெருந்தொற்று சுற்றுலா வாய்ப்புகளை முடக்கியுள்ளது. குறிப்பாக நகர்ப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, கிராமப்புற சுற்றுலாவுக்கு புதியவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கு வதற்கு கிராமச் சுற்றுலா பெரும் உதவியாக இருக்கும்.
பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தொழிலை புதுப்பிக்கவும் இது வாய்ப்பாக அமையும். கிராமச் சுற்றுலா மேம்படுவதால், கிராம மொழியாடல்கள், கலைகள், கலாசாரங்கள்,உணவுப் பழக்க வழக்கங்கள் காக்கப்படும். ஊரகப்
பகுதிகளில் வருமானத்தைப் பெருக்கவும் சுற்றுலாத்தொழில் கைகொடுக்கும். சுற்றுலாத்தொழிலில் ஈடுபடுவதற்குஉள்ளூர் மக்களுக்கு திறன் பயிற்சி அளிப்பது, அங்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கும். ஊரகச் சுற்றுலாவில் உள்ளூர்மக்கள் சுற்றுலா வழிகாட்டியாக, வாகன ஓட்டுநர்களாக, சமையல் செய்பவர்களாக, தூய்மைப்பணியாளராக, விருந்தோம்பல், நிகழ்வு நடத்துநராக என பல்வேறுவேலைவாய்ப்புகளைப் பெறமுடியும். கலைகளைக் காப்பாற்றுவது மட்டுமல்ல, கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பங்கேற்பது எப்படி?
கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தொழிலைப் புதுப்பிக்க ஊரகச் சுற்றுலா முழுமையாகதீர்வாகிவிடும் அல்லது அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான வேலைவாய்ப்புகளை அளிக்கும் என்று கூறிவிட முடியாது.
மக்கள் ஈடுபாட்டுடன் வளர்ச்சிகளைச் சாத்தியமாக்குவதற்கு ஊரகச் சுற்றுலாவை ஊக்கப்படுத்தினால், அது அந்த கிராமப்பகுதிகளுக்கு நிலையான பயன்களை அளிக்கும்.
ஊரகச் சுற்றுலாவை நடைமுறையில் எப்படி நடத்துவது? எப்படி மேம்படுத்துவது?
வீட்டுவிடுதி (ஹோம் ஸ்டே), வேளாண்சுற்றுலா, சமூக அடிப்படையிலான சுற்றுலா, கிராமச் சுற்றுலா வாயிலாகஊரகச் சுற்றுலாவை மேம்படுத்த இயலும். இதில் சுற்றுலாத்தொழிலில் ஆர்வமுள்ள புதியவர்கள், ஏற்கெனவே ஈடுபட்டுள்ளோர் பங்காற்றலாம்.
இத்தொழிலில் அனுபவம் இல்லாதவர்களுக்கு மத்திய சுற்றுலாத்துறை,"திறமை முதல் வேலைவாய்ப்புவரை' என்ற திட்டத்தை செயல்படுத்தி, உணவு உற்பத்தி, விடுதிப் பராமரிப்பு, அடுமனை, பேஸ்ட்ரீஸ் மற்றும் கேக் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்து வருகிறது. இவை தவிர, ரயில் சுற்றுலாப்பயணி மெய்க்காவலர், சுற்றுலாப்பயணிக்கு உதவியாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள், சுற்றுலா உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வீட்டுவிடுதி: சுற்றுலாத்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுடன் தனது வீட்டை விடுதியாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் விருந்தோம்பல் சேவை தான் வீட்டுவிடுதி. அந்த ஊரகப்பகுதிகளில் சமுதாயத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரடியாக அனுபவித்து உணர்வதற்கு வீட்டுவிடுதி உதவியாக இருக்கும். ஊரகப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுவதோடு, வேளாண் நடவடிக்கைகளையும் நேரடியாகப் பார்த்துணரமுடியும். உள்ளூர்கிராமப் பஞ்சாயத்து மற்றும் சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்புடன் கிராமப்பகுதிகளில் இருப்போர் வீட்டுவிடுதியைஅமைக்கலாம்.
வேளாண் சுற்றுலா:
விவசாயிகளின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்வதற்கு வேளாண்சுற்றுலா பயன் தரும். சுற்றுலாப் பயணிகள் விவசாயிகளுடன் தங்கி வேளாண் நடவடிக்கைகளை அனுபவிக்க முடியும். கிராமங்களில் வாழும் விவசாயிகள் பயிடுதல், கால்நடை மேய்ச்சல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவற்றில் ஈடுபட்டு அதன் அனுபவங்களைப் பெற சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக இருப்பார்கள். விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்து வரும் மாம்பழம், திராட்சைப்பழம் ஆகிய பொருட்களை சுற்றுலாப்பயணிகளிடம் விற்கலாம். கிராமப்புறங்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்து, அப்பகுதியில் நடந்துவரும் வேளாண் நடவடிக்கைகளைசுற்றுலாப்பயணிகளுக்கு சுற்றிக் காட்டலாம்.
சமூகம் அடிப்படையிலான சுற்றுலா:
பொதுவாக கிராமங்களில் வேளாண்மை, கால்நடை மேய்ச்சல் மட்டுமல்ல பட்டு, கைவினைப் பொருள்கள் தயாரித்தல், வெல்லம் தயாரித்தல், கயிறு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபடுவார்கள். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும். பானை செய்தல், ஆடை நெய்தல், கைவினை போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகளை ஈடுபடுத்தலாம். குறிப்பாக உள்ளூரில் கிடைக்கும் புதுமையானவற்றை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக இருப்பார்கள். இதன்மூலம் கிராமத்தின் பண்பாடு, கலாசாரம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இயலும். மேலும் பெண்கள், கலைஞர்கள், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரலாம்.
கிராமச் சுற்றுலா:
சுற்றுலாத்தலங்கள், தங்குவதற்கு சிறப்பான விடுதிகள், குதூகலம் ஏற்படும் புதுமையான நடவடிக்கைகள் கிராமங்களில் கிடைத்தால் அதை கிராமச் சுற்றுலா என்றழைக்கலாம். இதில் இருந்து கிடைக்கும் வருவாய், பரவலாக்கப்படும்போது அது சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும். கிராமங்களை சுற்றுலாத்தலங்களாக மேம்படுத்தும்போது, ஊரகச் சுற்றுலா செழிக்கும்.
நகரங்களில் வாழ்வோருக்கு கிராமப்புற வாழ்க்கையை அனுபவிக்கும் ஆர்வத்தை சுற்றுலாவாக மாற்றும்போது அது கிராமப்புறங்களின் கலாசாரத்தை அறிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இந்தியாவின் அடித்தட்டு பண்பாட்டை பரவலாக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கிராமப் பண்பாட்டை கண்டுணர உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அதிக ஆர்வத் தூண்ட வாய்ப்பு ஏற்படுகிறது.
புதிய புதிய இடங்களைக் காண்பதும், புதிய புதிய அனுபவங்களைப் பெறுவதும் சுற்றுலாவின் முக்கியமான அம்சமாகும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் கிராமப்புற பண்பாட்டை அறிந்து கொள்ள அதீத ஆர்வம் இருப்பது ஊரக சுற்றுலாவின் வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...